Published : 06 Aug 2019 12:06 PM
Last Updated : 06 Aug 2019 12:06 PM

புதிய கல்விக் கொள்கை வருத்தம் அளிக்கிறது: இயக்குநர் சமுத்திரக்கனி

புதிய கல்விக் கொள்கை வருத்தம் அளிக்கிறது என்று இயக்குநர் சமுத்திரக்கனி கருத்து தெரிவித்துள்ளார்.

கோவையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, ''புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா சொன்னது சரிதான். ஏனெனில், கிராமப்புறங்களில் இருந்து வரும் நிறைய மாணவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர்களுக்கான விஷயத்தையும் முறையாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தலாம்.

எல்லோருக்கும் ஒரே கல்வியைக் கொடுத்துவிட்டு, எல்லோருக்கும் ஒரே தேர்வை வையுங்கள் என்பதைத்தான் அப்போதும் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். புதிய கல்விக் கொள்கை குறித்துப் பேசுவதால் பிரச்சினை ஒன்றும் இல்லை. 

அரசியல்வாதிகளின் வீட்டுப் பிள்ளைகளும் அதேதானே படிக்கிறார்கள். எல்லோர் வீட்டுக் குழந்தைகளுக்கும் அதே பிரச்சினை இருக்கிறது. எல்லோருக்குள்ளும் அந்த வருத்தம் இருக்கிறது. அதைச் சரிசெய்ய யார் பேசுவது? சூர்யா ஆரம்பித்து வைத்திருக்கிறார். நாம் எல்லோரும் பேசி அதைச் சரிசெய்ய வேண்டும்.  

மாணவர்கள் மத்தியில் தற்போது சாதி உணர்வு வளரத் தொடங்கியிருக்கிறது. கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், கையில் சாதியைக் குறிக்கும் வகையில் கயிறு கட்ட ஆரம்பித்துள்ளனர். இந்த ஆபத்தான போக்கு பள்ளி, கல்லூரிகளில் புகுந்துவிட்டது. சாதியைத் தள்ளி வைத்துப் பயணிக்க வேண்டும்'' என்றார் சமுத்திரக்கனி.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டுவிழாவில் பேசிய நடிகர் சூர்யா, தேசியக் கல்விக் கொள்கையின் புதிய திட்டங்கள் 3 வயதிலே மும்மொழிக் கல்வியைத் திணிப்பதாகவும் ஆசிரியரே இல்லாமல் நீட் தேர்வு எழுதுவது எப்படி என்றும் விமர்சித்தார். 

சூர்யாவின் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பும் ஆதரவும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x