செய்திப்பிரிவு

Published : 14 Aug 2019 14:35 pm

Updated : : 14 Aug 2019 14:38 pm

 

 கொள்ளையர்களை விரட்டி அடித்த நெல்லை தம்பதிக்கு வீரதீர விருது?: சென்னைக்கு அழைப்பு

tamilnadu-award-to-nellai-couple-who-chased-robbers-call-to-chennai
விமான நிலையத்தில் தம்பதி

நெல்லையில் கொள்ளையர்களை தீரத்துடன் விரட்டி அடித்த தம்பதிகளை பலரும் பாராட்டிவரும் நிலையில் அவர்களுக்கு வீரதீர விருது அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் வசிப்பவர் சண்முகவேல், இவரது மனைவி செந்தாமரை. இவர்களது மகன்கள் பெங்களூரு மற்றும் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர்.
தனது ஓய்வுக்காலத்தில் தங்கள் சொந்த ஊரின் தோட்டத்து வீட்டில் தம்பதிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி இரவு கணவன்-மனைவி இருவரும் தங்களது பண்ணை வீட்டில் இருந்தனர். வீட்டின் வெளியே சண்முகவேல் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். செந்தாமரை உள்ளே வேலையாக இருந்தார்.

அப்போது அவர்களது வீட்டிற்கு முகமூடி அணிந்து அரிவாளுடன் வந்த 2 கொள்ளையர்களில் ஒருவன் கண்ணிமைக்கும் நேரத்தில் சண்முகவேலின் பின்பக்கமாக வந்து கழுத்தில் துண்டைப்போட்டு இறுக்கினான். இதனால் சத்தம்போட்டப்படி அவர்களுடன் சண்முகவேல் போராடினார். தன்னை வெட்டவந்த மற்றொரு கொள்ளையனை துணிச்சலாக எட்டி உதைத்தார்.

சத்தம்கேட்டு வெளியில் வந்த சண்முகவேலின் மனைவி செந்தாமரை தீரத்துடன் செயல்பட்டு வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையர்களை நோக்கி சத்தமிட்டப்படி வீசினார். இதனால் கழுத்தில் துண்டைப்போட்டு இறுக்கிய கொள்ளையன் பிடியைவிட அதிலிருந்து மீண்ட சண்முகவேல் பக்கத்திலிருந்த நாற்காலியை எடுத்து கொள்ளையர்கள்மீது வீசினார்.

அதன்பிறகு கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து கொள்ளையர்களுடன் போராடினர். இருவர் கையிலும் வீச்சரிவாள் இருந்தும் அஞ்சாமல் மாற்றிமாற்றி ஒருவரை ஒருவர் காப்பாற்றும்விதமாக போராடினர். ஒருகட்டத்தில் அருகில் சென்று கொள்ளையனை தாக்கிய செந்தாமரையின்மீது கோபம் கொண்ட கொள்ளையன் அரிவாளால் அவரை வெட்ட அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

இதைப்பயன்படுத்தி கழுத்திலிருந்த தாலிச்சங்கிலியை பறித்தனர். விடாமல் தம்பதிகள் தீரத்துடன் போராடுவதைப்பார்த்து பயந்துப்போன அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினர். இவை அனைத்தும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்தக்காட்சி தமிழகம் தாண்டி இந்தியா முழுதும் வைரலானது. தம்பதிகளின் வீரத்தை பிரபலங்களும் பாராட்டினர். அமிதாப்பச்சன் ‘பிராவோ’ என காணொலியை பதிவிட்டு வாழ்த்தியிருந்தார்.

ஹர்பஜன்சிங்கும் வாழ்த்தியிருந்தார். நெல்லை எஸ்பி நேரில் சென்று தம்பதிகளை பாராட்டினார். போலீஸார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் அதன்பேரில் நெல்லை தம்பதிக்கு வீரதீர செயலுக்கான விருது வழங்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.

அவரது பரிந்துரை ஏற்றுக்கொள்ளும்நாளை சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் விருது வழங்கப்படலாம் என தெரிகிறது. கல்பனா சாவ்லா துணிவு மற்றும் வீரத்துக்கான விருது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கும் என்பதால் நெல்லை தம்பதிகளுக்கு என்ன வகையான விருது வழங்கப்படும் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

ஒருவேளை கல்பனா சாவ்லா விருது பிரித்து வழங்கப்படுமா என்பதும் தெரியவில்லை. ஆனால் நெல்லை தம்பதிகளுக்கு விருது அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

அதனை உறுதிபடுத்தும் விதமாக சண்முகவேல் மற்றும் செந்தாமரை ஆகிய இருவரும் அம்பை தாசில்தார் வெங்கடேசுடனுடன் இன்று மதியம் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டனர்.
இவர்கள் மாலையில் தலைமை செயலாளரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விருது அறிவிக்கப்பட்டால் அவர்களுக்கு சுதந்திர தின நிகழ்ச்சியில் முதல்வர் விருது வழங்குவார் என தெரிகிறது.

Tamilnadu awardNellai coupleWho chased robbersகொள்ளையர்களை விரட்டி அடித்த நெல்லை தம்பதிவீரதீர விருதுமுதல்வர்

Popular Articles

You May Like

More From This Category

More From this Author