Published : 15 Aug 2019 10:47 AM
Last Updated : 15 Aug 2019 10:47 AM

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டம்; மக்கள் என்ன செய்யவேண்டும்?

கிராமங்கள் நாட்டின் முதுகெலும்புகள் - காந்தி

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதால், அதிக அளவிலான மக்கள் கலந்துகொண்டு கிராம வளர்ச்சிப் பணிகளை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

தமிழகத்தில் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 4 நாட்கள் கட்டாயமாக கிராம சபைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று (ஆக. 15) சுதந்திர தினத்தன்று கோவையில் உள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

காந்தியடிகள் வலியுறுத்திய பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை வலுப்படுத்த, அன்றைய தினம் நடக்கும் கிராம சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதும் நம் கடமை. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் கிராமங்களில் அடிப்படைப் பணிகள் தொடங்கி பொருளாதாரம் வரை நிலை குலைந்து போயிருக்கிறது. இந்தச் சூழலில் நாளைய கிராம சபைக் கூட்டத்தில் நாம் கலந்துகொண்டு என்ன செய்ய வேண்டும்?

கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் வழக்கமாக கிராம சபை கூடும் இடத்தில் திரண்டு, காலை 10 மணிக்குக் கூட்டம் நடத்தவில்லை என்றால், அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். அப்படியும் யாரும் வராவிட்டால், மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொள்ளலாம்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லை என்பதால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்பார்வையில் கிராமப் பஞ்சாயத்தின் செயலர்கள் கிராம சபைக் கூட்டத்தை முன்னின்று நடத்துவர். முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர்கள், ஊர்ப்பெரியவர்கள், ஊர் பிரச்சினைகளை முன்னின்று எடுத்துச் செல்லும் இளைஞர்கள் யாரேனும் தலைமை ஏற்கலாம். இந்த முறை பல ஊராட்சிகளிலும் இளைஞர்கள் திரளாகப் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.

தீர்மானத்தை நிறைவேற்றுவது எப்படி?

கிராமத்தின் வளர்ச்சிக்கு ஆதரவாக பொதுமக்கள் ஒன்றிணைந்து தீர்மானங்களை நிறைவேற்றலாம். 500 பேர் மக்கள்தொகை கொண்ட கிராமப் பஞ்சாயத்து எனில் தீர்மானத்தை நிறைவேற்ற 50 பேரின் கையெழுத்து தேவை. 501 முதல் 3,000 பேர் வரை இருந்தால் 100 பேரின் கையெழுத்தும், 3,001 முதல் 10,000 பேர் வரை 200 பேரின் கையெழுத்தும், 10,000-க்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட பஞ்சாயத்து எனில் 300 பேரின் கையெழுத்தும் தேவை.

மக்கள் என்ன செய்ய வேண்டும்?

தீர்மானம் தவிர அரசு செய்த வரவு - செலவுக் கணக்குகளை மக்கள் பார்வையிட வேண்டும். கேள்விகள் கேட்க வேண்டும். நாளை நடைபெறும் கூட்டத்தில், ஊராட்சியில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க, கழிவுநீர், குப்பை கொட்டப்படுவதைத் தடுப்பது, அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் கழிப்பறைகளைப் பராமரித்தல், சுத்தம் செய்தல், தண்ணீர் வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்துக் கேள்வி கேட்கலாம்.

கிராம சபை மூலம் பெறப்பட்ட திட்டப் பணிகள், அதுகுறித்த ஆலோசனை தொடர்பான பணிகளை ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 2-க்குள் நிறைவேற்ற வேண்டும். டிசம்பர் 30-க்குள் சிறப்பு கிராம சபைகளைக் கூட்டி பணிகளை அங்கீகரிப்பது, தீர்மானங்களை ஒன்றியத்துக்கு அனுப்புவது, அதை ஒன்றியங்கள் பரிசீலித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்புவது, ஆண்டு திட்டப் பணிகள் அறிக்கை, ஊதிய நிதிநிலை அறிக்கை அந்தந்த கிராமப் பஞ்சாயத்துகள் மூலம் படிப்படியாக மத்திய அரசு வரை அனுப்பப்பட்டு, மார்ச் 31-க்குள் மேற்கண்ட அனைத்துக்கும் மாநில அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஏப்ரல் 7-க்குள் பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மக்கள் சக்தி அறிவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x