Published : 01 Aug 2019 10:47 AM
Last Updated : 01 Aug 2019 10:47 AM

பள்ளிக்கல்வித் துறை ரூ.1,627 கோடியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியது ஏன்?- தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கேள்வி

பள்ளிக் கல்வித் துறைக்கு அரசு ஒதுக்கிய நிதியில்  ரூ.1,627 கோடியினை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியது ஏன் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. 

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக அரசுக்குப் பல்வேறு நிதி நெருக்கடி இருந்த போதும் 2018 -2019 ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வித் துறையை மேம்படுத்த ரூ.28,757 கோடியை நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்து இருந்தது. அதில் தற்போதைய ஆண்டுக் கணக்குத்  தணிக்கை அறிக்கையில 2018-2019 ஆம் ஆண்டில்  1,627 கோடி ரூபாய் செலவு செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கின்றது.

அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் ஒதுக்கீடு செய்த நிதியில் ரூ. 894 கோடியும், இடைநிலைக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ஒதுக்கீடு செய்த நிதியில் ரூ.437 கோடியும், சிறப்புக் கூறு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த நிதியில் ரூ.296 கோடியும் ஆக மொத்தம் ரூ 1,627 கோடி செலவழிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் முறையான திட்டமிடல் இல்லாததால் ஒதுக்கீடு செய்த நிதியினைப் பயன்படுத்தவில்லை என்று தெரிய வருகிறது. ஒருபுறம், பள்ளிகளை மேம்படுத்தத் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோருக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அழைப்பு விடுக்க, மறுபுறம் அரசு ஒதுக்கிய நிதியினை முறையாகப் பயன்படுத்ததாது அதிர்ச்சியளிக்கிறது.

பெரும்பாலான பள்ளிகளில் கழிவறைகளை மாற்றியமைத்திருக்கலாம். உள்கட்டமைப்பு வசதிகள், கணினி ஆய்வகம், மொழி ஆய்வகம் உள்ளிட்ட பாடவாரியான ஆய்வககங்கள் மற்றும் மாணவர்களின் நலன்கருதி கண்காணிப்பு கேமராக்கள், கூடுதல் வகுப்பறைகள் என ஏராளமான தேவைகள் இருக்கும் போது ரூ.1,627 கோடியினை செலவழிக்காமலேயே திருப்பி அனுப்பியது ஏன்?

இதற்கான காரணத்தைக் கண்டறிந்து எதிர்காலத்தில் இவ்வாறு நடந்திடாமல் தடுக்கும் வகையில்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x