Published : 12 Aug 2019 04:43 PM
Last Updated : 12 Aug 2019 04:43 PM

மீட்புப் பணிகளில் சுணக்கமில்லை; ஸ்டாலின் பழைய பல்லவியை பாடுகிறார்: ஆர்.பி.உதயகுமார்

நீலகிரியில் வெள்ள மீட்பு நிவாரணப் பணிகளில் எந்த சுணக்கமும் இல்லை. ஸ்டாலின் பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறார் எனக் கூறியுள்ளார் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

மதுரையில் இன்று (திங்கள்கிழமை) அமைச்சர் ஆர்பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "நீலகிரியில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்துவந்தாலும்கூட கடுமையான பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது.

155 இடங்கள் நிவாரண முகாம்களாக கண்டறியப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மீட்புக்குழுக்கள், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டிருந்த மண்டலக் குழுக்கள் தயார் நிலையில் இருந்தன. தேசிய, மாநில மீட்பு படையினரும் தயார் நிலையில் வைத்திருந்தோம். அனைத்து இயந்திரங்களையும், உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருந்தோம். இதெல்லாம் தெரிந்தும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நீலகிரி சென்று பார்வையிட்டு அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என வழக்கம்போல் குற்றச்சாட்டியிருந்தார்.

அரசின் துரித நடவடிக்கைகள் தெரிந்தும் தெரியாததுபோல, உண்மையை மூடி மறைத்து அரசு மீது குற்றச்சாட்டுகள் சுமத்துவதும், பலி சொல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார் ஸ்டாலின்.

நீலகிரியிலிருந்து 1 கிமீ தூரத்தில் கேரள மாநிலம் துவங்குகிறது. அங்கு நிலச்சரிவின்போது எப்படி கையாண்டார்கள், முன்னெச்சரிக்கை கையாளப்பட்டது, சேதாரங்கள் எப்படி ஏற்பட்டது என்பது தெரியும்.

ஆனால் நீலகிரியில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டும் ஒரு உயிரிழப்புகூட ஏற்படாமல் மக்கள் அரசால் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

கேரள மாநிலத்திற்கு செல்லும் வழியில் உள்ள பந்தலூரில் பாதுகாப்பில்லாத வீட்டின் சுவர் இடிந்து ஒருவர் உரியிழந்திருக்கிறார். பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் ரூ.4 லட்சம் நிவாரண நிதிக்குப் பதிலாக தமிழக முதல்வர் ரூ. 10 லட்சத்தை குடும்ப நல நிதி உதவியாக வழங்கியிருக்கிறார்.

அதேபோல், கால்நடை இழப்பு, வீடு சேதம், பயிர்ச்சேதம் உள்ளிட்ட அனைத்து சேதங்களையும் கணக்கிட்டு நிவாரணம் அளிக்க தமிழக முதல்வர், எந்த அரசியலும் செய்யாமல், மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் வகையில் அறிவித்திருக்கிறார்.

நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று வேளையும் உணவு, குடிநீர், மருத்துவம், குடிநீர் வசதி செய்ய முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார். மேலும் உயர் அதிகாரிகள் இரவு பகலாக பணியாற்றுகிறார்கள். பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இவற்றையெல்லாம் அறிந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், வழக்கம்போல் அரசு செயல்படவில்லை என்று பழைய பல்லவியை இப்போதும் பாடியிருக்கிறார்.

பெருமழை, தொடர்மழை, கனமழை வரும்போது மறுகட்டமைப்பு செய்வதில் அதிமுக அரசு, கடந்த ஆட்சியாளர்கள் செய்யாத அணுகாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை பாதிப்புகளிலிருந்து மக்களின் உயிரையும், உடைமைகளையும் அதிமுக அரசு பாதுகாத்துள்ளது, அங்கு மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x