Published : 23 Jul 2019 12:59 PM
Last Updated : 23 Jul 2019 12:59 PM

சந்திராயன் 2: எதிர்கால மானுட வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்; கி.வீரமணி பாராட்டு

சென்னை

சந்திராயன் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் அரிய முயற்சியால் சந்திராயன் - 2 விண்ணில் ஏவப்பட்டுள்ளது. நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் சந்திராயன் எனும் அறிவியல் சாதனை சரித்திர சாதனையாகி, உலகத்தை வியக்கச் செய்திருக்கிறது!

பாராட்டுக்குரிய தமிழரான விஞ்ஞானி தலைமையில் சாதனை!

தமிழரான விஞ்ஞானி சிவனின் தலைமையிலான குழுவினர் இந்த அரிய முயற்சியில் சாதனை படைத்துள்ளனர் என்பது பெருமகிழ்ச்சிக்கும், பாராட்டுதலுக்கும் உரியதாகும்.
சுமார் 1,000 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள சந்திராயன், மிக வெற்றிகரமான சோதனையாக அமைந்துள்ளது.

இதன் பாகங்கள் பெரிதும் உள்நாட்டிலேயே கிடைக்கும் கருவிகள் - பொருள்கள் மூலமே தயாரிக்கப்பட்டுள்ளது என்று விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தது மிகவும் பூரிப்புக்குரிய ஒன்று!

இதுவரை யாரும் ஆய்வு செய்யாத நிலவின் பகுதியில் புதிய ஆய்வு

முதலில் சிறிது தடங்கல் ஏற்பட்டாலும்கூட, அதனால் ஊக்கம் இழந்துவிடாமல், உடனடியாக அதைச் சரி செய்து, எதிர்பார்த்ததற்கு முன்னதாகவே அதை ஏவியுள்ளதும் - அதுவும் இதுவரை யாரும் ஆய்வு செய்யாத நிலவின் தென் துருவப் பகுதியைக் குறி வைத்து ஆய்வு செய்து, தண்ணீர் உள்ளதா என்று கண்டறிவதும் எதிர்கால மானுட வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவதாகும்.

புராணத்தில் விஞ்ஞானத்தைத் தேடவேண்டாம்!

இத்தகைய சாதனைகளைப் பெருக்கும்போது, அறிவு, ஆராய்ச்சி, முயற்சிகள் காலத்தின் முன்னோக்கியதாகவும், எதிர்காலம் ஒளிமிக்கதாக அமையவேண்டும் என்பதாகவும் இருக்கவேண்டுமே தவிர, பின்னோக்கி புராணங்களில் விஞ்ஞானத்தைத் தேடிடும் விபரீத முயற்சிகளாகவே அமைந்துவிடக் கூடாது. அது அசல் கேலிக் கூத்தாகவே முடியும்!

இந்திய விஞ்ஞானிகளின் - பெண்களின் கூட்டு முயற்சியின் சிறப்பான வெற்றியாக இது உள்ளது. இதில் ஈடுபட்ட அனைவருக்கும் நமது உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்", என கி.வீரமணி தெரிவித்துள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x