Published : 29 Jul 2019 11:26 AM
Last Updated : 29 Jul 2019 11:26 AM

கொள்ளையடிக்கத் திட்டமிட்டு வீடுகளில் வடமாநில கொள்ளையர் ரகசிய குறியீடு: விளக்கப் படத்துடன் போலீஸார் எச்சரிக்கை

வடமாநில கொள்ளையர்கள் பயன்படுத்தும் குறியீடுகள் தொடர்பாக போலீஸார் வெளியிட்டுள்ள வரைபடம்.

கொள்ளையடிக்கப்போகும் வீட்டை நோட்டம் பார்த்து, சுவர் அல்லது கதவில் ரகசிய குறியீடுகளை எழுதும் பாணியை வடமாநில கொள்ளையர்கள் மேற்கொள்கின்றனர். இதுபோன்று ரகசிய குறியீட்டை காணும் பொது மக்கள் காவல்துறைக்கு உடனடி யாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட் டங்களில் வட மாநில கொள்ளை யர்களின் கைவரிசை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக விசாரித்த காவல்துறை யினருக்கு, வடமாநில கொள்ளை யர்கள் சில நூதனமான வழிமுறைகளை கடைப்பிடிப்பது தெரியவந்துள்ளது. கும்பலாகச் சென்று கொள்ளையடிப்பது, கொள்ளைச் சம்பவத்துக்கு முன் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளை தனித்தனியாக சென்று நோட்டம் விடுவது ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மேலும், வீடு மற்றும் கடைகள் தொடர்பான தகவல்களை அறிந்து, அதற்கேற்ப சுவரிலும், கதவிலும் ரகசிய குறியீட்டை எழுதிச் செல்கின்றனர். அதன்படி, ஆங்கிலத்தில் ‘D’ என சுவரில் எழுதியிருந்தால் சம்பந்தப்பட்ட வீடு அல்லது, கடைக்குள் நுழைவது கடினம் மற்றும் ஆபத்தானது, ‘எம்’ போன்ற வடிவிலான குறியீடு எனில் சிசிடிவி கேமரா அல்லது அலாரம் இருக்கிறது, சிறுவட்டங்கள் வரைந்திருந்தால் செழிப்பான வீடு, முக்கோண வடிவில் வரைந்திருந்தால் பெண்கள் மட்டுமே உள்ள வீடு, செவ்வக வடிவத்தினுள் குறுக்காக கோடுகள் இருந்தால் ஆளில்லாத வீடு, பெரிய வட்டத்துக்குள் குறுக்காக கோடுகள் இருந்தால் அந்த வீட்டில் நகை, பணம் எதுவும் கிடைக்காது என்பதை தெரிவிக்கும் வகையில் சுவரில் வரைகின்றனர்.

பிறகு இரவிலோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்திலோ வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுகின்றனர்.

இதையடுத்து, திருட்டு, கொள்ளையை தடுக்க வடமாநில கொள்ளையர்களின் இந்த ரகசிய குறியீடுகள் குறித்த வரைபடத்தை பொதுமக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மதுரை மாநகர போலீ ஸார் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது:

உள்ளூர் கொள்ளையர்களை விட, வடமாநில கொள்ளையர்கள் வித்தியாசமான முறையில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். பல இடங்களில் அவர்கள் நடத்தும் கொள்ளைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களை எளிதில் கண்டறிய முடியாத நிலை உள்ளது. கொள்ளையடிக்கப்போகும் கட்டி டத்தில் முன்னதாகவே நோட்டமிட்டு சில குறியீடுகளை எழுதி, பின்னர் சென்று கொள்ளையில் ஈடுபடுவது வடமாநில கொள்ளையர்களின் பாணி என்பது சமீபத்தில் தெரியவந்தது.

எனவே, அது தொடர்பாக எஸ்.ஐ.க்கள் மூலம் அந்தந்த வார்டுகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். காவல் துறை சார்பில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

இது போன்ற குறியீடுகள் வீடு, கடை சுவர்களில் வரையப்பட்டு இருந்தால், அவற்றை பொது மக்கள் உடனடியாக அழித்துவிட வேண்டும். அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். இக்குறியீடுகளை வரைந்த கொள்ளையர்கள் அருகில் எங்காவது பதுங்கி இருக்க லாம். அந்த பகுதியில் சோதனையிடுவதன் மூலம் அவர்களை பிடித்துவிட முடியும் என்று கூறினர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x