Published : 15 Aug 2019 09:50 AM
Last Updated : 15 Aug 2019 09:50 AM

சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வாரியம் சார்பில் ரூ.122 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை

சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம், நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் சார்பில் ரூ.122 கோடியில் முடிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை பெருநகர் பகுதியின் தற் போதைய மற்றும் எதிர்கால தேவைக் கேற்ப, பாதுகாப்பான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று சேவைகளை அளிக்கும் வகையில், தற்போதுள்ள உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன. அந்த வகையில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில், சென்னை திருவொற்றியூர் மண்டலம், கத்திவாக்கத்தில் ரூ.86 கோடியே 15 லட்சம் மதிப்பில் முடிந்த, பாதாள சாக்கடை திட்டத்தை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

சென்னை பெருநகர மாநகராட்சி கட்டிடங்களின் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி தகடுகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக ரூ.24 கோடியே 3 லட்சம் மதிப்பில் தினசரி 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் யூனிட் வரை மின் உற்பத்தி செய்யும் வகையிலும், ஆண்டுக்கு ரூ.3 கோடி மின் கட்டணத்தை சேமிக்கும் வகையில், அம்மா மாளிகை, மண்டல அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் உட்பட 662 மாநகராட்சி கட்டிடங்களில் அமைக் கப்பட்டுள்ள 3,064 மெகாவாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின் தகடுகள் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் சலவையாளர்களுக்கு மூன்றாம் கட்டமாக ரூ.3 கோடியே 10 லட்சம் மதிப்பில் ஓய்வறைகள், சலவை அறைகள், தேய்ப் பறைகள் மற்றும் உலர்த்தும் அறைகள், சென்னை போரூர் சக்தி நகர் பிரதான சாலை, நெற்குன்றம் பெருமாள் கோயில் தெரு ஆகிய இடங்களில் ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பில் 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

ராமாபுரம் பஜனை கோயில் தெருவில் ரூ.1 கோடியே 99 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையம், வார்டு அலுவலக கட்டிடம், பெருங்குடி அண்ணா நெடுஞ் சாலையில் ரூ.2 கோடியே 39 லட்சம் மதிப்பில் 5,000 சதுர மீட்டர் பரப்பில் பல்வேறு வசதிகளுடன் பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நகராட்சி நிர்வாகம் சார்பில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில், கழனிவாசல் வாரச்சந்தை அருகில் ரூ.1 கோடி மதிப்பில் நவீன நாளங்காடி கட்டப்பட்டுள்ளது.

பேரூராட்சிகள் இயக்குநரகம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பேரூராட்சியில் உள்ள அரசு மருத்துவ மனையில் ரூ.50 லட்சம் மதிப்பில் பார்வை யாளர் தங்கும் விடுதி கட்டிடம், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் ரூ.60 லட்சம் செலவில் அலுவலக கட்டிடம், ஈரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் ரூ.1 கோடி மதிப்பில் நவீனமாக்கப்பட்ட பேருந்து நிலையம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

ரூ.122 கோடியே 62 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், தலைமைச் செயலர் கே.சண்முகம், செயலர் ஹர்மந்தர் சிங் நகராட்சி நிர்வாக ஆணையர் டி.கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், பேரூராட்சிகள் இயக்குநர் சு.பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x