Published : 21 Jul 2019 08:17 AM
Last Updated : 21 Jul 2019 08:17 AM

கேரள கடலில் மூழ்கிய 3 மீனவர்களை தேடும் பணி 2-வது நாளாக தீவிரம்: நீரோடி கிராம மக்கள் சோகம் 

நாகர்கோவில்

கேரள கடலில் மூழ்கிய குமரி மீனவர்கள் 3 பேரை தேடும் பணி நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. அவர்களது நிலைமை குறித்து தெரியாததால் நீரோடி மீனவ கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

கன்னியாகுமரி நீரோடியைச் சேர்ந்த ஸ்டான்லி என்ற மீனவரின் நாட்டுப்படகில், அவரும், அதே பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களும் கேரள மாநிலம் நீண்டகரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 13-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர்.

சூறாவளி எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடந்த 18-ம் தேதி அவர்கள் கரை திரும்ப முயன்றனர். நீண்டகரை துறைமுகம் அருகே சூறைக்காற்றால் எழுந்த ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. அதிலிருந்த 5 மீனவர்களும் தூக்கி வீசப்பட்டு, கடலில் தத்தளித்தனர்.

ஸ்டான்லி, நிக்கோலஸ் ஆகிய இருவரும் நீந்தி வந்து 19-ம் தேதி கரை சேர்ந்தனர். காயங்களுடன் இருந்த அவர்கள் நீண்டகரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது, தங்களுடன் வந்த ராஜீ, ஜான் போஸ்கோ, சகாயம் ஆகிய 3 பேரும் ரப்பர் கேனை பிடித்தவாறு கடலுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர். ஆனால், நேற்று மாலை வரை அவர்கள் கரைதிரும்பவில்லை.

கேரள மெரைன் போலீஸார் மற்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் நேற்று 2-வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீரோடியிலிருந்து சென்ற மீனவர்களும் நீண்டகரை துறைமுகப் பகுதியில் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். மாயமான 3 மீனவர்களின் நிலை என்ன என்பது தெரியாததால், நீரோடியில் உள்ள அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x