Published : 23 Jul 2019 03:41 PM
Last Updated : 23 Jul 2019 03:41 PM

10% இட ஒதுக்கீடு: காங்கிரஸை நம்பி திமுக இல்லை; புதுச்சேரி பேரவையில் எழுந்த திடீர் மோதல்

புதுச்சேரி

காங்கிரஸை நம்பி திமுக இல்லை- திமுகவுக்கு தனி கொள்கையுண்டு என்று திமுக எம்எல்ஏ பேரவையில் காங்கிரஸ் அரசை விமர்சித்துப் பேசினார். இதனால் திடீர் மோதல் எழுந்தது. அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்எல்ஏக்களும் அவையில் பேசினர். இறுதியில் 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் சிறப்புக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இக்கூட்டத்தின்போது திமுக எம்எல்ஏ சிவா, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10%  இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மருத்துவப் படிப்புகளில் சேர சுகாதாரத் துறை செயலர் வெளியிட்ட உத்தரவைக் காட்டிப் பேசினார்.

அப்போது ஏற்பட்ட கடும் வாக்குவாதம்:

சிவா (திமுக):

"10% இட ஒதுக்கீடு தர புதுச்சேரி அரசு எவ்விதத்தில் முடிவு எடுத்தது. கூட்டணியில் இருக்கிறோம். இதில் மவுனித்தால் நாங்கள் ஏற்றதாக ஆகிவிடும். காங்கிரஸை நம்பி திமுக இல்லை. திமுகவுக்கு தனி கொள்கையுண்டு. இம்முடிவு சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது. பாஜக அரசின் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த யார் சொன்னது? அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டவேண்டும். அமைச்சரவை  முடிவு எடுக்க வேண்டும்."

லட்சுமி நாராயணன் (காங்கிரஸ்):

"இட ஒதுக்கீடு விஷயத்தில் அரசு கமிஷன் போட்டு செய்ய வேண்டும். நிர்வாக ஒதுக்கீடாக உத்தரவிட்டுள்ளது தவறானது. மிகப்பெரிய குழப்பமாகும். அரசு கொள்கை முடிவு எடுத்திருக்க வேண்டும். மிகப்பெரிய கொந்தளிப்பு உள்ளது."

நியமன எம்எல்ஏ சாமிநாதன்:

10%  இட ஒதுக்கீட்டில் புரிதல் இல்லை. காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. ஸ்டாலின் தவறாகத் திரித்துள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட அரசு தயாராக இல்லை. தமிழகத்தில் கூட்டத்தைப் போட்டுள்ளனர்.

இதையடுத்து திமுக எம்எல்ஏவுடன் நியமன எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில காங்கிரஸ் எம்எல்ஏக்களும் திமுகவுக்கு ஆதரவாக வாதிட்டனர். முதல்வர், அமைச்சர்கள் இதில் குறுக்கிடவில்லை.

அன்பழகன் (அதிமுக):

திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பை மீறி புதுச்சேரி முதல்வர் காங்கிரஸ் தலைமை ஆதரவுடன் இச்சட்டத்தை அமல்படுத்தியுள்ளார். திமுக சமூக நீதிக்கு எதிரானது என்றால் ஆதரவை வாபஸ் பெறுங்கள்.

முதல்வர் நாராயணசாமி:  

உயர் சாதியினரில் வறுமையில் இருப்போருக்கு 10%  இட ஒதுக்கீடு என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தவில்லை. புதுச்சேரியில் மாநில அரசின் அதிகாரத்தில் வரும் இடங்களுக்கு, அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசி தான் முடிவு எடுப்போம். அரசு மருத்துவக்கல்லூரியில் கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்க இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் கோரினோம். தற்போது 30 இடங்கள் தந்துள்ளனர். 10%  இட ஒதுக்கீட்டை இதில் செயல்படுத்தினால்தான் இடம் உயரும் என்ற விதிமுறைப்படி அதிகரித்துள்ளனர். அதனால்தான் இவ்விஷயத்தில் இம்முடிவு எடுத்துள்ளோம். மறுபரிசீலனை செய்வோம்.

இவ்வாறு வாக்குவாதம் ஏற்பட்டது.

-செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x