Published : 11 Aug 2019 10:03 AM
Last Updated : 11 Aug 2019 10:03 AM

ஒகேனக்கல்லில் அருவிகளை மூழ்கடித்த வெள்ளம்: காவிரியில் மிதந்து வரும் மரக்கிளைகள், பாம்புகள்

தருமபுரி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சம் கன அடியாக உயர்ந்ததால், வெள்ள நீர் இருகரை தொட்டு ஓடுகிறது.

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகா மாநில அணைகளான கபினி, கேஆர்எஸ் ஆகியவற்றில் இருந்து காவிரியாற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கடந்த 9-ம் தேதி மாலை 4 மணியளவில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு பகுதியை வந்தடைந்தது. முதலில் 6000 கன அடியில் இருந்து 7000 கன அடியாக அதிகரித்த நீர்வரத்து இரவு 7 மணியளவில் விநாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. பின்னர் இரவில் தொடர்ந்து நீர்வரத்து சீராக அதிகரித்து நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. பின்னர் முற்பகலில் இது விநாடிக்கு 1 லட்சம் கன அடி என்ற நிலையை எட்டியது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஒகேனக்கல்லில் பிரதான அருவி, சினி பால்ஸ் அருவி, ஐவர் பாணி அருவி ஆகிய அருவிகள் வெள்ள நீரில் மூழ்கின. பிரதான அருவி, தொங்கும் பாலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் வழியான நடைபாதைக்கு மேல் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது.

மிதந்து வந்த மரங்கள்

கர்நாடகாவில் இருந்து தமிழக எல்லையான பிலிகுண்டுலு வரையிலான காவிரி ஆற்றின் ஓரப்பகுதிகளில் இருந்த காய்ந்த மரங்கள், முறிந்த கிளைகள் ஆகியவை வெள்ள நீரில் அடித்து வரப்பட்டன. இந்தக் கிளைகள் நீரில் மிதந்தபடி ஒகேனக்கல்லை நோக்கி சென்றன. சில கிளைகள் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் அமைந்துள்ள பகுதிகள், பரிசல் துறை, பிரதான அருவி உள்ளிட்ட இடங்களில் மரங்கள், பாறைகளில் சிக்கிக் கிடந்தன. பெருவெள்ளத்தால் வனப்பகுதி களில் இருந்த பாம்புகள், ஆமைகள் உள்ளிட்ட உயிரினங்களும் நீரில் அடித்து வரப்பட்டன.

வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள், காவிரி ஆறு ஆகியவற்றில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை அறிவித்துள்ளது. அதேபோல, பரிசல் இயக்கவும் தடை தொடர்கிறது. வெள்ளப்பெருக்கு குறைந்து இயல்பு நிலை அடையும் வரை ஒகேனக்கல் சுற்றுலாவை பொதுமக்கள் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

ஒலிபெருக்கி எச்சரிக்கை

காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை காண உள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களும், வெளியூர் பயணிகளும் ஒகேனக்கல் வருகின்றனர். அவர்கள் கவனக் குறைவாக ஆற்றோர பகுதிக்கு சென்று வெள்ளப்பெருக்கில் சிக்கி விடக் கூடாது என்பதால் முதலைப் பண்ணை, ஊட்டமலை, நாடார்கொட்டாய், ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முதலைப் பண்ணை எதிரிலும், நீரேற்று நிலையம் அருகிலும் போலீஸார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். மேலும், போலீஸார் ரோந்து வாகனம் ஒன்றில் ஒகேனக்கல் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து ரோந்துப்பணி மேற்கொண்டு பொதுமக்களை எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

மத்திய நீர் ஆணைய குழுவினர், பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் வெள்ளத்தின் அளவை சீரான இடைவெளியில் அளந்து தங்களின் உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி வருகின்றனர். அதன் அடிப் படையிலேயே மத்திய நீர் ஆணையம் காவிரிக் கரையோர மாவட்ட நிர்வாகங்களுக்கு போதிய எச்சரிக்கை தகவல்களை அவ்வப் போது அளித்து வருகிறது.

வருவாய், வனம், தீயணைப்பு, பொதுப்பணி உள்ளிட்ட அரசின் இதர துறையினரும் தொடர்ந்து காவிரியாற்றின் வெள்ள நிலவரம், கரையோர கிராம மக்களின் நடமாட்டம் ஆகியவற்றை கண்காணித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x