Published : 06 Jul 2015 10:29 AM
Last Updated : 06 Jul 2015 10:29 AM

திருப்பூர் அருகே ஊத்துக்குளியில் ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு - அதிகாரி உட்பட 2 பேர் தற்காலிக பணிநீக்கம்

திருப்பூர் அருகே ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் நேற்று காலை சென்னை மற்றும் திருவனந்தபுரம் ரயில்கள், ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்ததால் விபத்து நிகழும் சூழல் ஏற்பட்டது. ஓட்டுநர்களின் திறமையால் அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பத்தைத் தொடர்ந்து, ரயில் நிலைய அதிகாரி உட்பட 2 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்டனர்.

கோவை-சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 6.15 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டது. காலை 7.30 மணியளவில் இந்த ரயில் திருப்பூரைத் தாண்டி ஊத்துக்குளி ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, ஐதராபாத்- திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் ஊத்துக்குளி ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தது.

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்த அதே தண்டவாளத்தில் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலும் வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர் ஊத்துக்குளி ரயில் நிலையம் பகுதியில் ரயிலை நிறுத்தினார்.

இதுகுறித்து உடனே சேலம் கோட்ட ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, சபரி எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநரும் ரயிலை நிறுத்தினார். 2 ரயில்களும் சுமார் 50 மீட்டர் இடைவெளியில் நிறுத்தப்பட்டதால் பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது. அப்போது, இரண்டு ரயில்களிலும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், அந்த வழியே அனைத்து சிக்னல்களும் செயல் இழக்கம் செய்யப்பட்டன. எதிரெதிரே 2 ரயில்கள் நிற்பதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பாதை மாற்றும் இயந்திரம் பழுது காரணமாக 2 ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்திருப்பதாக ரயில்வே அதிகாரி கள் பயணிகளிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில், சபரி எக்ஸ் பிரஸ் ரயில் வேறு தண்டவாளத் துக்கு மாற்றப்பட்டது. ஒரே தண்ட வாளத்தில் இரு ரயில்கள் வந்தது குறித்து ரயில்வே அதிகாரிகள், ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

கவனக்குறைவு

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியது: ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் ரயில்வே தண்டவாளம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. கோவை- சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை வேறு டிராக்கில் மாற்றிவிடாததால், இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் சென்றது தெரியவந்தது. கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கூறி, ஊத்துக்குளி ரயில் நிலைய அதிகாரி முகேஷ்குமார், பாயிண்ட்ஸ்மேன் திலிப்குமார் ஆகிய இருவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். துறை ரீதியான விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x