Published : 08 Aug 2019 10:27 AM
Last Updated : 08 Aug 2019 10:27 AM

திருட்டு சம்பவங்களை தடுக்க வங்கி நிர்வாகத்தினர் ஏடிஎம் மையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: காவல்துறையினர், சமூகஆர்வலர்கள் வலியுறுத்தல்

டி.ஜி.ரகுபதி

கோவை

திருட்டு சம்பவங்களை தடுக்க, ஏடிஎம் மையங்களில் பாதுகாவலர் கள் நியமித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வங்கி நிர்வாகத்தி னருக்கு காவல் துறையினர், சமூகஆர்வலர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 10 முதல் 15 ஆண்டு களுக்கு முன்பு வரை, ஏடிஎம் (பணம் எடுக்கும் இயந்திரம்) மையங்களின் பயன்பாடு குறைந்த அளவிலேயே இருந்தன. ஆனால், தற்போதைய சூழலில் ஏடிஎம் மையங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அதன் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

‘‘ஒவ்வொரு ஏடிஎம் மையங் களிலும் ரூ.10 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை தொகை இருப்பு வைக்கப்படுகிறது. மாவட்டத்தில் சில மையங்களை தவிர, பெரும் பாலான ஏடிஎம் மையங்களில் பாதுகாவலர்கள் இல்லை. இதை பயன்படுத்தி மர்மநபர்கள் ஏடிஎம் மையங்களுக்குள் சென்று அந்த இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி தகவல்களை திருடுதல், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். வங்கி நிர்வாகத்தினர், தங்களது ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாவலர்களை நியமிப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர்,’’ என சமூகஆர்வலர்கள் தரப்பில் புகார்கள் கூறப்படுகின்றன.

மாநகர, மாவட்ட காவல்துறை யினர் தரப்பில் கூறும் போது,‘‘கடந்த சில மாதங்களில் சரவணம்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இச்சம்பவங்கள் அனைத்தும் பாதுகாவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்களில் நடந்தவை ஆகும். ஏடிஎம் மையங்களில் அலாரம் இருந்தாலும், திருடன் அந்த அலார இணைப்பை துண்டித்துவிட்டு, திருடிச் செல்லவும் வாய்ப்புகள் உள்ளன. திருட்டு சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வங்கி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும்,’’ என்றனர்.

மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் கூறும் போது,‘‘ஏடிஎம் மையங்களில் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும், சிசிடிவி கேமரா வசதி முறையாக இருக்க வேண்டும், அலாரம் வசதி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏடிஎம் மைய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும், வங்கி அதிகாரிகளுடனான கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது,’’ என்றார்.

நேரடி ஆய்வு தேவை

கோவை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வெங்கட்ரமணன் கூறும் போது,‘‘கோவை முழுவதும் 2,300 ஏடிஎம் மையங்கள் உள்ளன. ஏடிஎம் மையங்களில் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும், ஏடிஎம் மையத்துக்குள் இரண்டு, வெளியே நுழைவாயில் இருந்து குறிப்பிட்ட மீட்டர் தூரத்தை கண்காணிக்கும் வகையில் ஒன்று என குறைந்தபட்சம் 3 சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும், அந்த காட்சிகளை முறையாக பதிவு செய்ய வேண்டும். ஏடிஎம் மையங்களில் அவ்வப்போது வங்கி நிர்வாகத்தினர் நேரடி ஆய்வு நடத்த வேண்டும். அலாரம் வசதியை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்டவை தொடர்பாக மாவட்ட முன்னோடி வங்கி மூலம், மற்ற வங்கி நிர்வாகத்தினருக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x