Published : 27 Jul 2019 07:45 AM
Last Updated : 27 Jul 2019 07:45 AM

தமிழ் மொழி 2300 ஆண்டுகள் மட்டுமே பழமை வாய்ந்ததா?- சம்ஸ்கிருதமே மூத்த மொழி என்ற பிளஸ் 2 பாடப்புத்தக தகவலால் சர்ச்சை

சென்னை

தமிழ் மொழி 2300 ஆண்டுகள் மட்டுமே பழமை வாய்ந்த மொழி எனவும், தமிழை விட சம்ஸ்கிருதம் மூத்த மொழி எனவும் பிளஸ் 2 ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தமிழ் 2300 ஆண்டுகள் மட்டுமே பழமை வாய்ந்த மொழி எனவும், ஆனால் சம்ஸ்கிருதம் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மொழி எனவும் பிளஸ் 2 ஆங் கில புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. தமிழ் மொழியின் தொன்மையை குறைத்து மதிப் பிடும் வகையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளதாகக் கூறி அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

சம்ஸ்கிருத சர்க்காரா?

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “எப்படி சகிப்பது இந்த கொடுமையை?. தமிழ் 2300 ஆண்டுகள்தான் பழமை வாய்ந்ததாம். ஆனால் சம்ஸ்கிரு தமோ 4000 ஆண்டுகள் பழமை யானதாம். இப்படித்தான் சொல் கிறது தமிழக அரசின் 12-ம் வகுப்பு பாடப்புத்தகம். இது தமிழக அரசா அல்லது சம்ஸ்கிருத சர்க்காரா?” என கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கலிபோர்னியா பல்கலைக்கழகத் தில் தமிழ் பேராசிரியராக பணியாற் றிய ஜார்ஜ் எல்.ஹர்ட் கடந்த 2000-ல் எழுதிய ஆய்வுக்கட்டுரை தற்போது தமிழக அரசின் பிளஸ் 2 ஆங்கில புத்தகத்தில் வெளியிடப் பட்டுள்ளது. கடந்த 2000-ல் எழுதப் பட்ட கட்டுரையை 2019-ல் தமி ழக அரசு வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தமிழைவிட சம்ஸ்கிருதம் தொன்மையான மொழி என குறிப்பிட்டு இருப்பது தமிழக மக்களிடையே கொந் தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே பிளஸ் 2 பாட புத்தகத் தில் தமிழ் மொழியை சிறுமைப் படுத்தி சம்ஸ்கிருதத்தை தொன் மையான மொழி எனக் கூறி யிருக்கிற பகுதியை உடனடியாக நீக்க வேண்டும்” என வலியுறுத் தியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “தொன்மையான முதுமொழியாம் தமிழ் மொழியை 2300 ஆண்டுகள் மட்டுமே பழமை மையானது என்று பாடப்புத் தகத்தில் அச்சிடப்பட்டிருப்பதாக, வந்திருக்கும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இது உடனே மாற்றப்பட வேண்டும்.

தவறு நடக்க காரணமானவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இது முழுக்க முழுக்க மாநில அரசு சம்பந்தப்பட்டது. இதற்கும் மத்திய அரசுக்கும் துளியும் தொடர்பில்லை.

எனினும் சிலர் எதற்கெடுத் தாலும் மத்திய அரசை குறை கூறுவதும், காவிமயம் என்று கூச்சலிடுவதும் ஒரு வியாதி போல பரவி வருகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது” என்றார்.

அதிகாரி மீது நடவடிக்கை

இதற்கிடையே இந்த விவ காரம் தொடர்பாக விளக்கம் அளித் துள்ள மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன், “12-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழை விட சம்ஸ்கிருதமே மூத்த மொழி என குறிப்பிடப்பட்டிருக்கும் விவகாரத் தில், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடப் பகுதியில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x