Published : 06 Aug 2019 10:12 AM
Last Updated : 06 Aug 2019 10:12 AM

நெருக்கடியில் தேயிலை விவசாயம்!

ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குவது தேயிலை விவசாயம். குன்னூர், கோத்தகிரி, குந்தா வட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கரிலும், கூடலூர், பந்தலூர் வட்டங்களில் 20 ஆயிரம் ஏக்கரிலும், டான்டீயில் 4 ஆயிரத்து 311 ஹெக்டரிலும் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.

இதுதவிர, பல விவசாயிகள் வருவாய் நிலங்களிலும், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் செக்சன் 17 நிலங்களிலும் தேயிலை பயிரிட்டுள்ளனர். மொத்தத்தில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளதாக சிறு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதில் சாகுபடி செய்யப்படும் பசுந்தேயிலை 180 தனியார் தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு, டீத்தூள் உற்பத்தி செய்யப்படுகிறது.  இந்த தொழிலில் சுமார் 60 ஆயிரம் 
சிறு மற்றும் குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலை பயிரிடப்பட்டதால், காய்கறி, சிறு தானியங்கள் சாகுபடி  குறைந்து, அவற்றுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. தேயிலை வாரியம், தொழிற்சாலைகள் தொடங்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியதன் மூலம் தேயிலை தொழில் செழிப்படைந்தது.

ஆனால், கடந்த பத்தாண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்திக்கான மூலப்பொருளான பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காததால், தேயிலை விவசாயிகள் பல்வேறு  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  நலிவடைந்த பல விவசாயிகள் தங்கள் தோட்டங்களை விற்று, பிழைப்பு தேடி பிற மாவட்டங்களுக்கு இடம் பெயர வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பல தோட்டங்கள் தற்போது கட்டிடங்களாக மாறி,  சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

ஊதியம், ஆட்கள் பற்றாக்குறை...

இது ஒருபுறம் இருக்க, தற்போது தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய ஆட்கள் கிடைப்பதில்லை. தேயிலைத் தோட்டங்களைக்  காட்டிலும்,  தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணிகளில் ஊதியம் அதிகமாக கிடைப்பதால், பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள்  ஊரக வேலைவாய்ப்பு பணிகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர் என்கிறார் தேயிலை சாகுபடியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மஞ்சை வி.மோகன்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "பசுந்தேயிலை விலையில் வீழ்ச்சி ஏற்பட்ட பின், பெரும்பாலான சிறு விவசாயிகள் தங்களது தோட்டங்களை வெளியாட்களுக்கு விற்பனை செய்துவிட்டு,  வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர். குறிப்பாக, திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களுக்குச் சென்று, அங்கேயே குடியேறிவிட்டனர். பெரும்பாலான விவசாயிகள்,  அங்குள்ள தொழிற்சாலைகளிலும், நிறுவனங்களிலும் தற்போது பணியாற்றி வருகின்றனர்.

அரை ஏக்கர் நிலத்தை வைத்துள்ளவர்கள்,  தங்களது தோட்டத்தில் மாதந்தோறும் உழைத்து கிடைக்கும் பணத்தைவிட,  ஆண், பெண் என இருவரும் நிறுவனத்தில் பணியாற்றினால்,  அதைவிட இருமடங்கு ஊதியம் கிடைப்பதால், சிறு விவசாயிகள் தங்களது தோட்டங்களை விற்பனை செய்துவிட்டு, நீலகிரியிலிருந்து வெளியேறிவிட்டனர்.

தாழ்வான மற்றும் தண்ணீர் வசதியுள்ள விவசாய நிலங்களில் மட்டுமே சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. விவசாய நிலங்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் பணிக்குச்  சென்றால் குறைந்த அளவே கூலி கிடைக்கும் என்பதால், பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் மற்றும் சிறு விவசாயிகள் தற்போது தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

தேயிலைத் தோட்டங்களில் தினக்கூலியாக  ரூ.80 முதல் ரூ.100 வரை மட்டுமே ஊதியமாக கிடைக்கிறது. அதேசமயம், காலை 9 மணிக்குச்  சென்று, மாலை 5 மணி வரை மட்டுமே ஊரக வேலை வாய்ப்புத்  திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், பெண் தொழிலாளர்களுக்கு அதிக பணிகளும் கிடையாது. உடல் உழைப்பு குறைவாகவே உள்ளது. எனினும், இவர்களுக்கு ரூ.100-க்கு மேல் கூலி கிடைப்பதால், தற்போது பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் இந்தப் பணிகளுக்கு செல்லத் தொடங்கிவிட்டனர். இதுமட்டுமின்றி, இந்த பணிகள் மாதம் முழுவதும் மேற்கொள்ளப்படுவதால்,  குடும்பத்தை  நடத்தத் தேவையான தொகையும் தாராளமாகக் கிடைத்துவிடுகிறது. அதனால்தான், தேயிலைத் தோட்டங்களில் பணியாற்ற கூலித் தொழிலாளர்கள் கிடைப்பது மிகவும் சிரமமாகிவிட்டது" என்றார்.

அரசு உதவ வேண்டும்!

சிறு விவசாயிகளின் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, தோட்ட அதிபர்களும் பல்வேறு நெருக்கடிகளில் தவிப்பதாக தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத் தலைவர் ஏ.ஈ.ஜோசப் தெரிவித்தார். அவர் கூறும்போது, "150 ஆண்டுகளாக உள்ள தென்னிந்திய தோட்டங்களுக்கு சவாலான நேரம் இது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு  வாழ்வாதாரமாக திகழும் தேயிலைத் தோட்டங்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளன. பிற மாநிலங்களைக் காட்டிலும் தென் மாநிலங்களில்தான் தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது.

தாராளமயமாக்கல் காரணமாக சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது.  தேயிலை, காபி, ரப்பரின் விற்பனை விலை, உற்பத்தி விலையைவிட குறைவாகவே உள்ளது. தோட்டப் பயிர்கள் தொடர்பாக 1995-ம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி நெல்லுக்கான விலை 4.8 மடங்கு உயர்ந்துள்ளது. சோளத்துக்கு 5.67 மடங்கு, கோதுமைக்கு 4.84 மடங்கு, பருப்பு வகைகளின் விலை 6 முதல் 8.72 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், தேயிலையின் விலை மட்டும் 2.46 மடங்கு மட்டுமே உயர்ந்துள்ளது. காபியில் அராபிக்கா விலை 1.92 மற்றும் ரோபஸ்டா விலை 1.58 மடங்கும், ரப்பரின் விலை 2.47 மடங்கும் மட்டுமே உயர்ந்துள்ளது. 

அதேசமயம், இதே காலகட்டத்தில் தேயிலை தொழிலாளர்களின் ஊதியம் 7.69 மடங்கு உயர்ந்துள்ளது. காபி தொழிலாளர்கள் ஊதியம் 9.72 மடங்கு மற்றும் ரப்பர் தொழிலாளர்களின் ஊதியம் 8.2 மடங்கு உயர்ந்துள்ளது. 

நிலத்தை மேம்படுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும் பெரும் முதலீடு தேவைப்படுகிறது. ஆனால், இது சாத்தியமில்லாமல் போய்விட்டது. நோய், பூச்சித்  தாக்குதலை எதிர்கொள்ளவும், வறட்சியைத் தாங்கி, மகசூல் அதிகமாக கிடைக்கும் பயிர் வகைகளே தற்போதைய தேவை.  மேலும், ஆட்கள் பற்றாக்குறையால், இயந்திரங்களின் தேவையும் அதிகரித்துவிட்டது.
விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேசமயம், தேயிலைத் தோட்டங்களில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை சமாளிக்க அரசு உதவ வேண்டும்" 
என்றார்.

இயந்திரமயமாக்கல் உதவும்!

ஆட்கள் பற்றாக்குறைப் பிரச்சினையைப் போக்க, மானிய விலையில் மினி டிராக்டர் மற்றும் டில்லர் இயந்திரம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, "தற்போது காய்கறி பயிர்கள் சாகுபடி விவசாயிகளுக்கு சவாலானதாக மாறி வருகிறது. விவசாயப் பணிகளை மேற்கொள்ள தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது.  பல்வேறு காரணங்களால் தொழிலாளர்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, சாகுபடி செலவைக் குறைக்கவும், பணிகளை சுலபமாக்கவும், ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்கவும் தற்போது விசை உழுவை, மினி டிராக்டரை தோட்டக்கலைத் துறை அறிமுகம் செய்துள்ளது.

சராசரியாக ஒரு ஏக்கர் உழவு செய்து,  மண் கட்டிகளை உடைத்து, நிலத்தை தயார் செய்யும் பணிக்கு ரூ.7 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், இதே பணியை விசை உழுவை வைத்து  (பவர் டில்லர்) மேற்கொள்ளும்போது 
ரூ.4 ஆயிரம் மட்டுமே செலவாகும். பவர் டில்லரை இயக்குவதும் மிகவும் எளிது. இதன் மூலம் ஆட்கள் பற்றாக்குறையையும் சமாளிக்கலாம்.

பவர் டில்லரை வாங்க மானியமாக ரூ.4 ஆயிரம் அல்லது பவர் டில்லரின் விலையில் 25 சதவீதம், இதில் எது குறைவோ அந்த தொகை  விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படும். மினி டிராக்டர்கள் வாங்க அரசு மானியமாக ரூ.45ஆயிரம் அல்லது மினி டிராக்டரின் விலையில் 25 சதவீதம், இதில் எது குறைவோ அந்த தொகை  மானியமாக வழங்கப்படும். இதனுடன் விவசாயிகள் ஒரு இழுவை வாங்கி இணைத்து அறுவடை செய்த விளைபொருட்கள் மற்றும் பசுந்தேயிலை முதலியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லவும் முடியும். இதில் உழவு செய்யும் கருவியை இணைத்து,  உழவும் மேற்கொள்ளலாம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x