Published : 24 Jul 2019 11:28 AM
Last Updated : 24 Jul 2019 11:28 AM

மேட்டூர் அணையிலிருந்து 17 கிளை வாய்க்கால்களுக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

சென்னை

மேட்டூர் அணையிலிருந்து 17 கிளை வாய்க்கால்களுக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். 

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசு குடிநீர் தேவைக்காகவும், வாய்க்கால்களின் தண்ணீரை நம்பியுள்ள பயிர்களைக் காப்பாற்றவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஆங்காங்கே குடிநீருக்கான தண்ணீர் தேவை இன்னும் முழுமை அடையவில்லை என்பதால் அதனைப் பூர்த்தி செய்ய வேண்டிய அவசிய, உடனடி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக குடிநீருக்காக திருச்சி-கரூர் மாவட்ட உய்யக்கொண்டான் - கட்டளை உள்ளிட்ட 17 கிளை வாய்க்கால்களில் உடனடியாக தண்ணீர் திறக்கப்பட்டால் தான் பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்கும்.

மேலும், 11 மாத பாசன உரிமை உடைய 17 கிளை வாய்க்கால்களின் தண்ணீரை நம்பி இருக்கின்ற பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்படும் பயிர்கள் தற்போது போதுமான தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. அதாவது ஆண்டு பயிர்களான வாழை, கரும்பு, வெற்றிலை, மல்லிகை போன்ற பலவகையான மலர்கள், தென்னை, மா போன்றவற்றிற்கு தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகுமோ என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே ஆண்டு பயிர்களைக் காப்பற்றவும், குடிநீருக்காகவும் வாய்க்கால்களில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அதேபோல டெல்டா மாவட்டங்களிலும் குடிநீருக்கு தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே மேட்டூர் அணையிலிருந்து 2500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் கூடுதலாக 2500 கனஅடி தண்ணீரை குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு திறந்தால் மொத்தம் 5000 கனஅடி தண்ணீரானது குடிநீருக்குப் பயன்படும்.

அதுமட்டுமல்ல இந்த 5 ஆயிரம் கன அடி தண்ணீரானது பாசனத்திற்கும் ஓரளவுக்கு பயன்படும். ஏற்கெனவே விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போதைய சூழலில் ஆண்டு பயிர்களைக் காப்பாற்றவும், குடிநீருக்கும் மேட்டூர் அணையிலிருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கவும், வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்கவும் உடனடி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்", என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x