Last Updated : 07 Aug, 2019 04:41 PM

 

Published : 07 Aug 2019 04:41 PM
Last Updated : 07 Aug 2019 04:41 PM

கேரள மழை எதிரொலி; தேனி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

கேரள - தமிழக எல்லையான குமுளியில் இன்று தொடர் சாரல் மழை பெய்தது.

கேரளாவில் பெய்யும் மழையினால் நீர்வரத்தும், அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஜூனில் எதிர்பார்த்த தென்மேற்குப் பருவமழை தவறியதால் பெரியாறு அணை நீர்மட்டம் பெரியளவிற்கு உயரவில்லை. இதனால் முதற்போக சாகுபடிக்கு அணை திறக்கப்படவில்லை. நீரை எதிர்பார்த்திருந்த விவசாயிகள் ஏமாற்றத்துடன் நிலங்களை தரிசாகவே விட்டுவிட்டனர்.

இந்நிலையில் ஒவ்வொரு முறையும் வானிலை ஆராய்ச்சி மையம் மழை குறித்த தகவல்களை வெளியிட்டு வந்தது. கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அறிவிப்பில் கூறியபடி மழை இல்லாததால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் வருத்தத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கேரளப் பகுதியில் தொடர் மழை பெய்யத் துவங்கியது.

மலப்புரம், இடுக்கி, கோழிக்கோடு உள்ளிட்ட பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மேலும் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் இதே நிலை இருப்பதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

நேற்று தேக்கடியில் 44மி.மீட்டரும், பெரியாறு அணைப்பகுதியில் 81.4 மி.மீட்டர் அளவிற்கும் மழைப் பொழிவு இருந்தது.

இதனால் அணைக்கு நீர்வரத்து 1,428கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்றைய நீர்வரத்து 496கனஅடியாகவும், அதற்கு முன்தினம் 105அடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அணையில் நீரின் அளவு 113.40அடியில் இருந்து 114.10அடியாக உயர்ந்துள்ளது. இதே போல் கூடலூரில் 20, உத்தமபாளையம் 8.3 மிமீட்டர் மழை பெய்தது.

வைகைஅணையைப் பொருத்தளவில் வினாடிக்கு 168 கனஅடிநீர் வரத்து இருந்தநிலை மாறி தற்போது 214 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் 31-க உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்தும், அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்தும் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x