Published : 02 Aug 2019 11:04 AM
Last Updated : 02 Aug 2019 11:04 AM

ஆண்டிபட்டியில் தினமும் 40,000 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு: மரக்கன்று வளர்க்க, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பயன்படுகிறது

என்.கணேஷ்ராஜ்

ஆண்டிபட்டி

ஆண்டிபட்டி பேரூராட்சியில் தின மும் 40 ஆயிரம் லிட்டர் கழிவு நீர் எளிய தொழில்நுட்பம் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது.

ஆண்டிபட்டி பேரூராட்சியின் 18 வார்டுகளில் 8,498 குடியிருப்புகள் உள்ளன. 32 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு சேடபட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 13 லட்சம் லிட்டர் தண்ணீர், அரப்படித்தேவன்பட்டியில் 6.50 லட்சம் லிட்டர் தண்ணீர் என மொத்தம் 19.50 லட்சம் லிட்டர் குடிநீர் தினமும் பெறப்படுகிறது.

இதில் 70 சதவீதம் கழிவு நீராக விரயமாகிறது. நிலத்தடி நீர்மட்டத்தைப் பொறுத்தவரை பல பகுதிகளிலும் 400 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. எனவே திரவக்கழிவு மேலாண்மைத் திட்டம் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், விரயமாகும் நீரை முறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.1.75 லட்சம் மதிப்பில் இயந்திரமில்லாமல் எளிய தொழில்நுட்பம் மூலம் கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 5-வது வார்டில் உள்ள 420 வீடுகளின் கழிவுநீர் ஒருங்கிணைக்கப்பட்டு இரண்டு வாய்க்கால்களில் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இடைவெளியில் 4 இடங்களில் ஆகாயத் தாமரை, கூழாங்கற்கள், 40 மி.மீ. மற்றும் 20 மி.மீ. ஜல்லி, மரக்கரி போன்ற படுகைகள் அமைக்கப்பட்டு கழிவு நீரின் திடக்கழிவுகள் வடிகட்டப் படுகின்றன.

சுத்திகரிக்கப்பட்ட நீரை சேகரிக்க இரண்டு தொட்டிகள் உள்ளன. அங்கிருந்து நீர் பம்ப் செய்யப்பட்டு மண்புழு உரம், இயற்கை உரப்படுகைக்குத் தேவையான நீர் பெறப்படுகிறது.

மேலும் 300-க்கும் மேற்பட்ட கன்றுகளுக்கு நீராதாரமாகவும் விளங்குகிறது. இதர நீர் நிலத்தில் செலுத்தப்படுகிறது. தினமும் 40 ஆயிரம் லிட்டர் நீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.

மழைக் காலங்களில் பெருகி வரும் நீர் இந்த அமைப்பை சிதைக்காமல் இருக்க புறவழிப் பாதையும் அமைக்கப் பட்டுள்ளது. நீர்பெருக்கின்போது இந்த பாதை வழியே அதிகப்படியான நீர் திருப்பிவிடப்படும்.

இது குறித்து சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் கூறியதாவது:

கழிவு நீர் வாய்க்காலின் முதல் தடுப்பாக ஆகாயத் தாமரை குப்பைகளை தேக்கி நிறுத்துகிறது. சோப்பு உள்ளிட்ட வேதியியல் நீரை தடுக்கிறது. கற்கள், கரித்துண்டு படுகைகள் கிருமி நாசினியாகச் செயல்பட்டு நுண்ணுயிர் உள்ளிட்டவற்றை தடுக்கிறது.

இவ்வாறு படிப்படியாகச் செல்லும் நீர் இறுதியில் கழிவுத் தன்மையில் இருந்து வெகுவாய் மாற்றம் பெறுகிறது. இந்த நீரை உரக்கிடங்குக்கும், கன்று வளர்ப்பதற்கும் பயன்படுத்து கிறோம். இதனால் ஆழ்குழாய் நீரின் தேவை குறைந்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x