Published : 26 Jul 2019 10:46 AM
Last Updated : 26 Jul 2019 10:46 AM

உலகம் சுற்றும் மீனாட்சி.... கோவை டூ ரஷ்யா; காரில் ஓர் சாகசப் பயணம்!

ஆர்.கிருஷ்ணகுமார்

பெண்கள் எல்லோராலும் சாதிக்க முடியும். முதலில் வீட்டிலிருந்து வெளியுலகத்துக்கு வாருங்கள். தயக்கத்தை தூர எறியுங்கள்; சாதனைபடைக்கத் தயாராகுங்கள்” என்கிறார் கோவை மீனாட்சி அர்விந்த்(47). ஏற்கெனவே கோவையிலிருந்து இங்கிலாந்துக்கு காரில் சாகசப் பயணம் மேற்கொண்ட இவர், அடுத்தபடியாக கோவையிலிருந்து ரஷ்யாவுக்கு காரிலேயே செல்லத் திட்டமிட்டுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி ரஷ்ய பயணத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த மீனாட்சியை கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். “பெற்றோர் சுப்பையன்-கோகிலா. கோவையில் பள்ளிக் கல்வி முடித்து, கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பி.பி.எம். படித்தேன். 1995-ல் திருமணம், கணவர் அர்விந்த். திண்டுக்கல்லில் நூற்பாலை நடத்தி வருகிறார். மகள் வேதிகா (23), அமெரிக்காவில் படித்து வருகிறார்.

சிறு வயதில் கிரிக்கெட் பார்ப்பதற்காக,  பெங்களூரு, ஹைதராபாத், சென்னை என பல பகுதிகளுக்கும் அப்பா காரிலேயே கூட்டிச் செல்வார். இதனால், சிறு வயதிலிருந்தே கார் பிரயாணம் மிகவும் பிடிக்கும். அண்ணா, அவரது நண்பர்கள் எல்லாம் கார் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த உந்துதலில் கார் ஓட்ட மட்டுமின்றி, கார் மெக்கானிசமும் கற்றுக்கொண்டேன்.

கல்லூரி முடித்தவுடன் நண்பர்களுடன் ஊட்டிக்கு அடிக்கடி காரில் செல்வேன். திருமணத்துக்குப் பிறகு திண்டுக்கல்லுக்கு பலமுறை தனியாகவே கார் ஓட்டிச் சென்றிருக்கிறேன். அதேபோல, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும்போது, அங்கு வாடகைக்கு கார் எடுத்து, நெடுந்தொலைவுக்கு ஓட்டிச் செல்வேன். 

2016 ஜனவரியில் நான், கணவர், அண்ணா உள்ளிட்டோர் தாய்லாந்துக்கு காரில் சென்றோம். இம்பாலில் புறப்பட்டு மியன்மார் வழியாக 12 நாட்கள் பயணம் செய்து தாய்லாந்தை அடைந்தோம். இதுதான் முதல்முறையாக நாட்டின் எல்லையைத் தாண்டி, கார் ஓட்டிச் சென்றது. ஏறத்தாழ 3 ஆயிரம் கிலோமீட்டருக்கு நான், கணவர், அண்ணா ஆகியோர் மாறி மாறி ஓட்டிச் சென்றோம்.
இந்திய நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆனதையொட்டி, இந்தியாவிலிருந்து காரில்  3 பெண்கள் மட்டும் லண்டன் செல்லத் திட்டமிட்டோம். இதற்காக 11 நாடுகளில் விசா பெற்றோம். ஏறத்தாழ 6 மாத தயாரிப்புகளுக்குப் பிறகு, கோவையிலிருந்து புறப்பட்டோம். இந்தியாவில் தயாரிக்கும் காரில்தான் செல்ல வேண்டுமெனத் திட்டமிட்டு, டாடா நிறுவனத்திடம் கேட்டு பிரத்தியேக கார் பெற்றோம். 

2017-ல் மார்ச் 26-ம் தேதி கோவையில், நான், பொள்ளாச்சி மூகாம்பிகா ரத்தினம், மும்பை பிரியா ராஜ்பால் ஆகியோர் காரில் புறப்பட்டோம். புதுச்சேரி, சென்னை, விசாகப்பட்டணம், புவனேஸ்வரம், கொல்கத்தா, இம்பால், மியன்மார், தாய்லாந்து, லாவோஸ், சைனா, கிர்கிஸ்தான். உஸ்பெகிஸ்தான், கஜகிஸ்தான், ரஷ்யா,  பெலரூஸ், போலந்து, செர்பியா, குரேசியா, பிரான்ஸ் வழியாக லண்டனை அடைந்தோம். ஏறத்தாழ 72 நாட்கள் 26,800 கார் ஓட்டிச் சென்றோம்.

சைனாவில் வழிகாட்டியுடன்தான் பயணிக்க முடியும். எங்களுடன் வந்த வழிகாட்டி, குறிப்பிட்ட எல்லைக்குப் பதிலாக, மற்றொரு எல்லையில் விட்டுவிட்டு, புறப்பட்டுச் சென்றுவிட்டார். ஒருவழி விசா (சிங்கிள் என்ட்ரி) பெற்றிருந்ததால், மீண்டும் திரும்பிய இடத்துக்குப் போகவும் முடியாது. அங்கு மைனஸ் 18 டிகிரி குளிர் நிலவியது. அருகில் இருப்பவரைப் பார்க்க முடியாத அளவுக்கு பனி கொட்டியது. இடையில், பிரியா ராஜ்பால் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார்.

நானும், மூகாம்பிகா ரத்தினமும் மட்டும் செய்வதறியாது திகைத்தோம். பின்னர் சமாளித்துக்கொண்டு, அங்கிருந்த எல்லைக் காவலர்கள் அறையில் தங்கிவிட்டு, அடுத்த நாள் புறப்படத் திட்டமிட்டோம். கடும் குளிரால் கார் ஸ்டார்ட் ஆகவில்லை. சுடுநீர் ஊற்றி பம்ப்களை சரி செய்து, பின்னர் புறப்பட்டோம். ஏறத்தாழ 180 கிலோமீட்டர் தொலைவுக்கு, பனிமலையில் பயணித்தோம். பனி, மோசமான சாலை காரணமாக மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்துக்குமேல் பயணிக்க முடியவில்லை. வழி முழுக்க ஒரு மனிதரைக்கூட பார்க்க முடியவில்லை. ஒரு வழியாக பனிமலையைக் கடந்தோம். ஏறத்தாழ 1,000 கிலோமீட்டர் தொலைவு கூடுதலாகப் பயணித்து, எல்லையைத் தாண்டினோம். அந்த ஆபத்தானப் பயணத்தை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.  பின்னர் லண்டன் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் ஊர் திரும்பினோம்.

தற்போது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறேன். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களில், ஒவ்வொரு 8 நிமிடத்துக்கும் ஒருவர் உயிரிழக்கிறார். இந்த நோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வே இல்லை. எனவே, தென்னிந்தியாவில் 100 இடங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டு, பள்ளி, கல்லூரி மாணவிகள், கிராமப்புற பெண்கள், பணிபுரியும் பெண்கள் என 15-க்கும் மேற்பட்ட இடங்களில் இதுவரை பிரச்சாரம் செய்துள்ளேன்.

இதையொட்டி, மற்றொரு சாசகப் பயணமும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். கோவையில் இருந்து ஆகஸ்ட் 7-ம் தேதி 4 பெண்கள், 4 ஆண்கள் ஆகியோர் 2 கார்களில் புறப்பட்டு, ரஷ்ய நாட்டில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்  நகருக்கு காரிலேயே செல்கிறோம். கோவையிலிருந்து அனந்த்பூர், ஹைதராபாத், நேபாள், எவரெஸ்ட்,  லாசா, திபெத், பெய்ஜிங் வழியாக ரஷ்யா செல்கிறோம். ரஷ்யாவின் வ்ளாடிவோஸ்டோக் முதல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வரையிலான நெடுஞ்சாலையில் பயணிக்கிறோம். உலகில் மூன்றாவது பெரிய நெடுஞ்சாலையான இது, 11,000 கிலோமீட்டர் தொலைவு கொண்டது. கடும் குளிர் மிகுந்த சைபீரியாவைக் கடந்து செல்லும் இந்தப் பாதை, உலகில் ஆபத்தான பாதைகளில் ஒன்றாகும். டீசல் கூட கிடைக்காது என்பதால், பல்வேறு ஏற்பாடுகளுடன் இந்த சாலையைக் கடக்க உள்ளோம்.

ஏறத்தாழ 52 நாட்கள் பயணித்து, பழமையான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை அடைகிறோம். மீண்டும் அங்கிருந்து விமானத்தில் கோவை திரும்ப உள்ளோம்.

உலகம் முழுக்க காரில் பயணிக்க வேண்டுமென்பதே என் விருப்பம். குறிப்பாக, வட அமெரிக்காவையும், தென் அமெரிக்காவையும் இணைக்கும், 18,000 கிலோமீட்டர் தொலைவுகொண்ட நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் கார் ஓட்ட விரும்புகிறேன். எனது சாகசப் 
பயணங்களுக்கு கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பே காரணம்.

பெண்களைப் பொறுத்தவரை, திருமணம் ஆகிவிட்டாலே, தங்களது கனவுகளை புதைத்துக் கொள்ளும் மனப்பக்குவமே உள்ளது. இது மாற வேண்டும். தைரியம், தன்னம்பிக்கையுடன் வெளியுலகம் தெரிந்துகொள்ள வேண்டும். வீட்டிலிருந்து வெளியே வந்து, தனது கனவை, லட்சியத்தை அடைய முயற்சிக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும், கனவுகளை கருகவிடக் கூடாது. முதல் பயணத்தின்போது எனக்குக்கூட கொஞ்சம் பயம் இருந்தது. தொடர் பயணங்கள் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்தன. எனவே, எதையும் சாதிக்க முயற்சிக்க வேண்டும். உலகமெங்கும் பல்வேறு துறைகளிலும் பெண்கள் சாதிக்கிறார்கள். போர் விமானம்கூட ஓட்டுகிறார்கள். இந்த தைரியம், தமிழ்ப் பெண்களுக்கும் வர வேண்டும். யாராவது பாலியல் தொந்தரவு செய்தாலோ,  சீண்டினாலோ, உடனே புகார் செய்து, அவருக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

நான் சைவம் என்பதால், இங்கிலாந்து பயணத்தின்போது உணவுக்கு மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். எனினும், பொடி உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றதால், சமாளித்தேன். ஒரு இடத்தில்கூட எங்கள் பொருட்கள் திருடுபோகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு மிகவும் பிடித்த நாடு தென் அமெரிக்கா, பிரேசில், பெரு உள்ளிட்டவை. அமேசான் காடு, நதியில் பயணித்துள்ளேன். வெளிநாட்டவரின் நேரம் தவறாமை, பொது ஒழுக்கம் மற்றும்  ப்ளீஸ், சாரி, தேங்க்ஸ் சொல்வது எல்லாம் ரொம்பவும் பிடிக்கும். இந்தியர்களின் குடும்ப  வாழ்க்கை முறை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை வெளிநாட்டவரை மிகவும் கவர்ந்தவை. பல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியர்கள் மீது அதிக மரியாதை உள்ளது. பல நாடுகளில் ஆங்கிலம் பேசப்படவில்லை. மொழி தெரியாவிட்டாலும், சைகை உள்ளிட்டவை மூலம் சமாளித்தோம். உலகம் முழுவதும் உள்ள மக்கள் மொழி, உணவு, கலாச்சாரத்தால் வேறுபட்டிருக்கலாம். ஆனால், மனிதநேயமும், உதவி செய்யும் மனப்பான்மையும் எல்லா நாட்டவரிடமும் உள்ளது” என்றார் நெகிழ்ச்சியுடன் மீனாட்சி அர்விந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x