Published : 13 Aug 2019 11:30 AM
Last Updated : 13 Aug 2019 11:30 AM

சிபிஎஸ்இ உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை குறைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

சென்னை

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள தேர்வு கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "சிபிஎஸ்இ பள்ளியில் 10-வது மற்றும் 12-ம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களின் தேர்வு கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதை குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக எஸ்சி, எஸ்டி மாணவர்களின் தேர்வு கட்டணத்தை ரூபாய் 50-ல் இருந்து ரூபாய் 1200 ஆகவும், பொதுப்பிரிவு மாணவர்களின் தேர்வு கட்டணத்தை ரூபாய் 750-ல் இருந்து ரூபாய் 1500 ஆகவும் உயர்த்தியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படி பன்மடங்கு உயர்த்தினால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிள்ளைகளை படிக்க வைக்கின்ற பெற்றோர்களுக்கு பொருளாதார சுமை ஏற்படும்.

அதுமட்டுமல்ல தேர்வுக்கான கட்டணத்தை ஓரளவுக்கு உயர்த்தலாம். மேலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் தேர்வு கட்டணத்தை ஒரே சமயத்தில் 24 மடங்கு அதிகமாக உயர்த்தியிருப்பது ஏற்புடையதல்ல. அதேபோல கூடுதல் பாடத்தில் தேர்வு எழுத நினைத்தால் ஏற்கெனவே கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற நிலை மாறி தற்போது அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டியதுள்ளது.

பொதுவாக எஸ்சி, எஸ்டி, பொதுப்பிரிவு - என எந்த பிரிவு மாணவர்களாக இருந்தாலும் அவர்களின் கல்வி சம்பந்தப்பட்ட கட்டணத்தை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அறிவிக்காமல் திடீரென்று உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது.

அதே சமயம் கல்விக்கான தேர்வு கட்டணத்தை உயர்த்த நினைத்தால் படிப்படியாக சிறிதளவு உயர்த்தலாம். காரணம் கல்வி இன்னும் நாடு முழுவதும் முழுமையாக சென்றடையவில்லை. அப்படி இருக்கும் போது ஏழை, எளிய, சாதாரண குடும்பத்தின் பிள்ளைகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்க முன்வரும் போது கல்விக்கு செலவிடும் கட்டணம் குறைவாக இருப்பது தான் நாட்டுக்கும் நல்லது, நாட்டு மக்களுக்கும் பயன் தரும்.

எனவே மத்திய அரசு - சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் கல்வியில் அதிக கவனம் செலுத்தி அவர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள தேர்வுக்கட்டணத்தை உடனடியாக குறைக்கவும், இனிமேல் கல்விக்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தால் அது சம்பந்தமாக ஓராண்டுக்கு முன்பாக அறிவிப்பை வெளியிட்டு மக்களின் சம்மதத்தைப் பெற்றே முடிவு எடுக்க வேண்டும்", என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x