Published : 25 Jul 2019 11:05 AM
Last Updated : 25 Jul 2019 11:05 AM

ஓவியம் மூலம் பாடம்! - அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்

எஸ்.கோவிந்தராஜ்

கற்பித்தல் முறையில் புதுமையைப் புகுத்தும் ஆசிரியர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவது, கல்வித் துறை வளர்ச்சியின் அறிகுறி. அந்தவகையில், வகுப்பறையில் பாடங்களை, தனது ஓவியங்கள் மூலம்  கற்பிக்கிறார் ஈரோடு மாவட்டம் மோதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பா.சாமுவேல்..

கல்விச் செல்வத்தை வழங்கும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும், கற்பித்தலில் தனித்தன்மை கொண்டவர்கள். கண்டிப்பு, மனப்பாடம், பாடல், நடனம், பொம்மலாட்டம் என பல வடிவங்களில் ஆசிரியர்கள் கல்வி கற்றுத்தரத் தொடங்கியுள்ளனர். பள்ளிக் கல்வித் துறையால், ‘புதுமை கற்பித்தல் ஆசிரியர் விருது’ பெற்ற ஈரோடு ஆசிரியர் சாமுவேல், தனது ஓவியங்களாலே வகுப்புகளை அலங்கரிக்கிறார்.  தான் வரைந்த படங்களால் அவர் பாடங்களை விளக்கும்போது, எளிமையாகப் புரிந்து கொள்கின்றனர் மாணவர்கள்.

தூத்துக்குடி மாவட்டம் மாணிக்கபுரம் கிராமமே அவரது சொந்த ஊர். மாமா பாஸ்கரன் வீட்டுச் சுவரில் அண்ணா படத்தை கரிக்கட்டையால் வரைந்துவைக்க, அதைப் பார்த்து வரையப் பழகியுள்ளார் சாமுவேல். ஒருகட்டத்தில் சாமுவேலின் ஓவியங்களில் ஆதர்ச நாயகர்களாக அண்ணாவும், எம்ஜிஆரும் மாறியுள்ளனர்.

“மனித முகத்தை வரைவதில் எம்ஜிஆர்தான் எனக்கு மாடல். கரிக்கட்டையைத் தாண்டி ஓவியத் தூரிகை வாங்க முடியாது என்பதால், கோட்டு ஓவியங்கள் மூலம் பல வடிவங்களில் எம்ஜிஆரை வரையத் தொடங்கினேன். தலையில் உள்ள எண்ணெயை காகிதத்தில் துடைத்து, வரலாற்றுப் புத்தகத்தில் உள்ள தலைவர்கள், அரசர்களை பதிய வைத்து வரையப் பழகினேன். எங்கள் கிராமத்து சுவர்களில் பஸ், கார், குருவி, மரம் என கரிக்கட்டை ஓவியங்கள் வரைந்ததால், சுவர்களை நாசம் செய்து விட்டதாக வீட்டில் புகார் குவியும். அந்த சமயத்தில், எங்கள் பகுதியில் இடைத்தேர்தல் வர, உதயசூரியன், இரட்டை இலை வரையும் வாய்ப்பு உறவினர் மூலம் கிடைத்தது. எனது ஓவியங்களுக்கு  6-ம்  வகுப்பு ஆசிரியர்  பாராட்டுத் தெரிவித்தது ஊக்கமளித்தது.

அதிக படங்களை வரையலாம் என்பதற்காகவே, பிளஸ் 1-ல் தாவரவியல், விலங்கியல் பாடப் பிரிவு எடுத்தேன். திடீரென ஆங்கில வழிக் கல்வி அறிமுகமானதால், மதிப்பெண் குறையத் தொடங்கியது. `உனக்கு படிப்பு வர்லேன்னா, நாகர்கோவில் ஓவியப் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்துவிடு’  என்று எனது ஆசிரியர் அப்போதே வழிகாட்டியாய் இருந்தார். ஆனால், ஓவியக் கல்லூரியில் சேர முடியாத நிலையில், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்தேன்.

பின்னர் கோவையில் பத்திரிகை அலுவலகத்தில் பிழை திருத்தும் பணியில் சேர்ந்து, 18 ஆண்டுகள்  பணிபுரிந்தேன். ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களால் ஈர்க்கப்பட்டு, அவரது ஓவியங்களை மீண்டும் மீண்டும் வரைந்து பழகியுள்ளார். ஒரு கதைக்காக அவர் வரைந்த படம் அச்சில் வெளியானது. எனினும், தொடர்ந்து ஓவியம் வரையும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதற்கிடையில், பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி கிடைக்கவே,  2009-ல் சத்தியமங்கலம் அருகேயுள்ள அரியப்பம்பாளையம் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிக்கு சேர்ந்தேன். பின்னர், கடம்பூர் இருட்டிப்பாளையம் பள்ளியில் பணியாற்றினேன். தற்போது, மோதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பணிபுரிகிறேன்.

பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் கசந்தாலும், படங்கள் இனிக்கிறது. எந்த விஷயமானாலும் படங்களை வரைந்து சொல்லும்போது, அவர்கள் ரசிப்பதுடன், எளிதில் மனதில் பதிய வைத்துக் கொள்கிறார்கள். எனவே, கணிதம் தவிர, இதர பாடங்களை ஓவியங்களாக வரைந்து, கற்பித்து வருகிறேன். இதனால், பாடங்களை எளிதாக உள்வாங்கிக் கொள்ளும் மாணவர்கள், அதை தேர்வுகளில் சிரமமின்றி வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும், பள்ளி தகவல் பலகையில், சுற்றுச்சூழல் தினம், அன்னையர் தினம் என அந்த நாளுக்குரிய முக்கியத்துவத்தை ஓவியமாக வரைகிறேன். மேலும், தலைவர்கள் பிறந்த தினம், நினைவு தினங்களின்போது, அவர்களது வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை வரைந்து, தலைவர்களின் பெருமையை மாணவர்களுக்கு விளக்குகிறேன். இதேபோல, டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் ஒழிப்பு, சுகாதாரம், பிளாஸ்டிக் ஒழிப்பு, புவி வெப்பமயமாதல், மது ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவை தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்களும் வரைகிறேன்.

எனது மாணவர்கள் பல்வேறு ஓவியப் போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்றுள்ளனர்” என்றார்.
சக ஆசிரியர்கள் அடுத்த நாள் நடத்தப் போகும் பாடத்தை சாமுவேலிடம் தெரிவித்து, படமாக வரைந்து வாங்கி, அதன் மூலம் பாடம் நடத்துகின்றனர்.

“நான் வரைவது கார்ட்டூன் பாணியிலான கருத்துப் படங்கள். மற்ற மாணவர்களைவிட, கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள், ஓவியங்கள் மூலம் பாடங்களை எளிதில் புரிந்து கொள்கின்றனர். குழந்தைகளுக்கு ஆரம்பம் முதலே ஓவியங்கள் மீது ஈர்ப்பு ஏற்படச் செய்யும் வகையில், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் ஓவிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்” என்கிறார் ஆசிரியர் சாமுவேல்.

`வாத்தியாரை’மறக்காத வாத்தியார்!

சிறு வயதில் எம்ஜிஆர் படத்தை வரைந்து, ஓவியத் திறனை வளர்த்த சாமுவேல், இன்னும் அவரை மறக்கவில்லை. எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றை ‘பொன்மனம்’ என்ற தலைப்பில் ஓவியங்களாக வரைந்து வருகிறார். இதுவரை 288 படங்கள் வரைந்துள்ள சாமுவேல், பல்வேறு பணிகளுக்கு இடையேயும் ஓவியம் வரைவதைத் தொடர்கிறார். “எனது ஆதர்ச ஓவியரான ஜெயராஜை இதுவரை நேரில் பார்த்ததில்லை. விரைவில் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருக்கிறேன்” என்றார் நெகிழ்ச்சியுடன் சாமுவேல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x