Published : 05 Aug 2019 10:42 AM
Last Updated : 05 Aug 2019 10:42 AM

‘வனத்துக்குள் வண்டபுலி கிராமம்’- மழையை ஈர்க்க மரக்கன்று நடும் இளைஞர்கள் 

கிராமத்தைத் சுற்றி மரக்கன்று நடும் இளைஞர்கள்.

மதுரை

மழையை ஈர்க்க வறட்சிக்கு இலக்கான தங்கள் கிராமத்தைச் சுற்றி வனத்தை அமைக்கும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மதுரையில் இருந்து 65 கி.மீ. தொலைவில் பேரையூர் அருகே உள்ளது வண்ட புலி கிராமம். இந்த கிராமத்தில் சிறிய மலை உள்ளது. அந்த மலை மீது வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. அந்தக் கோயிலும், மலையும்தான் இந்த கிராமத்துக்கு சிறப்பு.

இந்த கிராமத்தில் 2 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அன்றாடக் கூலி வேலை பார்க்கிறார்கள். சிலர் விவசாயம் செய்கிறார்கள். கடந்த அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்த கிராமத்தில் விவசாயம் செழிப்பாக நடந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த கிராமம் மழைமறைவுப் பிரதேசமாக உள்ளது. பக்கத்து கிராமங்களில் பெய்யும் மழை இந்த கிராமத்தில் மட்டும் பெய்வதில்லை.

அதனால், படித்த இளைஞர்கள் திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்காக இடம் பெயர்ந்து வருகின்றனர். மழையில்லாமல் விவசாயம் பொய்த்துப்போனதால் விவசாயிகள் நூறு நாள் வேலைத் திட்டத்தில் கூலி வேலைக்குச் செல்கின்றனர்.

அதனால், வறட்சிக்கு இலக்கான வண்டபுலி கிராமத்தை செழிப்பாக மாற்ற இந்த ஊர் இளைஞர்கள் கிராமத்தைச் சுற்றி ஒரு வனப்பகுதியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிக்கு ‘வனத்துக்குள் வண்டபுலி கிராமம்’ என்று பெயரிட்டு வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை கிராமத்தைச் சுற்றி மரங்களை நடுகின்றனர்.

இது குறித்து இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:

மரங்கள் குறைவாக இருப்பதாலே எங்கள் கிராமத்துக்கு மழை பெய்யவில்லை என்று நினைக்கிறோம். மழையை ஈர்க்க கிராமத்தைச் சுற்றிலும் மரங்கள் நடுகிறோம். இளைஞர்களிடமும், பள்ளி மாணவர்களிடமும் மரங்கள் நட்டால்தான் மழை பெய்யும் என்ற எண்ணத்தை விதைக்க உள்ளோம். கிராமத்தைச் சுற்றிலும் மரங்களை நட்டு வளமாக்க உள்ளோம். அடுத்த ஒரு ஆண்டுக்குள் 500 மரக்கன்று கள் நட்டு, அதை மரங்களாக்கு வதான் எங்கள் இலக்கு.

இந்த மரக்கன்றுகளுக்கு முறை வைத்து தண்ணீர் ஊற்ற குழுக்கள் அமைத்துள்ளோம். விருப்பப்படுகிறவர்கள் வீடு முன்பும் மரக்கன்றுகள் வைக்க உள்ளோம். வேப்பமரம், புங்கமரம், ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட நாட்டு மரங்களை மட்டுமே நடுகிறோம்.

இத்திட்டத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் தொடங்கினோம். முதல் வாரம் 20 வேப்ப மரம், 2 ஆலமரம், ஒரு அரச மரத்தை நட்டுள்ளோம். முதற்கட்டமாக எங்கள் கிராமத்தை சுற்றி நடவுள்ள 500 மரங்களில் 100 புங்கன் மரங்களை நட்டு வளர்க்க உள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x