Published : 02 Aug 2019 07:24 AM
Last Updated : 02 Aug 2019 07:24 AM

ஆகஸ்ட் 1 - 7: உலக தாய்ப்பால் வாரம்: தாய்ப்பால் எனும் உயிர்த்துளியின் அவசியம் அறிவோம்

க.சக்திவேல்

கோவை

பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய முதல் உணவு தாய்ப் பால். இந்த தாய்ப்பாலின் அவசி யத்தை வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

தாய்ப்பால் கொடுப்பதில் தாய்க்கு மட்டும் பங்கு இல்லை. உளவியல்ரீதியாக உடன் இருப்ப வர்களின் துணையும் தேவைப் படுகிறது. எனவேதான், உலக தாய்ப் பால் செயல் திட்ட கூட்டமைப்பு (வாபா), தாய்ப்பால் கொடுப்பதற்கு உடன் இருப்பவர்களையும் தயார் படுத்த வேண்டும் என்பதை நடப்பு ஆண்டின் கருப்பொருளாக அறிவித்துள்ளது.

தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து கோவை அரசு மருத்துவ மனையின், பச்சிளங் குழந்தைகள் துறைத் தலைவர் டாக்டர் பூமா கூறியதாவது: குழந்தை பிறந்தவு டன் தாயிடம் இருந்து வெளிப்படும் பாலுக்கு ‘கொலஸ்ட்ரம்’ என்று பெயர். ஆனால், அந்த பால் சேராது என சிலர் தவிர்ப்பார்கள். அவ்வாறு தவிர்க்கக் கூடாது. அந்த பாலில்தான் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. புரோட்டீன், கொழுப்பு அதிகம் இருப்பதால் மஞ்சள் நிறத் தில், சற்று அடர்த்தியாக அந்த பால் இருக்கும். அளவு குறைவாக சுரக்கும் இந்த பால்தான் குழந் தைக்கு கொடுக்கக் கூடிய முதல் தடுப்பு மருந்து. எனவே, குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் அந்த பாலை கொடுக்க வேண்டும்.

எப்படிக் கொடுக்க வேண்டும்?

குழந்தை அழும்போதெல்லாம் தாய்ப்பால் அளிக்க வேண்டும். முதல் 6 மாதங்களுக்கு பகலில் குறைந்தபட்சம் 6 முதல் 7 தடவையும். இரவில் 3 முதல் 4 தடவையும் தாய்ப்பால் அளிப்பது அவசியம். இவ்வாறு தொடர்ந்து தாய்ப்பால் அளித்து வந்தால் குழந்தையின் எடை கூடும், அடிக்கடி சளி பிடிக்காது, ஆஸ்துமா பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு ஏற்படாது. உடல் பருமன், இருதய நோய்கள் தவிர்க்கப்படும்.

தாய்ப்பாலை நேரடியாக பெறும் போது அன்பும், அரவணைப்பும் கிடைப்பதால், எதிர்காலத்தில் அதிக கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகள் குழந்தைக்கு ஏற் படாது. தாயின் கர்ப்பப்பை உடனே சுருங்குவதால் உதிரப்போக்கு குறைந்துவிடும். பிரசவ காலத்தில் தாய்க்கு அதிகரித்த கொழுப்பு கரைந்துவிடும். மார்பக புற்றுநோய் ஏற்படாது.

தற்போது பல பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். எனவே, அவர்கள் பணிபுரியும் இடங்களிலும் தாய்ப்பால் கொடுப்ப தற்கான ஏற்பாடுகள் இருக்க வேண்டும். 3 மணி நேரத்துக்கு ஒரு முறை அங்கு பால் கொடுக்கலாம்.

தனி உணவு தேவையா?

தாய்ப்பால் சுரக்க தனி உணவுகள் ஏதும் தேவையில்லை. தாய்மார்கள் நிறைய காய்கறிகள், கீரை வகைகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். காரம், மசாலா கலந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். தினமும் 6 முதல் 7 மணி நேர உறக்கம் அவசியம். நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். இன்னொரு உயிரும் அவர்களை நம்பி இருப்பதால், சாதாரணமாக சாப்பிடுவதைவிட ஒன்றரை மடங்கு கூடுதலாக சாப்பிட வேண்டும். 4 இட்லி சாப்பிட்டு வந்தால், 6 இட்லி சாப்பிடலாம். சாதாரண உடற்பயிற்சி, வீட்டு வேலைகளை தொடர்ந்து செய்யலாம்.

இவ்வாறு டாக்டர் பூமா கூறினார்.

முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால்

குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். இந்த காலத்தில் குழந்தைக்கு நேரடியாக பால் கொடுத்தால் பால் சுரப்பு குறையாமல் இருக்கும்.

6 மாதங்கள் முதல் 2 வயது வரை தாய்ப்பாலுடன் இணை உணவு அளிக்கலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள், தாய்ப்பாலை சுத்தமான டம்ளரில் எடுத்துவைத்துவிட்டு செல்லலாம். அறை வெப்பநிலையில் 6 மணி நேரம் வரை அந்த பாலை வைத்திருக்கலாம்.

குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. சங்கு அல்லது ஸ்பூன் மூலம் உடன் இருப்பவர்கள் அந்த பாலை குழந்தைக்கு கொடுக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x