Published : 20 Jul 2019 12:59 PM
Last Updated : 20 Jul 2019 12:59 PM

வேலை வாங்கித்தருவதாக மோசடி : கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டோர் மனு

கோயம்புத்தூர்

வெளிநாடுகளில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை கணபதி பகுதியில் கேய்டின்ஸ் வேலைவாய்ப்பு மையம் என்ற நிறுவனத்தை பிரின்ஸ் டேனியல் மற்றும் அவரது மனைவி கரிஷ்மா டேனியல் ஆகியோர் நடத்தி வந்துள்ளனர். மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்பு என விளம்பரப்படுத்தியதை அடுத்து அங்கு ஏராளமான மாணவர்கள் வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொருவரிடமும் தலா ரூ. 2 லட்சம் வரை பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கி காலம் தாழ்த்தி இழுத்தடிப்பு செய்துள்ளனர்.

இதனால், சந்தேகம் அடைந்த பணம் செலுத்தியவர்கள் பிரின்ஸ் டேனியலை அணுகி பணத்தை திருப்பிக் கேட்டபோது, வெளிநாடுகளில் வேலை கிடைக்க முன்பணமாகச் செலுத்தி விட்டதாகவும், பணமெல்லாம் திருப்பிக் கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும், தான் நீலகிரி மாவட்ட ரஜினிகாந்த் மன்ற இளைஞர் அணி துணை செயலாளராக இருப்பதாகவும், தனக்கு அரசியல் பலம் இருப்பதாகவும் கூறி பணம் செலுத்தியவர்களை மிரட்டியுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "இதேபோன்ற வேலைவாய்ப்பு நிறுவனத்தை பிரின்ஸ் டேனியல் நீலகிரியில் இயக்கி வந்தார். தற்போது, அதுவும் மூடப்பட்ட நிலையில், அவரும், அவரது மனைவியும் தலைமறைவாக உள்ளனர். இது குறித்து காவல்துறையினரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என 300-க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி உள்ளதாகவும், சுமார் 6 கோடி ரூபாய் வரை ஏமாற்றப்பட்டிருக்கிறோம்" எனக் கூறிய பாதிக்கப்பட்டவர்கள், செலுத்திய பணத்தை திரும்பக் கிடைக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x