Published : 25 Jul 2019 11:08 AM
Last Updated : 25 Jul 2019 11:08 AM

பராமரிப்பு இல்லாத 108 ஆம்புலன்ஸ்கள்!- கேள்விக்குறியாகும் நோயாளிகள் பாதுகாப்பு 

ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டத்தில்  இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உரிய பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

நீலகிரி மாவட்டத்தில்  இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உரிய பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏழை மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள், தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்தல் உள்ளிட்டவற்றில் அரசு தீவிரமாக ஈடுபட்டு  வருகிறது. மேலும், மக்களின் நலனுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 108 ஆம்புலன்ஸ் வாகன சேவை தொடங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் வேன் மற்றும் ஜீப் ரகங்களில், 29 ஆம்புலன்ஸ் வாகனங்கள்  இயங்கி வருகின்றன. இந்த மாவட்டம்   மலைப்பாங்கான பகுதி என்பதால், மசினக்குடி, ஐயங்கொல்லி, நிலாக்கோட்டை, எடப்பள்ளி, மு.பாலாடா, சோலூர் மட்டம் மற்றும் பைக்காராவில்  `ஃபோர் வீல் டிரைவ்’ முறையில் இயங்கக்கூடிய ஜீப்புகள் வழங்கப்பட்டன.

பராமரிப்பு இல்லாத வாகனங்கள்!

இந்த நிலையில், வேன் ரக ஆம்புலன்ஸ்கள் மிகப் பழமையானவை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 1989-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த வாகனங்கள்,  ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகாலமாக பயன்படுத்தப்பட்ட இந்த வாகனங்கள், தற்போது போதிய பராமரிப்பின்றி இருக்கின்றன.

இதனால், ஊழியர்கள் மற்றும் அதில் பயணிக்கும் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் கூறும்போது, “நீலகிரி மாவட்டத்தில் 108 மருத்துவ சேவைக்கு இயக்கப்படும் வேன் ரக ஆம்புலன்ஸ் வாகனங்கள் போதிய பராமரிப்பின்றி, இயங்கத் தகுதியற்ற நிலையில் உள்ளன. வாகனங்களில் காப்பீடு, மாசுக்  கட்டுப்பாடு என எவ்விதச் சான்றிதழ்களும் இல்லை. மேலும், டயர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. உதிரி பாகங்கள், மருத்துவ உபகரணங்கள் எதுவுமில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும்கூட, உரிய நடவடிக்கை இல்லை.
இதனால் ஆம்புலன்ஸ் வாகனங்களில் பயணிப்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழலே நிலவுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மலைப் பாதைகளில் ஆம்புலன்ஸ் இயங்க வேண்டும் என்பதால், வாகனம் முறையான பராமரிப்புடன் இருக்க வேண்டும்.  ஆனால், பராமரிப்பே இல்லாமல்தான் வாகனங்களை வைத்திருக்கின்றனர்.

அதேபோல, பழங்குடியினர் பகுதிகளுக்கு பயன்படுத்தப்படும் ஜீப் வகை ஆம்புலன்ஸ்களை நகரப் பகுதிகளுக்கும், கோவைக்கும் செல்லப் பயன்படுத்துகின்றனர். எனவே, அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்வதுபோல, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஆம்புலன்ஸ் வாகனங்களையும் ஆய்வுசெய்து,  சான்று அளிக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவை தனியார் நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இவர்கள்தான், வாகனத்தைப் பராமரிப்பதுடன், ஊழியர்களுக்கு  சம்பளம் வழங்குகின்றனர். அரசிடமிருந்து உரிய தொகையைப் பெற்றுக் கொள்ளும் இவர்கள், சேவையில் மட்டும் அலட்சியம் காட்டுகின்றனர்” என்றனர்.
உயிரைப் பாதுகாக்க அறிமுகப்படுத்தப்பட்ட 108 மருத்துவ சேவையில், ஆம்புலன்ஸ்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால், இதில் பயணம் செய்யும் நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு குன்னூர்-கோத்தகிரி சாலையில் சென்றுகொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் டயர் கழன்று விழுந்தது.  அதேபோல, இரு தினங்களுக்கு முன் குன்னூர் அருகே பிருந்தாவன் பள்ளிக்குச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸ் வாகனம், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஓடையில் கவிழ்ந்தது. வாகன ஓட்டுநர் சந்தீப்(30) பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். விபத்தில் சிக்கியவர்களை மீட்டுச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களே, விபத்தில் சிக்குவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

புதிதாக 3 வாகனங்கள்...

108 ஆம்புலன்ஸ் பராமரிப்புப் பணிகள் தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஹரியன் ரவிக்குமாரிடம் கேட்டபோது, “தனியார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆம்புலன்ஸ் சேவை தொடர்கிறது. அதற்கான நிதியை அரசு வழங்குகிறது. எனவே, தனியார் நிறுவனம்தான் ஆம்புலன்ஸ் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்களின் பராமரிப்பு தொடர்பாக, சென்னையில் உள்ள நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தினர் நீலகிரி மாவட்டம் வந்து ஆய்வு நடத்தியுள்ளனர்.  வாகனங்களை உரிய முறையில் பராமரிப்பதாகவும் உறுதியளித்தனர். 

மேலும்,  வாகனங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கவும், வாகனங்களில் தேவையான மருத்துவ உபகரணங்களை வைப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.  இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு மேலும் 3 வாகனங்களை அரசு வழங்க உள்ளது” என்றார். 

கைகொடுக்கும் ஜீப் ஆம்புலன்ஸ்!

மசினக்குடி, ஐயங்கொல்லி, நிலாக்கோட்டை, எடப்பள்ளி, மு.பாலாடா, சோலூர் மட்டம் மற்றும் பைக்காராவில் ஜீப் வாகன ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்கள், மலை மாவட்டத்தில் எளிதில் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

நான்கு சக்கரங்கள் மூலமாகவும் இயங்கக்கூடிய இந்த வாகனங்கள் மலைப் பகுதிகளில் நன்கு இயங்கும். குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள இந்த வாகனங்களில், அனைத்துவித மருத்துவ அவசர சிகிச்சை, முதலுதவி வசதிகள் உள்ளன. மேலும், இந்த வாகனத்தில் பிரத்தியேக `ஸ்ட்ரெட்ச்சர்’ படுக்கையும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், 108 ஆம்புலன்ஸ் வாகனப் பணியில் ஈடுபடுவோருக்கு  சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன.

“மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவ ஆம்புலன்ஸ் வாகனம்,  உதகை அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ளது. இதில், பச்சிளம் குழந்தைகளுக்குத் தேவையான சிறப்பு மருத்துவ உபகரணங்கள் மற்றும் இன்குபேட்டர் உள்ளது. குக்கிராமங்களில் உள்ளவர்களின் மருத்துவத்  தேவையை புதிய ஜீப் ரக ஆம்புலன்ஸ் வாகனங்கள் பூர்த்தி செய்கின்றன” என்கின்றனர் மருத்துவத் துறை அதிகாரிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x