Published : 27 Jul 2019 03:01 PM
Last Updated : 27 Jul 2019 03:01 PM

வைகைக்கு வரும் தண்ணீர் ஆளுங்கட்சி ஆதரவுடன் திருட்டு: மதுரை திமுக எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு; வழக்கு தொடரப்போவதாகவும் அறிவிப்பு

மதுரையின் குடிநீர் ஆதாரமான வைகை அணைக்கு பெரியாறு அணையில் இருந்து வரக்கூடிய தண்ணீர் ஆளுங்கட்சி ஆதரவுடன் இடையிடையே திருடப்படுவதாக திமுக எம்.எல்.ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (ஜூலை 27) அவர் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "மதுரையின் குடிநீர் ஆதாரமான வைகை அணைக்கு பெரியாறு அணையில் இருந்து வரக்கூடிய தண்ணீர் ஆளுங்கட்சி ஆதரவுடன் இடையிடையே திருடப்படுவதைத் தடுக்கக்கோரி தொடர்ச்சியாக நான் வலியுறுத்தி வருகிறேன்.

கடந்த 2016-ம் வருடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவருக்கு நான் எழுதிய கடிதத்தின் மேல் அவர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக ஒரே நாளில் 160 விநாடி கன அடி தண்ணீர் அதிகரித்தது.

அவரது மறைவுக்கு பின்னர் மறுபடியும் தண்ணீர் திருட்டு அதிகளவில் நடைபெற்று வருவதால் தொடர்ந்து துறை செயலருக்கும், அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். 

இது குறித்து ஆராய ஒரு சிறப்பு குழு அமைத்து 03.07.2018 அன்று விரிவான அறிக்கையை பொதுப்பணித்துறை செயலருக்கும், மதுரை, தேனி மாவட்ட ஆட்சியர்கள் இருவருக்கும், பொதுப்பணித்துறை வைகை-பெரியாறு பிரிவு செயற்பொறியாளருக்கும் சமர்ப்பித்து உள்ளேன். 
அதற்கு தண்ணீர் திருட்டு தற்போது நடைபெறவில்லை என பொதுப்பணித்துறை வைகை-பெரியாறு பிரிவு செயற்பொறியாளர் உட்பட அனைவருமே உண்மைக்கு மாறாக தகவல் தெரிவித்தனர்

சட்டமன்றத்திலும், பொது வெளியிலும் இது குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நான் என் தொகுதி மக்கள் மதுரையில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பிரச்சினைக்கு அரசின் மெத்தனமே காரணம்.  பெரியாறு அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஆங்காங்கே திருடப்படுவதால் மதுரை நகருக்கு தேவையான தண்ணீர் முறையாகக் கிடைப்பதில்லை. 

இந்த தண்ணீர் திருட்டு எதேச்சையாக சில இடங்களில் மட்டும் நடைபெறவில்லை. திட்டமிட்டே வணிக லாபத்திற்காக பெரியாறு  மற்றும் அருகிலுள்ள நஞ்சை நிலங்களில் இருந்துபெரும் அளவில் தண்ணீரை திருடும் சில தனி நபர்களின் செயல்பாட்டிற்கு ஆளுங்கட்சி, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை அதிகாரிகளும் துணை போகின்றனர்.

முல்லை பெரியாறு அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் இடையில் கூடலூர், கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம், சீலையம்பட்டி, பி.சி.பட்டி, தேனி மக்களின் குடிநீருக்கும் அங்குள்ள பகுதிகளின் விவசாயத்திற்கும் போக தண்ணீரின் அளவு முழுமையாக வைகை அணைக்கு வருவதில்லை.

ஆளுங்கட்சியின் அதிகார பலம் மிக்க தனி நபர்களால் லோயர் காம்ப், கம்பம் ஆயக்கட்டு, உத்தமுத்து வாய்க்கால், பாளையம் பரவு, சின்னமனூர் ஆயக்கட்டு, மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, கோட்டூர், உப்பார்பட்டி, உப்புக்கோட்டை, வீரபாண்டி, சத்திரப்பட்டி, P.C.பட்டி, மேளக்கால், கருங்காட்டங்குலம், பூலாநந்தபுரம் ஆகிய பகுதிகளில் நேரடியாக ஆற்றிலுருந்து தமிழக அரசு வழங்கும் இலவச விவசாய மின்சார இணைப்பை தவறாக பயன்படுத்தி, ராட்சத குழாய்கள் மூலம் வெகு தூரத்துக்கு தண்ணீரை எடுத்து சென்று, லாப நோக்கத்துடன் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்.

நாளொன்றுக்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 24.5 கோடி லிட்டர் தண்ணீர் குடிநீருக்காக திறந்துவிடப்படுகிறது. அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வைகை அணைக்கு வந்து சேர்வதில்லை. வைகை அணையிலிருந்து மதுரை மாநகர் குடிநீருக்கு 11.5 கோடி லிட்டர் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்தளவில் தண்ணீர் முறையாக விநியோகிக்கப்படும் பட்சத்தில் உத்தேசமாக மதுரையில்
11.5 லட்சம் பேருக்கு நபருக்கு 100 லிட்டர் தண்ணீர் வழங்கலாம்.  இந்த வழியிலும் இடையில் தண்ணீர் திருட்டு நடைபெறுவதால் மதுரை மாநகருக்கு செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

இந்த திருட்டுக்கு துணை போகும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்திலிருந்து ஒரு இணைப்பிற்கு தினமும் சுமார் 300 யூனிட்டுக்கு மேல் இலவச மின்சாரம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வருடத்திற்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது. 

துணை முதல்வரின் சொந்த மாவட்டத்தில் நடைபெறும் இந்த முறைகேட்டை பலமுறை விவசாயிகள் அவரது கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவரது மகன் தமிழகத்தின் ஒரே அதிமுக எம்.பி-யாக தேனி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாக சொல்லிக்கொள்கிறார். தேனி தொகுதி எம்.பி ரவீந்தரநாத் குமார் இத்திருட்டை தடுத்து நிறுத்தப்போகிறாரா அல்லது திருட்டுக்கு துணை போகப் போகிறாரா?

ராட்சத போர்வெல் போடுவது குறித்தும், ’பல லட்சம் ரூபாய்க்கு பெரியாறு அணை நீர் திருட்டு’ என செய்தி ஊடகங்களில் பலமுறை செய்தி வந்தும், எல்லா தரப்பு அதிகாரிகளிடமும் பல வழிகளில் நான் வலியுறுத்திய பின்னும்கூட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, எனது சார்பிலோ அல்லது என்னை தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை சொல்லும் விவசாய சங்கங்கள், பொது நல அமைப்புகள் சார்பிலோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்"

இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்.ஸ்ரீநிவாசகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x