Last Updated : 12 Aug, 2019 05:48 PM

 

Published : 12 Aug 2019 05:48 PM
Last Updated : 12 Aug 2019 05:48 PM

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: பொள்ளாச்சி மாணவி ஸ்வரூபா; சென்னை மாணவி அர்ச்சனா முதலிடம்

கோவை

எம்பிஏ., எம்சிஏ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. எம்பிஏ படிப்பில் பொள்ளாச்சி மாணவி ஸ்வரூபா, எம்சிஏ படிப்பில் சென்னை மாணவி அர்ச்சனா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் 2019-2020-ம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கான தரவரிசைப் பட்டியலை இன்று (திங்கள்கிழமை) அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வரும், தமிழ்நாடு எம்பிஏ., எம்சிஏ மாணவர் சேர்க்கை செயலர் பெ.தாமரை வெளியிட, ஒருங்கிணைப்பாளர் பி.கே.பழனி, பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் டி.புருஷோத்தமன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

எம்பிஏ படிப்புக்கான டான்செட் தேர்வில் 82 மதிப்பெண் பெற்ற பொள்ளாச்சி மாணவி எஸ்.ஸ்வரூபா முதலிடமும், 81.333 மதிப்பெண் பெற்ற சென்னையைச் சேர்ந்த ஏ.கார்த்திபிரியா இரண்டாம் இடமும், 79 மதிப்பெண் பெற்ற பி.பிரசன்னகுமார் மூன்றாம் இடமும் பெற்றனர்.

எம்சிஏ படிப்பில் 73.667 மதிப்பெண் பெற்ற சென்னை மாணவி எஸ்.அர்ச்சனா முதலிடமும், 72.667 மதிப்பெண் பெற்ற மதுரை மாணவி ஜெ.தர்ஷினி இரண்டாம் இடமும், 66 மதிப்பெண் பெற்ற சென்னை மாணவர் ஏ.பிரதீப்ராம் மூன்றாம் இடமும் பெற்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு எம்பிஏ., எம்சிஏ. மாணவர் சேர்க்கை செயலர் பெ.தாமரை கூறியதாவது:

"எம்பிஏ கலந்தாய்வுக்கு 6,504 பேரும், எம்சிஏ கலந்தாய்வுக்கு 1,528 பேரும் என 8,032 பேர் விண்ணப்பித்துள்ளனர். எம்சிஏ படிப்புக்கு வரும் 17-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கும், 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும். எம்பிஏ படிப்புக்கு 21-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறும். 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும்.

தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள் தங்களுக்கான அழைப்பு கடிதத்தை www.gct.ac.in/www.tn-mbamca.com என்ற இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்வு பட்டியலை மேற்கண்ட இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கலந்தாய்வுக்கு வரும்போது பொதுப்பிரிவினர் ரூ.5,300-ம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ரூ.1,150-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். மாணவர் சேர்க்கையின் போது, மாணவர்கள் சேரும் கல்லூரிக்கு இத்தொகை அனுப்பி வைக்கப்படும். மாணவர்களின் அனைத்து சான்றிதழ்களும் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும்"

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x