Last Updated : 02 Aug, 2019 12:54 PM

 

Published : 02 Aug 2019 12:54 PM
Last Updated : 02 Aug 2019 12:54 PM

இந்து தமிழ் செய்தியால் பொதுநல வழக்கான கரூர் இரட்டைக் கொலை: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

கரூர் மாவட்டம் குளித்தலை முதலைப்பட்டியில் குளம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுநலன் வழக்கு தொடர உதவிய தந்தை, மகன் கொலை தொடர்பாக, 'இந்து தமிழ்' நாளிதழில் வெளியான செய்தியை பொதுநலன் வழக்காக விசாரித்த உயர் நீதிமன்றம், 'இரட்டை கொலை வழக்கின் தற்போதைய நிலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய'  உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, குளித்தலை முதலைப்பட்டியில் குளம் ஆக்கிரமிப்பை மீட்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் வழக்கு தொடர உதவியதற்காக கோவில் பூசாரி வீரமலை, அவரது மகன் நல்ல தம்பி ஆகியோர் ஒரு கும்பலால் கடந்த ஜூலை 29-ல் கொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலை தொடர்பான செய்தி, 'இந்து தமிழ் திசை' நாளிதழில் வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து பொதுநலன் வழக்கு ஒன்றை இன்று விசாரித்தனர்.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் தாக்கல் செய்த மனுவில், "முதலைப்பட்டியில் 196 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருந்த குளத்தில் 157 ஏக்கர் பரப்பளவு தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு பட்டா பெறப்பட்டது. தற்போது குளத்தில் எஞ்சியுள்ள 39 ஏக்கர் பரப்பையும் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தனர்.  இந்த வழக்கிற்கு முதலைப்பட்டியைச் சேர்ந்த கோவில் பூசாரி வீரமலை என்கிற ராமரும், அவரது மகன் நல்லதம்பி என்கிற வண்டுவும் உதவியுள்ளனர். இந்த வழக்கில் நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. 

இதற்காக வருவாய்துறை அதிகாரிகள் குளத்தை அளவீடு செய்தபோது தந்தை, மகன் உடனிருந்துள்ளனர். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த ஆக்கிரமிப்பாளர்களின் தூண்டுதல் பேரில் இருவரும் கொலை செய்யப்பட்டனர்.

அந்த கும்பல் நல்லதம்பியின் பள்ளி செல்லும் மகன் பொன்னரை  கொலை செய்ய முயன்றுள்ளனர். சிறுவன் ஓடி தப்பியதால் உயிர்பிழைத்தான்.
பொதுநல வழக்கிற்கு உதவிய இருவரை கொலை செய்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொலையாளிகளை நேரில் பார்த்த நல்லதம்பியின் மகன் பொன்னரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், கொலையானவர்களின் குடும்பத்துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும்  உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் இன்று (ஆக. 2) விசாரணைக்கு வந்தது. 

அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேர் சரண் அடைந்துள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிலரது தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குளித்தலை டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்த போதிலும், அந்த உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை. அதிகாரிகள் மெத்தனமாக நடந்து கொள்வதே நீர்  நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. உத்தரவை நிறைவேற்றாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முடியும் என்றனர். பின்னர் கொலையானவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு:

அதற்கு அரசு வழக்கறிஞர் விசாரணை முடிந்த பிறகே இழப்பீடு வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க முடியும் என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கின் தற்போதைய நிலை தொடர்பாக டிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தின் மொத்த அளவு, எவ்வளவு பரப்பளவு ஆக்கிரமிப்பில் உள்ளது? எவ்வளவு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன? ஆக்கிரமிப்பு இடங்களுக்கு எதன் அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டது? என்பது குறித்து வருவாய் அலுவலர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை  ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x