Published : 12 Aug 2019 08:17 AM
Last Updated : 12 Aug 2019 08:17 AM

இன்று உலக யானைகள் தினம் தமிழகத்தில் மாதந்தோறும் 8 யானைகள் உயிரிழப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் திரியும் யானை.

எல்.மோகன் / ஒய்.ஆண்டனி செல்வராஜ்

நாகர்கோவில் / மதுரை

யானைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கும் விதமாக இன்று, உலக யானைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆப்பிரிக்க, ஆசிய காடுகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலால் யானைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. யானைகளை பாதுகாக்கும் வகையில் வனங்களில் இயற்கை வளம் குன்றாமல் பாதுகாப்பது அவசியம் என பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு நிறுவனம் (ஐயுசிஎன்) எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வனப்பகுதிகளில் பல்வேறுவிதமான அச்சுறுத்தல் களால் மாதத்துக்கு 8 யானைகள் உயிரிழக்கின்றன. இதுகுறித்து நாகர்கோவிலைச் சேர்ந்த வன ஆர்வலர் டேவிட்சன் சற்குணம் கூறியதாவது:

காடுகளில் பார்த்தீனியம், உன்னிச்செடி உள்ளிட்ட பலனற்ற தாவரங்கள் அதிகரித்துள்ளதால், யானைகளுக்கு தேவையான புற்கள், பசுமை உணவுகள் கிடைப்பது அரிதாகிவிட்டது. பருவமழை பொய்த்தல், காலநிலை மாற்றம், வறட்சி போன்றவற்றால் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையோர குடியிருப்புகளை நோக்கி யானைகள் கூட்டமாக வருகின்றன.

வன விதிகளை அத்துமீறும் கும்பலால் காடுகளில் ஏற்படும் தீவிபத்து, குவாரிகளில் கல் தோண்டுவது, யானை வசிப்பிடங் களில் மனித நடமாட்டம் அதிகரிப் பது போன்றவற்றாலும் யானைகள் காடுகளைவிட்டு வெளியேற வேண் டிய கட்டாயத்தில் உள்ளன. மலை யோர கிராமங்களுக்கு புகும் யானை கள் பழக்கமில்லாத ஆழமான பள்ளங்களில் விழுவது, ரயில் தண்ட வாளங்களை கடப்பது, மின்வேலி யில் சிக்குவது போன்றவற்றால் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுகின்றன.

வனத்துறை கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 2017-ல் 2,761 யானைகள் மட்டுமே இருந்தன. ஆசியாவில் உள்ள மொத்த யானைகளின் எண்ணிக்கையில் இந்தியாவில் 44 சதவீதம் அதாவது 27,312 யானைகள் உள்ளன. கேரளாவில் 5,706, கர்நாடகாவில் 6,049 யானைகள் உள்ளன. தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஆனைமலை, ஆனைமுடி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் யானைகளின் வசிப்பிடங்களாக உள்ளன.

யானைகளுக்கு தினமும் 150 கிலோ முதல் 200 கிலோ உணவு தேவை. இலைகள், மரப்பட்டைகள், புற்கள், மரக்குச்சிகளை அவை உண்கின்றன. 12 மணி நேரத்தில் இருந்து 18 மணிநேரம் உண் பதிலேயே நேரத்தை செலவிடு கின்றன. குடிப்பதற்கும், உடல் வெப்பத்தை தணிக்கவும் தினமும் 220 லிட்டர் தண்ணீர் தேவைப் படுகிறது. வறட்சி காலத்தில் இவை கிடைக்காதபோது, குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன.

எனவே, அனைத்து காலங்களி லும் வனங்களில் யானைக்கு தேவையான உணவு கிடைக்கும் வகையில் பழ மரங்களை உருவாக்க வேண்டும். வனத்துக்குள் ஆழ் குழாய்களும் அருகிலேயே தண்ணீர் தொட்டிகளும் ஏற்படுத்தி, வன விலங்குகளுக்கான தண்ணீர் தேவையைப் போக்க வேண்டும். வனங்களில், மனித இடையூறை கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் யானைகளை அழிவிலிருந்து தடுக்கலாம் என்றார்.

காடுகளின் தோட்டக்காரர்

மதுரையைச் சேர்ந்த வன உயிரின ஆர்வலர் ரவீந்திரன் கூறியதாவது:

யானைகளுக்கு மனிதர்களைப் போல் பாசம், அறிவாற்றல், பெருந்தன்மை, நினைவாற்றல், தன்னை நிலை நிறுத்திக் கொள்ள தொடர்ந்து பாடுபடுதல் போன்ற அசாத்திய குணங்கள் உள்ளன.

யானைகளை காடுகளின் தோட்டக்காரர் என அழைக்கலாம். யானைகளின் சாணத்தில் முளைக்கும் திறன் பெற்ற விதைகளும், ஊட்டமான உணவுக் கழிவும் புதிய தாவரங்கள் முளைத்துக் காடுகளை வளமாக்க உதவுகின்றன. யானை, காடுகளில் இருந்து ஒரு பங்கு உணவைப் பெற்றால் பத்து பங்கு உணவு உற்பத்திக்குத் தேவையான மரம், செடிகளை உற்பத்தி செய்யும் வேலையை மறைமுகமாகச் செய்கிறது.

காடுகளின் மூத்த குடிகளான யானைகளுக்கு ஒவ்வொரு காட்டின் நீர்வளம் எங்கே இருக்கும் என்பது அத்துப்படி. கோடையில் யானைகளால் கண்டறியப்படும் நீரூற்றுகளே பிற விலங்குகளின் தாகம் தணிக்கும் நீர் நிலைகள்.

யானை ஒரு முரட்டு விலங்கோ, கொடிய விலங்கோ அல்ல. மிகவும் மதிநுட்பம் வாய்ந்த விலங்கு. அதன் எல்லைக்கோட்டை அது நன்கு அறியும். பல நேரங்களில் காடுகளில் யானைகளை எதிர்கொள்ளும்போது அது, தான் இருக்கும் இடத்தை மரத்தின் கிளைகளை உடைத்து நம்மை எச்சரிக்கும்.

அதன் பிறகு நாய் குறைப்பதைப் போன்ற ஓர் எச்சரிக்கை ஒலியை எழுப்பும். அதையும் மீறி அருகில் செல்வோரை தாக்க வருவதைப் போல காதுகளை விரித்து வாலை சுருட்டியபடி நீண்ட பிளிறலுடன் ஓடி வரும். அப்போதும் மனிதன் அதை எதிர்க்கத் துணிந்தால் அவ்வளவுதான். நொடிப் பொழுதில் எதிர்ப்படுவோரை துவம்சம் செய்துவிடும். அசாதாரணமாக இறுதி நொடியில் கூட பலரை கொல்லாமல் விட்டு விடும் இரக்க குணமும் அதற்கு உண்டு என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x