Published : 06 Aug 2019 05:45 PM
Last Updated : 06 Aug 2019 05:45 PM

விண்வெளிக்கு செயற்கைக்கோள்: சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை!

'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' வழிகாட்டுதலின் பேரில், 'நாவலர் செயற்கைக்கோள்' என்ற 30 கிராம் எடையிலான செயற்கைக்கோளை, சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்ற அமைப்பு விக்ரம் சாராபாய் விண்வெளி சவால் என்ற போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. அதில், 30 கிராம் எடையில் சிறிய வகை செயற்கைக்கோள் ஒன்றை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தயாரித்து, அதை விண்ணில் ஏவும் விதமான திட்டத்தை அறிவித்தது.

இப்போட்டிக்கென, சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தமிழ்பாரதி, பாலமுருகன், ராகுல், ஜெயந்த் நாராயணன் ஆகியோர் பள்ளியின் செயலாளர் மற்றும் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் . 30 கிராம் எடையில் செயற்கைக்கோள் ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கினர். அது குறித்த வீடியோ பதிவை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தனர். இதில், நாவலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் தேர்வாகியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் வேல்பிரகாஷ், ''மாணவர்கள் உருவாக்கிய நாவலர் செயற்கைக்கோளில், எழுதுவதற்காகப் பேனாவில் ஊற்றும் மையை நிரப்பி அனுப்ப உள்ளனர்.

என்ன காரணம்?

வான்வெளி சூழலில், மையில் ஏற்படும் மாற்றத்தை ஆராய்வதன் மூலம் இரண்டு நன்மைகள் கிடைக்கும். ஒன்று, விண்வெளியில் எழுதும் எழுதுகோள் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றித் தெரிய வரும். (புவியீர்ப்பு விசை இருக்காது என்பதால் விண்வெளியில் பேனாவைப் பயன்படுத்த முடியாது)

இரண்டு, அந்த மையில் ஏற்படும் நிற மாறுபாடு மற்றும் படிக அளவிலான மாறுபாடு ஆகியவை மூலம் விண்ணில் மிதக்காமல், கரையும் வகையிலான செயற்கைக்கோளை உருவாக்க இயலும்'' என்று தெரிவித்தார்.

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சார்பில் ஆகஸ்ட் 11-ல் காஞ்சிபுரம் மாவட்டம் சிறுசேரியில் உள்ள ஸ்பேஸ் போர்ட் இந்தியா வளாகத்தில், ராட்சத பலூன் உதவியுடன் இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

க.சே. ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x