Published : 14 Aug 2019 04:54 PM
Last Updated : 14 Aug 2019 04:54 PM

மணிகண்டன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கலாம்: கருணாஸ்

மணிகண்டன அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கலாம் என நடிகர் கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்தார்.

திருவாடானை தொகுதி எம்எல்ஏ நடிகர் கருணாஸ், இன்று (புதன்கிழமை) ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவ ராவை சந்தித்து, தனது தொகுதியில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளில் அரசியல் கட்சியினர் தலையீடு இருப்பதாக புகார் தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "முன்னாள் அமைச்சர் மணிகண்டன் குறித்து, நான் வெளிப்படையாகவே முதல்வரிடம் புகார் அளித்தேன். ஆனால் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பது எனது கோரிக்கையல்ல.

அரசு கேபிள் டிவி தலைவர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குறித்து விமர்சனம் செய்ததால், அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட்டதாக மேலிடத்தில் கூறுகின்றனர்.

காக்கை உட்கார்ந்து பனம் பழம் விழுந்த கதையாக, என்னால் அவர் பதவி பறிக்கப்பட்டது எனச் சொல்லிக்கொள்ள நான் விரும்பவில்லை. அமைச்சர் நீக்கப்பட்டதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கலாம்" எனக் கூறினார்.

அரசியல் தலையீடு கூடாது:

"முதல்வரின் சிறப்புத் திட்டமான குடிமராமத்துப் பணிகளில் எந்த அரசியல் தலையீடும் இருக்கக்கூடாது. முறைகேடுகள் ஏதும் நடக்கக் கூடாது என்பற்காகவே இத்திட்டத்தை ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரி பாலாஜி என்பவரை சிறப்பு அதிகாரியாக முதல்வர் நியமித்துள்ளார்.

எனது திருவாடானை தொகுதியில் 22 கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் அரசியல் கட்சி நிர்வாகிகள் தலையிடுவதாக எனக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. புகார்கள் குறித்து முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்.

தமிழகத்திலேயே அதிகமாக குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தவர் ராமநாதபுரம் ஆட்சியர் என்பதை பொதுமக்களே கூறுகின்றனர்.
விவசாயிகள், அந்த கிராமத்தினர் ஒன்று கூடி இத்திட்டத்தை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனது தொகுதியில் முதல்கட்டமாக 15 பள்ளிகளில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்" என்றார்.

பதவி வரும்போது பணிவு வேண்டும்..

மேலும் பேசும்போது, "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே எனக்கு அமைச்சர் பதவி தருவதாக சொல்லியிருந்தார். அதற்குள் அவர் மறைந்துவிட்டார். எனக்கு எம்எல்ஏ பதவி போதும். பதவிகள் வரும்போது பணிவு இருக்க வேண்டும்.

அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட்டதற்கு அவரது கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது எனக்கு வேதனையாக இருந்தது" என்றார்.2

கி.தனபால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x