Published : 23 Jul 2015 05:41 PM
Last Updated : 23 Jul 2015 05:41 PM

தலைமைச் செயலகமே அதிமுகவின் கட்சி அலுவலகம் ஆகிவிட்டதா?- கருணாநிதி கேள்வி

தாய்மார்களைக் கவலைப்பட வைக்கும் குடிநீர்ப் பிரச்சினை பற்றியா எங்களுக்கு அக்கறை என்று கேட்கின்ற ஆட்சியாகத் தான் இன்றைய ஆட்சி காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

மேலும், ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் முதலமைச்சர் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து நாடாளுமன்றத்தில் எப்படிப் பேசவேண்டுமென்று விவாதிப்பது முறை தானா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' "12 ஆண்டுகளுக்குப் பின் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு" என்ற தலைப்பில் ஒரு நாளிதழ் 22-7-2015 அன்று இரண்டு பக்கங்களுக்கு பல்வேறு செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ளது.

நான் கடந்த பிப்ரவரி மாதத்திலேயே 24-2-2015 அன்று கேள்வி - பதில் பகுதியில் "அதிமுக ஆட்சியில் குடிநீர் வழங்கும் திட்டங்களுக்காக போதிய அக்கறை செலுத்தப்படவில்லை என்று சொல்லப்படுகிறதே?" என்ற கேள்விக்கு அளித்த பதிலில், "நான் ஒரு புள்ளி விவரம் கூறுகிறேன்; அதிலிருந்தே எந்த அளவுக்கு அதிமுக ஆட்சியினர் குடிநீர்ப் பிரச்சினையிலே அக்கறையோடு இருந்து வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பாக திமுக ஆட்சியில் 2008-2009ஆம் ஆண்டில் 289.88 கோடி ரூபாய்ச் செலவில் 50 நகர்ப்புறக் குடிநீர்த் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 2012-2013ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் 15.77 கோடி ரூபாய்ச் செலவில் 7 நகர்ப்புறக் குடிநீர்த் திட்டங்கள் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கிராம அளவில் உள்ள திட்டங்கள் என்று பார்த்தால்கூட, கிராமப் புற மக்களுக்குக் குறைந்தது நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 40 லிட்டர் தண்ணீர் கொடுக்கப்பட வேண்டும். தமிழகத்திலே உள்ள மொத்தம் 98,179 குடியிருப்புகளில், 40 லிட்டர் அளவுக்கு தண்ணீர் கொடுக்கப்படுவது 76,704 குடியிருப்புகளுக்கு மட்டுமே! மீதமுள்ள 21,475 குடியிருப்புகளுக்குப் போதுமான அளவுக்கு குடிதண்ணீர் வழங்கப்படவில்லை.

இந்த விவரங்களை நான் கூறவில்லை. தமிழக அரசின் புள்ளிவிவரத் துறை தயாரித்து கொடுத்துள்ள 2014ஆம் ஆண்டுக்கான புத்தகத்திலே காணப்படும்விவரங்கள் தான் இவை.

இது ஒரு புறம் இருக்க; வரும் கோடையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படப் போகும் அபாயம் பற்றி அடிக்கடி நாளிதழ்கள் சுட்டிக்காட்டி வருகின்றன. இதையெல்லாம் கவனிக்கஅதிமுக ஆட்சியினர்க்கு எங்கே நேரம் இருக்கிறது? பிரார்த்தனை, ஹோமம், யாகம், அங்கப்பிரதட்சனம், அர்ச்சனை, மண்சோறு, வேப்பிலை ஆடை என்றல்லவா காலம் கழிந்து கொண்டிருக்கிறது. இதற்கென வசூலும் கொடி கட்டிப் பறக்கிறது"என்று குறிப்பிட்டிருந்தேன்.

நான் குறிப்பிட்டவாறே, இந்தப் பிரச்சினை பற்றி ஆளுங்கட்சியினர் எதுவும் கவனிக்காமல் இருந்து விட்டு, தற்போது நாளிதழ்கள்ன்குடிநீர்த் தட்டுப்பாடு பற்றி செய்தி வெளியிட்டதும், அந்தத் துறையின் அமைச்சர் அதிகாரிகளை அழைத்துப் பேசி குடிநீர்ப் பற்றாக்குறை பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொண்ட பிறகு, குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது வேண்டுகோள் விடுக்கும் அமைச்சர் இத்தனை நாட்கள் எங்கே விடுப்பில் போய் இருந்தார்? எந்தக் கோயில் வாசலில், ஜெயலலிதாவின் விடுதலைக்காக யாகம் வளர்த்துக் கொண்டிருந்தார்?

சென்னையில், 2003இல் இருந்த குடிநீர்ப் பிரச்சினை தற்போது எழுந்துள்ளதாகவும், முடிந்த அளவு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க முயல்வதாகவும் சென்னை குடிநீர் வாரியமே குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு ஒப்புதல் வாக்குமூலம்கொடுத்துள்ளது.

சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் "சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு 15 ஆண்டு களில் இல்லாத அளவுக்குக் குறைந்துவிட்டது. தற்போதைய இருப்பு மொத்த கொள்ளளவில் 10 சதவிகிதம் தான்"என்று தெரிவித்துள்ளனர். இதிலிருந்தே குடிநீர்ப் பிரச்சினை எவ்வளவு பெரிதாக எழுந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சென்னை குடிநீர் வாரியம் முன்பு 83 கோடி லிட்டர் குடிநீரை விநியோகித்தது. ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக 55 கோடி லிட்டர் குடிநீர் தான் நகர் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதற்கும் சிக்கல் வந்து விட்டது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் பல பகுதிகளுக்கு தண்ணீர் விடப்படுகிறது. தாய்மார்கள் காலிக் குடங்களுடன் குடிநீருக்காக அலையும் அவல நிலை தான்தற்போது எங்கும் நிறைந்துள்ளது.

திமுக ஆட்சியில் நெம்மேலியில் தொடங்கப்பட்ட கடல்நீரைக் குடி நீராக்கும் நிலையம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. ஆனால் அதற்கு அருகே, அதிமுக ஆட்சியில் 2013இல் அறிவிக்கப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் இரண்டு நிலையங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை. மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்பட்ட நிலையிலேயே தொங்கலில் உள்ளது.

சென்னையின் நீராதாரமான ஏரிகளில் நீர் இருப்பு கவலைக்கிடமாக உள்ளது . சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வேகமாக வறண்டு வருகின்றன. இதில் சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டு விட்டது. வீராணம் ஏரியிலும் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் தான் உள்ளது. தற்போது அங்கிருந்து தான் சென்னைக்கு தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வருவதும் நின்று விட்டதால், பூண்டி ஏரியின் நீர் மட்டம் 52 மில்லியன் கன அடியாகக் குறைந்து விட்டது.

"குடிநீரை அதிக விலை கொடுத்துப் பொது மக்கள் வாங்குகிறார்கள். வளசரவாக்கம் பகுதியில் ஒரு குடம் தண்ணீர் ஆறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது" என்று ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை நகரில், தியாகராய நகர் பகுதியில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகவும், சிறிதளவு கிடைக்கும் குடிநீர்த் தொட்டித் தண்ணீரும் ஓட்டலுக்கு விற்கப்படுவதாகவும் செய்தி வந்துள்ளது. பல்லாவரம் நகராட்சிப் பகுதிகளில் தேவையான அளவு குடிநீர் கிடைக்காததால், 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் கிடைக்கிறதாம்.

கடந்த சில தினங்களாக தொடரும், சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டையில் வயிற்றுப் போக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. புளியந்தோப்புப் பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறதென்று கூறி, குடிநீர் வாரிய அலுவலகத்தையே பொது மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இவ்வாறு ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் குடிநீர்த் தட்டுப்பாட்டின் விளைவுகள் பற்றித் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், அதிமுக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? அமைச்சர் தற்போது தான் அதிகாரிகளை அழைத்துப் பேசுகிறார்!

அரை மணி நேரம் மட்டுமே நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க என்ன வழி என்று பேசப்பட்டதா? வீடியோ கான்ஃப்ரன்ஸ்மூலமாக ஜெயலலிதா ஏதாவது குடிநீர்த் திட்டங்களைத் திறந்து வைத்தாரா? அப்படி இல்லாவிட்டாலும், அரசு செய்தி வெளியீடாகத் தருவதற்காகவாவது ஏதாவது செய்யப்பட்டதா?

ஐந்து நாட்களுக்கு ஒரு முறையோ, பத்து நாட்களுக்கு ஒரு முறையோ முதலமைச்சர் தலைமைச் செயலகத்திற்கு வருவார்; அப்படி ஒரு நாள் வரும்போதும் அதிகப் பட்சம் அரை மணி நேரம் மட்டுமே இருப்பார்; அந்த அரை மணி நேரத்தில், அமைச்சரவைக் கூட்டம், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், ஐந்தாறு திட்டங்களுக்கு தொடக்க விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்!

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை யெல்லாம் தலைமைச் செயலகத்திற்கே அழைத்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினாராம்! மாநிலத்திலே உள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையெல்லாம் அழைத்து முதலமைச்சர், நம் மாநிலத்திற்குத் தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவதற்காக, தலைமைச் செயலகத்திலே கூட்டம் நடத்தலாம். ஆனால் ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் முதலமைச்சர் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து நாடாளுமன்றத்தில் எப்படிப் பேசவேண்டுமென்று விவாதிப்பது முறை தானா?

இல்லை, இந்த ஆட்சியில் தலைமைச் செயலகமே அதிமுக வின் கட்சி அலுவலகம் ஆகி விட்டதா? இதைப்பற்றி யெல்லாம் கவலைப்பட யாருக்கும் நேரமில்லை. தாய்மார்களைக் கவலைப்பட வைக்கும் குடிநீர்ப் பிரச்சினை பற்றியா எங்களுக்கு அக்கறை என்று கேட்கின்ற ஆட்சியாகத் தான் இன்றைய ஆட்சி காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறது.

குடிநீர்த் தட்டுப்பாடு வரக்கூடுமென்று நான் பிப்ரவரி மாதத்திலேயே எச்சரித்த போதே நடவடிக்கை எடுத்திருந்தால், இந்தக் குடிநீர்த் தட்டுப்பாடு ஓரளவாவது தடுக்கப்பட்டிருக்கலாம் அல்லவா? நீ யார் சொல்ல, நான் யார் கேட்க என்று அலட்சியமாக நடந்து கொண்டால், இந்த ஆட்சியாளர்கள் பதவியை விட்டுப் போவதற்குள், மக்கள் மேலும் பல கொடுமைகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x