Published : 02 Aug 2019 10:53 AM
Last Updated : 02 Aug 2019 10:53 AM

மதுரையில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்; கூடுதல் மகளிர் காவல்நிலையம் திறக்கப்படுமா?

என்.சன்னாசி

மதுரை 

மதுரை மாநகரில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவை தொடர்பாக விரைவாகத் தீர்வு காண கூடுதல் மகளிர் காவல் நிலையங்களை திறப்பதுடன் போதிய போலீஸாரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரை மாநகரில் 21 சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்களுடன் திருப்பரங்குன்றம், மதுரை தெற்குவாசல், நகர், தல்லாகுளம் என 4 மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த 4 மகளிர் காவல்நிலையங்களில் தல்லாகுளத்தில் மிக அதிக அளவிலும், அதற்கு அடுத்தபடியாக தெற்குவாசல் மகளிர் காவல் நிலையத்தில் அதிக அளவிலான புகார்களும் வருகின்றன. இந்த 2 காவல்நிலையங்களில் மட்டும் தினமும் 10 பேர் வரை புகார் தருகின்றனர்.

கடந்த 7 மாதங்களில் மதுரை மாநகரில் 40-க்கும் மேற்பட்ட ‘போக்ஸோ’ வழக்குகள் பதிவாகியுள்ளன. வரதட்சணை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் அவற்றிற்கு துரிதமாக தீர்வு காண முடியவில்லை. போதிய போலீஸார் எண்ணிக்கை இல்லாததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே, கூடுதல் மகளிர் காவல் நிலையங்களை அமைத்து, போலீஸாரின் எண்ணிக் கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் முத்துக்குமார் கூறியதாவது:

பெண்களிடையே சட்ட விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. தினமும் மகளிர் காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகின்றன. நகர் எல்லை விரிவாக்கத்துக்கு ஏற்ப மகளிர் காவல்நிலையங்களும், போலீஸாரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவில்லை.

பணியில் இருக்கும் போலீஸாரும், பாதுகாப்புப் பணி, விடுமுறை, நீதிமன்றப் பணி, மாற்றுப்பணி என சென்றுவிடுவதால் காவல் நிலையங்களில் வழக்குகளை விசாரிக்க மிகக் குறைந்த அளவிலான போலீஸாரே உள்ளனர். அவர்களால் துரிதமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ரோந்து பணிக்குச் செல்லும் மகளிர் காவல் ஆய்வாளர்களால் மாலை நேரத்தில் மட்டுமே வழக்குகளை விசாரிக்க முடிகிறது. இதனால் மகளிர் காவல் நிலையங்களில் புகார் மனுக்கள் தேக்கமடைந்து வருகின்றன. எனவே, மகளிர் போலீஸாருக்கு பிற பணிகளை வழங்காமல், காவல்நிலையப் பணியை மட்டுமே வழங்க வேண்டும்.

கடந்த சில மாதங்களாக மதுரை நகர் மகளிர் உதவி ஆணையர் பணியிடமும் காலியாக உள்ளது. இங்கு வரும் மனுக்கள் அனைத்தும் தேங்கிக் கிடக்கின்றன. இப்பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும்.

நகர் விரிவாக்கம், புகார்கள் அதிகரிப்பால் தல்லாகுளம், தெற்குவாசல் மகளிர் காவல் நிலையங்களைப் பிரித்து, கூடுதல் மகளிர் காவல் நிலையங்களை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x