Published : 10 Aug 2019 09:17 PM
Last Updated : 10 Aug 2019 09:17 PM

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபியில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறியதாவது:

''இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 1 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தற்போது ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கூடுதலாக புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

முதலில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். பின்னர் படிப்படியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும். அடல் டிங்கர் லேப் திட்டம் ஒரு பள்ளிக்கு ரூ.20 லட்சம் செலவில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்களிடையே சீனா தொழில்நுட்பம் முறையில் விமானத்தை உருவாக்கும் ஆற்றலும், திறமையும் கற்றுத் தரப்படும் என்றார்.

ஈரோடு மாவட்டம் கணித மேதை ராமானுஜம் பிறந்த ஊராகும். அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் முதன் முதலாக தமிழ்நாட்டில் கோபியில் இச்செயலி தொடங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பாடத்தில் கணிதப் பாடப்பிரிவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கூட இன்ஜினீயரிங் படிக்கும் போது கணிதப் பாடத்தில் 21 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறாத நிலை உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தவிர்க்கும் பொருட்டு கணிதப் பாடத்தை ஆரம்பக் கல்வி முதல் எளிதாக கற்றுக்கொள்ளும் வகையில் ஆஸ்திரேலியா நாட்டு நிறுவனத்தின் சார்பில் இச்செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் 45 லட்சத்து 72 ஆயிரம் இலவச மடிக்கணினிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன். 11, 12-ம் வகுப்பு படிக்கும் போதே தற்போது மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. 2017- 2018 ஆம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் விரைவில் வழங்கப்படும்.

6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான 20 லட்சம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டேப் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும், மாணவ, மாணவிகள் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கு வசதியாக 2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகள் தேர்ந்தெடுத்து சாப்ட்வேர் மூலமாக டவுன்லோடு செய்து தரப்படும்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மாணவ, மாணவிகள் க்யூ ஆர் கோடு மூலமாகப் படிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வு நேரத்திலும் பாடத்தைப் படிக்க முடியும்’’.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x