Published : 13 Aug 2019 12:04 PM
Last Updated : 13 Aug 2019 12:04 PM

அண்ணா சாலை இருவழிப்பாதை ஆவது எப்போது?- போக்குவரத்து போலீஸார் விளக்கம்

சென்னை,

மெட்ரோ ரயில் பணிக்காக ஒருவழியாக்கப்பட்ட அண்ணா சாலை மீண்டும் எப்போது இருவழிப்பாதை ஆகும் என்பது குறித்து போக்குவரத்து போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அண்ணா சாலை பகுதியில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப் பாதை அமைப்பதற்காக, எல்ஐசியில் இருந்து ஸ்பென்சர் வழியாக செல்லும் அண்ணா சாலை மூடப்பட்டு ஜெனரல் பீட்டர்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யூ, சத்யம் தியேட்டர், ஒயிட்ஸ் சாலை வழியாக அண்ணா சாலையைச் சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிக தூரம் கடக்க வேண்டியிருந்தது.

ராயப்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அண்ணா மேம்பாலத்தில் இருந்து சிம்சன் நோக்கிச் செல்லும் எதிர் மார்க்கம் மட்டும் ஒருவழிச் சாலையாக இயங்கி வந்தது. இந்நிலையில், அண்ணா சாலை மார்க்கத்தில் மெட்ரோ சுரங்கப் பாதை பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் முடிந்து, ரயில்கள் இயக்கமும் தொடங்கப்பட்டது.

இதையடுத்து, சில இடங்களில் சாலை விரிவாக்கம் மற்றும் சீரமைப்புப் பணிகள் மட்டும் நடந்து வந்தன. அந்தப் பணிகளும் முடிவடைந்த நிலையில், சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா சாலையை மீண்டும் இருவழிப் பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தப் பணி தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் மெட்ரோ பணிகள் முடிவடைந்து அண்ணா சாலை வழித்தடத்தில் கடந்த 6 மாதகாலமாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் சூழலில், ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் மார்ச் மாதமே அண்ணா சாலையை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்து இருவழிப்பாதையாக மாற்ற மேற்கொள்ளப்படவிருந்த திட்டம் நிறைவேறவில்லை.

இந்நிலையில் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. மெட்ரோ ரயில் இயங்கத் தொடங்கி 6 மாதங்கள் ஆகியும் அண்ணா சாலை ஒருவழிப்பாதையாகவே உள்ளது. மெட்ரோ நிர்வாகத்தினர் போக்குவரத்துக்கு ஏற்ற நிலையில் முழுவதுமாக முடித்து சாலையை ஒப்படைத்தால் மட்டுமே இருவழியாக மாற்றும் நடைமுறை அமலுக்கு வரும்.

நெடுஞ்சாலைத்துறையிடம் சாலையை ஒப்படைத்த பின்னர், சுரங்கப் பணிகள் நடைபெற்ற வழித்தடம் என்பதால், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் சாலையின் உறுதித்தன்மை உள்ளதா? என்பது குறித்து நெடுஞ்சாலை ஆய்வு செய்த பின்னரே இருவழிப்பாதையாக மாற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும்.

அதன்பின்னர் போக்குவரத்து போலீஸாரிடம் சாலை ஒப்படைக்கப்பட்டு இருவழிச் சாலையாக மாற்றும் நடவடிக்கை தொடங்கப்படும். அண்ணா சாலை இருவழிப்பாதையாக மாற்றப்படாமல் காலம் தாழ்த்தப்படுவது குறித்து 'இந்து தமிழ் திசை' சார்பில் காணொலிச் செய்தி வெளியிடப்பட்ட நிலையில் போக்குவரத்து போலீஸார் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

போக்குவரத்து போலீஸார் அளித்துள்ள விளக்கம்:

“மெட்ரோ ரயில் பணிக்காக கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அண்ணா சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பு முதல் வெலிங்டன் சந்திப்புவரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது நடைமுறையில் உள்ளது.

மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்த பின்னர், அண்ணா சாலையைச் சீரமைத்து இதுவரை மெட்ரோ ரயில் நிறுவனம் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கவில்லை. சாலையைச் சீரமைத்து ஒப்படைத்த பிறகு அண்ணசாலை இருவழிச் சாலையாக மாற்றுவது குறித்து ஒத்திகை பார்க்கப்படும்.

பொதுமக்கள் கருத்தும் கோரப்படும். அதனடிப்படையில் அண்ணாசாலை இருவழிப் பாதையாக செயல்படும்”.

இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x