Published : 10 Aug 2019 06:46 AM
Last Updated : 10 Aug 2019 06:46 AM

நீலகிரி மாவட்டத்தை புரட்டி எடுக்கும் கன மழை; அவலாஞ்சியில் ஒரே நாளில் 91 செ.மீ. மழை பதிவு: பொள்ளாச்சியில் காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன

நீலகிரி மாவட்டம், நஞ்சநாடு கப்பத்தொரை பகுதியில் விளைநிலங்களை சூழ்ந்துள்ள வெள்ளம்.

ஆர்.டி.சிவசங்கர் / எஸ்.கோபு

உதகை / பொள்ளாச்சி

வரலாறு காணாத வகையில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 91 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு தொடக்கத்தில் சரிவர பெய்யாத நிலையில், கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்தது. இடைவிடாமல் பெய்து வருவதால், 1௦ ஆண்டு களுக்குப் பிறகு நீலகிரியில் அதிக அளவு மழை பதிவானது. தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில்தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.

‘ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் அங்கு அதி கனமழை பெய்து வருகிறது. இந்த வார இறுதி வரை மழை தொடரும். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 230 செ.மீ. மழை பதிவாகி யுள்ளது. இதுவே, தமிழகத் தில் கடந்த 76 ஆண்டுகளில் அதிகபட்ச மழை பதிவு' என்று தனியார் வானிலை ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் முகாமிட்டுள்ள வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலிடம் கேட்டபோது, ‘அவலாஞ்சியில் நேற்று முன்தினம் 82 செ.மீ., நேற்று 91 செ.மீ. மழை பதிவானதுதான் அதிகபட்சம். இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம்’ என்றார்.

அமைச்சர் ஆய்வு

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் மழை காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களை வரு வாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேற்று ஆய்வு செய்தார். முத்தோரை பாலாடா பகுதியில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்த அவர், ஓம்பிரகாஷ் பள்ளியிலுள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களில், 4 வட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் 233 பகுதிகள் பாதிக்கப்பட்டவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

155 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, 26 நிவாரண மையங்கள் தொடங்கப்பட்டு, அதில் 1,706 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்பில் இருந்து 2,400 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்தைவிட 25 சதவீதம் கூடுதலாக மழை பெய்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

6 பேர் உயிரிழப்பு

உதகை அருகே இத்தலார் வினோபாஜி நகரில் நேற்று முன்தினம் வீட்டின் மீது மண் சரிந்து விழுந்து சென்னி (70) என்ற முதியவர் உயிரிழந்தார். இந்நிலையில், குருத்துக்குளி கிராமத்தில் நேற்று பணிக்குச் சென்று திரும்பிய விமலா, சுசீலா ஆகிய இரு பெண்கள், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். தீயணைப்புத் துறையினர் போராடி அவர்களின் உடல்களை மீட்டனர்.

கூடலூர் அருகே நடுவட்டம் இந்திரா நகரில் வீட்டின் மீது மண் சரிந்ததில், அமுதா, அவரது மகள் பாவனா (10) உயிரிழந் தனர். காயமடைந்த மகன் லோகேஸ் வரன் (12), உதகை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார்.

மஞ்சூர் அருகே காட்டுக்குப்பை பகுதியில் மின்வாரிய ஒப்பந்தப் பணி மேற்கொண்டிருந்தபோது, மண் சரிந்து விழுந்ததில் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சஜீவ் (30) உயிரிழந்தார்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி சர்க்கார்பதி மின்உற்பத்தி நிலையம் அருகே கொழும்பன் மலை அடிவாரத்தில் நாகூர் ஊத்து-2 என்னும் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் 22 வீடுகளில் 60-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கொழும்பன் மலையில் கனமழை கொட்டித்தீர்த்தது. மலையில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. நாகூர் ஊத்து-2 கிராமத்தில் வெள்ளம் புகுந்ததால், மலைவாழ் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி மேடான பகுதிகளுக்குச் சென்றனர். அங்கு வசித்துவந்த குஞ்சப்பன் (36), மனைவி மற்றும் 7 குழந்தைகளுடன் வெள்ளத்தை கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவருடைய பெண் குழந்தை சுந்தரி (2) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாள். வனத்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

காட்டாற்று வெள்ளத்தில் நாகூர் ஊத்து கிராமத்தில் இருந்த 22 வீடுகளில் 19 வீடுகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x