Published : 21 Jul 2015 04:39 PM
Last Updated : 21 Jul 2015 04:39 PM

என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை வழங்க மறுப்பது அநியாயம்: அன்புமணி

என்.எல்.சி தொழிலாளர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ள நிலையில், அவர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வை வழங்க மறுப்பது அநியாயம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன தொழிலாளர்கள் நேற்று இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்தி உடன்பாடு காண்பதற்கு பதிலாக வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும் என்று பழுப்பு நிலக்கரி நிறுவன நிர்வாகம் (என்.எல்.சி) எச்சரித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

என்.எல்.சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், அதிகாரிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது வழக்கம். அதன்படி என்.எல்.சி தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் 2011 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டு 01.01.2012 முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும்.

ஆனால், அதன்பின் மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், இதுவரை ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வில்லை. இதுதொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே இதுவரை 22 முறை பேச்சு நடத்தப்பட்ட போதிலும், அதில் குறிப்பிடத்தக்க வகையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நியாயமான கோரிக்கைகளைக் கூட ஏற்க நிர்வாகம் மறுப்பது தான் இந்த முட்டுக்கட்டைக்கு காரணம்.

இதற்கு முந்தைய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தியக் குழுவில் பாட்டாளி தொழிற்சங்கம் இடம் பெற்றிருந்தது. அந்த ஊதிய ஒப்பந்தக் காலத்தில் தொழிலாளர்களுக்கு 31% ஊதிய உயர்வை பாமக பெற்று தந்தது. ஆனால், இப்போது 10 விழுக்காட்டுக்கு மேல் ஊதிய உயர்வு வழங்க முடியாது என்று என்.எல்.சி நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, தொழிலாளர்களுக்கு அளவுக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுவதாக அவதூறு பரப்பும் வகையில் தகவல்களை பரப்பி வருகிறது. தொழிலாளர்கள் கோரும் அளவுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டால் கடைநிலை ஊழியருக்கு 14,891 ரூபாயும், அனுபவம் மிக்க ஊழியர்களுக்கு 44,365 ரூபாயும் கூடுதலாக வழங்க வேண்டியிருக்கும் என்று என்.எல்.சி நிர்வாகம் கூறியிருக்கிறது. இத்தகவல்கள் மிகவும் தவறானவை.

அனுபவம் மிக்க தொழிலாளர்களுக்கு ரூ.22,200 மட்டுமே கூடுதலாக கிடைக்கும். அதுமட்டுமின்றி, இந்த ஊதிய உயர்வு ஓராண்டுக்கானது அல்ல; 5 ஆண்டுகளுக்கானது. அந்த வகையில் பார்த்தால் தொழிலாளர்கள் கோரும் ஊதிய உயர்வு என்பது ஆண்டுக்கு 3 முதல் 4 விழுக்காட்டு என்ற அளவிலேயே இருக்கும்.

பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் லாபத்திற்கு ஏற்ற வகையில் ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்படுவது வழக்கம் ஆகும். கடந்த முறை ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட போது என்.எல்.சி நிறுவனத்தின் ஆண்டு லாபம் ரூ.1000 கோடி என்ற அளவில் தான் இருந்தது. ஆனால், இப்போது லாபம் ரூ.1579 கோடியாக அதிகரித்திருப்பதுடன், மின்னுற்பத்தியும் 1000 மெகாவாட் அளவுக்கு அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரமாக குறைக்கப்பட்டு விட்டது. இதனால் தொழிலாளர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ள நிலையில், அவர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வை வழங்க மறுப்பது அநியாயம்.

அதேநேரத்தில் என்.எல்.சி நிறுவனத்தில் அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வாரி வழங்கப்படுகிறது. வழக்கமாக பொதுத்துறை நிறுவனங்களில் 50 முதல் 100 பணியாளர்களுக்கு ஓர் அதிகாரி மட்டுமே இருப்பர். ஆனால், என்.எல்.சி.யில் 3 தொழிலாளர்களுக்கு ஓர் அதிகாரி உள்ளார். 12 ஆயிரம் தொழிலாளர்களை நிர்வகிக்க 1,500 முதன்மை மேலாளர்கள், 400 கூடுதல் துணைப் பொது மேலாளர்கள், 500 துணைப் பொது மேலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் நிலையில் ஒருவர் ஓய்வு பெற்றால் கூட உடனடியாக அந்த பணியிடம் நிரப்பப்படுகிறது. ஆனால், தொழிலாளர்கள் பணியிடம் 2 ஆயிரத்திற்கும் மேல் காலியாக இருக்கும் போதிலும் அப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அதிகாரிகள் பணியிடங்களில் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள்.

ஏற்கெனவே அவர்களுக்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.2.5 லட்சம் வரை ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் புதிய ஊதிய ஒப்பந்தத்தின் மூலம் ரூ.25,000 முதல் ரூ.78,000 வரை ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளது. அதிகாரிகள் விருப்பம் போல ஊதியம் நிர்ணயித்துக் கொள்ளும் நிலையில், தொழிலாளர்களுக்கு கடந்த முறை வழங்கிய அளவு கூட ஊதிய உயர்வு வழங்க மறுப்பது முறையல்ல.

எனவே, தொழிலாளர்களுடன் பேச்சு நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். காலியாக உள்ள தொழிலாளர்கள் பணியிடங்களை உச்சநீதிமன்ற ஆணைப்படி ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். மேலும், அதிகாரிகள் நியமனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x