Published : 03 Aug 2019 08:39 PM
Last Updated : 03 Aug 2019 08:39 PM

ரயில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது திருநங்கைகளுக்கு போலீஸ் அறிவுரை

ரயில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொள்ளக்கூடாது என திருநங்கைகளுக்கு ரயில்வே போலீஸார் அறிவுரை கூறினர்.

ரயில் பயணங்களில் பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகளில் முக்கியமானது திருநங்கைகள். கும்பலாக வரும் சில திருநங்கைகள் கேட்கும் பணத்தைக் கொடுக்க வேண்டும், மறுத்தால் அனைவர் முன்பும் அவமானப்படுத்துவார்கள். சில இடங்களில் கும்பலாக பயணியைத் தாக்குவதும் உண்டு. கடந்த ஆண்டு வேலூரில் வட மாநில இளைஞர் ஒருவரை திருநங்கை தாக்கியதில் இளைஞர் ரயிலிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.

சில நேரங்களில் சில திருநங்கைகள் மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுவதும் உண்டு. திருநங்கைகள் இவ்வாறு நடப்பது குறித்து போலீஸாருக்கு புகார்கள் அடிக்கடி வருவதுண்டு. இதையடுத்து திருநங்கைகளுக்கு வழிகாட்டும் விதமாக திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை எழும்பூர் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்தில் நடத்தப்பட்டது.

ரயில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் திருநங்கைகள் நடந்து கொள்ளக்கூடாது என்று ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவு ரயிலில் பயணிகளுக்குத் தொல்லை கொடுத்த புகாரில் திருநங்கைகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் ரயில் பயணிகளுக்குத் தொல்லை கொடுக்கும் விதத்தில் நடக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை எழும்பூர் ரயில்வே பாதுகாப்புப் படை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை எழும்பூர் ரயில்வே பாதுகாப்புப் படை  காவல் நிலையத்தில் நடத்தப்பட்டது.

அப்போது பேசிய ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர், ''திருநங்கைகள் ரயில் பயணிகளுக்கு இடையூறு செய்தால் தண்டனைக்குரிய குற்றமாக எடுத்துக் கொள்ளப்படும், ஆகவே அதை தவிர்க்கவேண்டும்'' என்று அறிவுறுத்தினார்.

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஹேமமாலினி என்பவர் பேசும்போது, திருநங்கைகளுக்கு என போதிய அளவிலான மருத்துவ உதவி, வங்கிக் கடன் உள்ளிட்ட சலுகைகள் தொடர்ந்து அரசால் கொடுக்கப்பட்டு வரும் விவரங்களையும், கல்வி உள்ளிட்ட தகுதிகளையும், சுய தொழில் தகுதிகளையும் வளர்த்துக்கொண்டால் வாழ்வில் முன்னேற அரசாங்கமே உதவி செய்வதாக கூறி அவ்வாறு முன்னேறியவர்கள் குறித்து பேசினார்.

திருநங்கைகளை சக மனிதர்களாக கருதாமல் ஒதுக்கும்போக்கு இன்றும் சமுதாயத்தில் உள்ள நிலையில் புறக்கணிக்கப்படும் கோபம் குற்றச்செயலாக மாறுகிறது. சரியான வழிகாட்டுதல் இல்லாதவர்கள் அவர்கள் சார்ந்த திருநங்கை சமூகத்தினருடன் மட்டுமே சேர்ந்து வாழும் நிலை உருவாகிறது.

ஒதுக்கப்படும் கோபம், குழுவாகச் சேர்ந்து அவர்களை குற்றம் செய்யத் தூண்டுகிறத. சமூகப் புறக்கணிப்பைக் கைவிட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என திருநங்கைகள் கருத்து தெரிவித்தனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x