Published : 13 Aug 2019 17:39 pm

Updated : 13 Aug 2019 17:44 pm

 

Published : 13 Aug 2019 05:39 PM
Last Updated : 13 Aug 2019 05:44 PM

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிய வேண்டாம்: ப.சிதம்பரத்தை விமர்சித்த முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

ks-alagiri-slams-cm-edappadi-palanisamy-for-his-comments-on-p-chidambaram
கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

மகுடம் சூட்டி தமிழகமே பாராட்ட வேண்டியவர் ப.சிதம்பரம் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "காஷ்மீர் மாநில உரிமைப் பறிப்பைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஆற்றிய உரைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய பதிலைக் கூறாமல் பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்தியாவின் நிதியமைச்சராக இருந்து 10 நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்து வரலாறு படைத்த பொருளாதார சீர்திருத்த செம்மலைப் பார்த்து, 'இவர் பூமிக்கு பாரமாக இருக்கிறார், நாட்டுக்கு இவரால் என்ன பயன் ? இவர் கொண்டு வந்த புதிய திட்டம் என்ன ?" என்று காழ்ப்புணர்ச்சியுடன் கடுமையாகப் பேசியிருக்கிறார்.

1984-ல் நாடாளுமன்ற உறுப்பினராக நுழைந்த ப. சிதம்பரம் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சராகவும், பிறகு,1991-ல் மத்திய வர்த்தகத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். புதிய பொருளதாரக் கொள்கை அமலுக்கு வந்த போது, அதை நிறைவேற்றுகிற வகையில் வர்த்தகத் துறையில் புரட்சிகரமான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர். கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்த ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கையில் பல சீர்திருத்தங்களை நிறைவேற்றினார்.

1996-ல் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்த போது, கனவு பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர். இவரோடு இணைந்து பணியாற்றியவர்களில் அவரது செயல் திறனைப் பாராட்டாதவர்களே இல்லை. புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்காதவர். கூர்மையான சிந்தனை கொண்ட சீர்திருத்த மேதை என்று அவரைப் பல பொருளாதார அறிஞர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

நிதிநிலை அறிக்கை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையைத் தகர்த்த அன்றைய நிதியமைச்சர் மன்மோகன் சிங்கைத் தொடர்ந்து, அதே பாதையில் தமது தனி முத்திரையைப் பதித்தவர். 2004 ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்த போது நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார். அக்காலகட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை முதற்கட்டமாக 150 மாவட்டங்களில் அறிமுகம் செய்தார்.

பிறகு, படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இதன்மூலம் கிராமப்புற பொருளாதாரத்தின் அடிப்படைத் தன்மையை மாற்றியமைத்தார். ஆட்சிக்கு வந்தவுடன் சென்வாட் வரியை ரத்து செய்து கைத்தறி நெசவாளர்களின் துயரத்தை நீக்கினார். சென்னை மாநகர மக்களின் குடிநீர் பஞ்சத்தைப் போக்க நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூபாய் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிச் செயல்படுத்தினார்.

2008 ஆம் ஆண்டு 4 கோடி விவசாயிகளின் கடன் சுமையைப் போக்குவதற்காக ரூ.65 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தார். அதனால் பயனடைந்தவர்களின் பட்டியலை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் அறிவிப்பு பலகையில் வெளியிடச் செய்தவரும் இவரே. இவர் நிதியமைச்சராக இருந்த போது தான் சமூக சேவை திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பல மடங்காக அதிகரித்தது.

ப. சிதம்பரம் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையில் வரி விதிப்புகள் கூட இடம் பெறாமல் இருக்கலாம். ஆனால், திருக்குறள் இடம் பெறாமல் இருக்கவே இருக்காது. இதன்மூலம் தமிழுக்குப் பெருமை சேர்த்த முதல் வேட்டி கட்டிய தமிழரும் இவரே. அனைத்து வரிகள் மீதும் கல்விக்காக 2 சதவீதம் கூடுதல் வரி விதித்து வருமானத்தைப் பெருக்கியவர்.

மருத்துவம், பொறியியல் படிக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதை உணர்ந்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக் கடன் திட்டத்தை அறிவித்தவர். இதன் பயனாக 24 லட்சம் மாணவர்களுக்கு ரூபாய் 56 ஆயிரம் கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டது. இன்று நாடு முழுவதும் பொறியாளர்களாகவோ, மருத்துவராகவோ ஏழை, எளியவர்கள் படிக்க முடிந்தது என்று சொன்னால், அது ப. சிதம்பரம் வழங்கிய கல்விக் கடன் தான் காரணமாகும். இதில் இந்தியாவிலேயே அதிகளவில் பயன் அடைந்ததில் ஐந்தில் ஒரு பங்கு மாணவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கடன் வழங்குவதற்காக 2003-04 இல் பாஜக ஆட்சியில் ரூபாய் 87 ஆயிரம் கோடியாக இருந்ததை 2014 இல் ரூபாய் 10 லட்சம் கோடியாக உயர்த்தியர். இதற்கான வட்டி விகிதத்தை 7 சதவீதமாகவும், தவணை தவறாமல் கட்டுபவர்களுக்கு 4 சதவீதமாகவும் குறைத்தார். இதனால், விவசாயிகள் பெருமளவில் பயன் அடைந்தனர்.

காமராஜரின் கனவுத் திட்டமான மதிய உணவுத் திட்டத்தை அகில இந்திய அளவில் பள்ளிகளில் அறிமுகப்படுத்தியவர். இதனால் நாடு முழுவதும் உள்ள 12.12 லட்சம் ஆரம்பப் பள்ளிகளில் 10 கோடிக்கும் மேலான குழந்தைகளுக்கு சூடான மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்காக 2013-ல் ரூபாய் 11 ஆயிரத்து 937 கோடி நிதியை ஒதுக்கினார்.

மேலும், அனைவருக்கும் கல்வி திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கம், ராஜீவ் காந்தி பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டம், உணவு பாதுகாப்புத் திட்டம், நலிந்த பிரிவினருக்கான திட்டம், தொழிலாளர் நலன் திட்டம், ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மறுமலர்ச்சி இயக்கம், ராஜீவ் வீட்டுவசதி திட்டம், பின்தங்கிய பகுதிகளுக்கான மானிய ஒதுக்கீடு, புதிய ஜவுளிக் கொள்கை, நெடுஞ்சாலைகளுக்கான நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு திட்டம், சிறுபான்மை மக்களின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, பிரதமர் கிராம சாலைகள் திட்டம், தகவல் தொழில்நுட்பத் திட்டங்கள், தொலைத் தொடர்பு துறையில் இமாலய வளர்ச்சி, பாரத் நிர்மான் திட்டம், ராஜீவ்காந்தி ஊரக மின்மயமாக்கல் திட்டம், இப்படி சாதனை திட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி... ப.சிதம்பரம் பதவியிலிருந்த போது நிறைவேற்றிய திட்டங்கள் என்ன என்று நா கூசாமல் கேட்கிறீர்களே, நிறைவேற்றிய திட்டங்களின் பட்டியல் போதுமா? இன்னும் வேண்டுமா ? நிதியமைச்சராக இருந்து சாதித்த சாதனைகளை மறைக்கும் வகையில் பேசுவதன் மூலம் முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா ?

2004-05 இல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூபாய் 54 லட்சத்து 80 ஆயிரத்து 380 கோடி. ஆனால் 2014-ல் ஆட்சியை விட்டு விலகுகிற போது மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூபாய் 1 கோடியே 5 லட்சத்து 27 ஆயிரத்து 674 கோடியாக இரு மடங்காக உயர்ந்தது. இதன்மூலம் இந்தியா வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட்டது.

சுதந்திர இந்தியாவில் வரலாறு காணாத சாதனைகளை நிகழ்த்தி, 2004 முதல் 2009 வரை தொடர்ந்து மூன்றாண்டுகள் நமது நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 9 சதவிகிதத்திற்கு மேல் உயர்த்தியதில் ப. சிதம்பரத்தின் பங்கைப் பாராட்டாமல் எவரும் இருக்க முடியாது. இத்தகைய சாதனைகளை நிகழ்த்தியவரை இந்தியாவின் சாதனைச் செல்வர் என்று மகுடம் சூட்டி தமிழகமே பாராட்ட வேண்டிய ப. சிதம்பரத்தை, விபத்தின் மூலம் முதல்வராக பதவிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, பாராட்ட மனம் இல்லை என்றாலும், சிறுமைப்படுத்தாமல் இருக்கலாமே.

ப. சிதம்பரம் பல்வேறு பொறுப்புகளை எப்படிப் பெற்றார் என்பதை வரலாறு அறியும். தனது திறமையான அணுகுமுறையின் காரணமாகவே, அவரை நோக்கி பதவிகளும், பொறுப்புகளும் வந்தன. என்றைக்கும் இவர் பதவிகளை தேடிப் போனதே இல்லை. பதவிகள் தான் இவரைத் தேடி வந்திருக்கின்றன.

ஆனால், எடப்பாடி பழனிசாமி எப்படி பதவிக்கு வந்தார் என்பதும், பதவிக்கு வந்த போது அவர் யார் காலில் விழுந்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்பதும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, எடப்பாடி பழனிசாமி, கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறிய வேண்டாம்", என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம்கே.எஸ்.அழகிரிதமிழக காங்கிரஸ்முதல்வர் எடப்பாடி பழனிசாமிP chidambaramKS alagiriTamilnadu congressCM edappadi palanisamy

You May Like

More From This Category

More From this Author