Published : 13 Aug 2019 03:39 PM
Last Updated : 13 Aug 2019 03:39 PM

ஊருணிக்கு உயிரூட்டிய `நவக்கரை' இளைஞர்கள்!

க.சக்திவேல்

கோவையில் ஒரு வாரம் முழுவதும் தொடர் கனமழை பெய்திருந்தாலும், அதில் எத்தனை சதவீதம் சேமிக்கப்பட்டது என்று கணக்கிட்டால் ஏமாற்றமே மிஞ்சும்! இந்தச் சூழலில், நீர்நிலைகளைப் பாதுகாக்கவில்லை என்று அரசை மட்டுமே குறை சொல்லிக்கொண்டிருக்காமல், தங்களால் இயன்றதைச் செய்வோம் என்று களமிறங்கி சாதித்துள்ளனர் ‘நம்ம நவக்கரை’ அமைப்பினர்.

கோவை நவக்கரையில் பொது இடத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ஊருணி உருவாக்கப்பட்டுள்ளது. நாளடைவில் இருந்த இடம் தெரியாமல் புதர்மண்டிய அந்த ஊருணியை, மக்களும் மறந்துபோயினர். பின்னர், எப்படி உயிரூட்டப்பட்டது அந்த ஊருணி?
இதற்கு காரணகர்த்தாவாக இருந்த ‘நம்ம நவக்கரை’ அமைப்பைச் சேர்ந்த மகேஷ்வரன், சரவணக்குமாரிடம் பேசினோம்.

"நவக்கரை பகுதியில் தன்னார்வ இளைஞர்கள் 8 பேர் இணைந்து ஞாயிறுதோறும் மரம் நடும் பணியில் ஈடுபட்டு வந்தோம். ஏதேச்சையாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊருணி இருந்த பகுதியில் மரக்கன்றுகள் நடச் சென்றோம். அப்போது, புதர்களுக்கு அடியில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை கொட்டப்பட்டு ஊருணி மூடப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதற்கு அடுத்த வாரம் முதல், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 8 பேரும் இணைந்து, முதலில் ஊருணியைச் சுற்றியுள்ள புதர்களை அப்புறப்படுத்தத் தொடங்கினோம். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளால் சுமார் 4 டன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை அப்புறப்படுத்தப்பட்டது.

இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்காக அளித்துவிட்டோம். மக்கும் குப்பை விவசாய நிலங்களுக்கு உரமாக்கப்பட்டது" என்றனர். "சரி, செலவுகளை எப்படி சமாளித்தீர்கள்?" என்று கேட்டதற்கு, "நீர்வழிப் பாதையைச் சீரமைத்தது, புதர்களை அப்புறப்படுத்தியது, வாகன வாடகை என முழுமையாக தூர்வாரி முடிக்க சுமார் ரூ.1.25 லட்சம் வரை செலவானது. இதை 8 பேரும் பகிர்ந்துகொண்டோம். முழுமையாக தூர்வாரி முடிக்க ஓராண்டு காலமானது.

நாங்கள் தூர்வாரி முடிக்கவும், மழை பெய்யவும் சரியாக இருந்தது. 85 சென்ட் பரப்பளவில் 20 அடி ஆழத்தில் உள்ள ஊருணியில், தற்போது நீர் நிரம்பியுள்ளது. இதனால், அருகில் உள்ள விவசாயக் கிணறுகளில் நீர்மட்டம் உயர்வதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயரும். குறைந்தது 6 மாதங்களுக்காவது நீர் வற்றாது. வரும் நாட்களில் ஊருணியைச் சுற்றிலும் பூங்கா அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றனர். தன்னார்வலர்களின் இந்த முயற்சியை விவசாயிகளும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். நம்பிக்‘கை’ வைத்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கு ‘நம்ம நவக்கரை’ அமைப்பினர் ஓர் எடுத்துக்காட்டு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x