Published : 05 Aug 2019 04:19 PM
Last Updated : 05 Aug 2019 04:19 PM

அதிமுகவா, அ.இ.பாஜகவா?- ஸ்டாலின் விமர்சனத்துக்கு பாஜக பதிலடி

மத்திய அரசின் 370 சட்டப்பிரிவு ரத்தை ஆதரிப்பதால் அதிமுக என்ற பெயரை  அகில இந்திய பாஜக  என்று இனி மாற்றிக்கொள்ளலாம் என்ற ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

மாநிலங்களவையில் இன்று (திங்கள்கிழமை) கடும் அமளிக்கு இடையே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ''ஜம்மு காஷ்மீர் மக்களுடைய ஒப்புதலைப் பெறாமல், சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து, ஒரு ஜனநாயகப் படுகொலையை இன்றைக்கு அரங்கேற்றி இருக்கின்றார்கள். மாநில அந்தஸ்தில் இருந்து லடாக், ஜம்மு காஷ்மீர் என யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது என்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்திற்கு விரோதமாக இச்செயல் அமைந்திருக்கின்றது. இப்படிப்பட்ட ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு அதிமுகவும் துணை போயிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

எனவே, அதிமுகவைப் பொறுத்தவரையில், அஇஅதிமுக என்ற பெயரை மாற்றி அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என்று வைத்துக் கொண்டால்தான் பொருத்தமாக இருக்கும்'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இதற்கு தமிழக பாஜக பதிலளித்துள்ளது. இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்கட்சி,

''கச்சத்தீவை காங்கிரஸ் தாரைவார்த்த பொழுது, நேருவின் மகளே வருக எனவும், இலங்கைப் படுகொலையின் பின் இந்திராவின் மருமகளே வருக என்றும் ஆரத்தி எடுத்த திமுக தலைவர், திமுகவின் பெயரை "அகில இந்திய திராவிட முன்னேற்ற காங்கிரஸ்" என்று மாற்றியதும் சொல்லுங்கள், பரிந்துரைப்போம்'' என்று தெரிவித்துள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x