Published : 27 Jul 2019 11:19 AM
Last Updated : 27 Jul 2019 11:19 AM

சென்னை மக்கள் காத்திருக்க வேண்டாம்; இனி இரண்டே நாட்களில் தண்ணீர் லாரி: மெட்ரோ வாட்டரின் புதிய திட்டம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

சென்னை மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க, 'டயல் ஃபார் வாட்டர் 2.0' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ வாட்டரின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"சென்னை மெட்ரோ தண்ணீர் லாரிக்கு முன்பதிவு செய்துவிட்டு இனி நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை.  'டயல் ஃபார் வாட்டர் 2.0' (Dial for water 2.0) என்ற சேவையின் மூலம் லாரி பதிவு செய்த நாளில் இருந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு ஏதாவது ஒருநாளில் குடிநீர் பெறும் வகையில் தேர்வு செய்துகொள்ளலாம். இந்தப் புதிய திட்டத்தின் மூலம், காத்திருப்புக் காலம் எந்த நிலையிலும் 48 மணிநேரத்தைத் தாண்டாது.

குடிநீர் விநியோகித்த காலத்தில் இருந்து 7 முதல் 10 நாட்களுக்குப் பிறகே மீண்டும் அடுத்த முன்பதிவைச் செய்ய இயலும். இதன்மூலம் முன்பதிவு செய்வதில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும்.

சென்னை மக்கள் இச்சேவையை இணைய வழியிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். இணைய வழியில் முன்பதிவு செய்பவர்கள் தங்கள் வங்கி அட்டையின் மூலமாகவோ, அல்லது கடன் அட்டைகளின் மூலமாகவோ கட்டணம் செலுத்தலாம்.

தொலைபேசி வாயிலாக முன்பதிவு செய்பவர்கள், 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் லாரியை மட்டுமே பணமாகச் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையில் முன்பதிவு செய்ய முடியும்.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 9000, 12000 மற்றும் 16000 லிட்டர்களும், தனி வீடுகளில் வசிப்பவர்கள் 3000, 6000 மற்றும் 9000 லிட்டர்களும் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். மேலும், முன்பதிவை எக்காரணத்தைக்கொண்டும் ரத்து செய்யவோ, வேறு தேதிக்கு மாற்றம் செய்யவோ முடியாது", எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தண்ணீர் லாரிகளுக்கான விலைப் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. 

விலைப்பட்டியல்

நேரப் பட்டியல்

இத்துடன் முன்பதிவு செய்வதற்கான நேரப் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x