Published : 12 Aug 2019 03:33 PM
Last Updated : 12 Aug 2019 03:33 PM

100-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது காஷ்மீர் இந்தியாவில் இருக்காது: வைகோ பேட்டி

சென்னை

இந்தியாவின் 100-வது சுதந்திரத்தின் போது, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது என, மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய வைகோ, பாஜக மட்டுமல்லாது காங்கிரஸையும் தாக்கிப் பேசினார். இதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வைகோவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இருவரும், மாறிமாறி ஒருவரையொருவர் தாக்கிப் பேசினர்.

தமிழீழப் படுகொலைக்குக் காரணமாக இருந்த காங்கிரஸை தான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் எனவும், வைகோ தெரிவித்திருந்தார். வைகோ அரசியல் சந்தர்ப்பவாதி என, கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில், வைகோ இன்று (திங்கள்கிழமை) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்குச் சென்று, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அங்கு, மண்டியிட்டு பிரார்த்தனை செய்த வைகோ, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "கொளுத்தும் வெயிலில் காலணி இல்லாமல், அண்ணா நினைவிடத்திற்குச் சென்று, அங்கு மலர் வளையம் வைத்து, மலர்களைத் தூவி, மண்டியிட்டு, 'உங்கள் கனவுகள் நனவாக வேண்டும், என் உயிர் பிரியும் முன்பு தமிழீழம் மலர வேண்டும். அதற்கு எங்களுக்கு வலிமையைத் தாருங்கள்' என்று அண்ணாவிடம் வேண்டிக்கொண்டேன்.

நான் காஷ்மீர் விவகாரத்தில் 30% காங்கிரஸையும், 70% பாஜகவையும் தாக்கிப் பேசினேன். இந்தியா 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக இருக்காது என்று வரலாறு எழுதப் போகிறது. புதை மணலில் இந்தியாவைச் சிக்க வைத்துவிட்டனர்", என வைகோ தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x