Published : 19 Jul 2019 02:54 PM
Last Updated : 19 Jul 2019 02:54 PM

உதயநிதி நியமனம்: பகலில் தெரிவதில்லை என்பதால் நட்சத்திரங்களே இல்லை என்பீர்களா?- தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி

ஆங்கிலப் பேராசிரியை, கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், இலக்கியவாதி, நாடகக் கலைஞர் என பன்முகத் தன்மைகொண்ட தமிழச்சி தங்கபாண்டியன், தென் சென்னை தொகுதி எம்.பி.யாக தனது கன்னிப் பேச்சை நேற்று (ஜூலை 18) மக்களவையில் நிகழ்த்தினார். பட்ஜெட்டையும் பாஜகவையும் சரமாரியாக விமர்சித்த தமிழச்சி, பல்வேறு அறிஞர்களின் கூற்றுகளை முன்னிறுத்திப் பேசியிருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய முதல் பேச்சு பற்றியும் மக்களவை செயல்பாடுகள் குறித்தும் உதயநிதி நியமனம் குறித்த விமர்சனம் மீதும் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் விரிவாகப் பேசினார் தமிழச்சி.

மக்களவையில் முதல்முறையாகப் பேசிய உங்களின் உடல்மொழி பரவலான கவனத்தைப் பெற்றது. ஆசிரியர் என்பதால் இது சாத்தியமானதா?
அதையும் ஒரு காரணமாகச் சொல்லலாம். அடுத்ததாக நானொரு ஆர்ட்டிஸ்ட். தமிழ் நாடகங்களில் நடித்திருக்கிறேன். சொற்பொழிவாளராக இருப்பவருக்கு உடல்மொழி அவசியம். அதனால் எனக்கு இயல்பாகவே அது வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

பேச்சில் திருவள்ளுவர், கணியன் பூங்குன்றனார், ஷேக்ஸ்பியர், ஷெல்லி ஆகியோரின் படைப்புகளை மேற்கோள் காட்டியிருந்தீர்கள். இலக்கியவாதியாக இதைச் செய்தீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
கணியன் பூங்குன்றனும் வள்ளுவனும் நம் நிலம் சார்ந்தவர்கள். சமூக நீதி, சமத்துவம் ஆகியவை அவர்களின் படைப்புகளில் இருக்கின்றன. நிலம், இனம், மொழி, சிந்தனை ஆகியவை சார்ந்த பண்பாடுகளின் வெளிப்பாடுகள்தான் அவர்களின் படைப்புகள். தமிழர்கள் என்றால் தமிழ் மட்டும் என்கிற அடிப்படைவாதிகள் என்று சித்தரிக்கப்படுகின்றனர். அது உண்மையில்லை. எதையும் திணிக்கும்போது ஏற்காதவர்கள் நாம். அதை முன்னிறுத்தியே அவர்களைப் பற்றிப் பேசியிருந்தேன்.

மக்களவையில் உங்களின் முதல் உரை குறித்து? தங்கம் வாங்குவது குறித்தும் பேசியிருந்தீர்கள்...
என்னுடைய தென் சென்னைத் தொகுதியைக் குறித்துப் பேசினேன். மீனவர்கள், சிறு, குறு விவசாயிகள், சிறுதொழில் செய்வோர் ஆகியோரின் பிரச்சினைகளை முன்வைத்தேன். விவசாயக் கடன்களை ரத்து செய்யாமல், 6,000 ரூபாய் கொடுப்பது சரியா என்று கேள்வி எழுப்பினேன்.

விவசாயிகள் மட்டுமல்ல, நடுத்தர மக்கள், வியாபாரிகள், உரிமை மறுக்கப்பட்டவர்கள், பெண்கள் என அனைவருமே வாடுகின்றனர். தங்கத்தின் மீதான அதிகரிக்கப்பட்ட வரி விதிப்பால், தாலிக்குத் தங்கம் வாங்குவதுகூட கனவாகிவிடும் என்றேன். 'இந்தியா ரத்தம் சிந்துகிறது!' என்பதுதான் என் உரையின் சாராம்சம். அதற்குத்தான் ஷெல்லியின் கவிதையை மேற்கோள் காட்டியிருந்தேன்.

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் எப்படி செயல்படுகிறீர்கள்?
தமிழகம் மட்டுமல்ல, தேசத்தின் அனைத்து உரிமைகளுக்கும் குரல் கொடுக்கிறோம். தண்ணீர்ப் பிரச்ச்சினை, நெக்ஸ்ட் தேர்வு, மும்மொழிக் கொள்கை என அனைத்து விவகாரம் குறித்தும் பேசுகிறோம். தெளிவாக, ஆதாரங்களுடன் பிரச்சினைகளை முன்வைக்கிறோம். பிரச்சினைகள் சார்ந்து அவையில் எதிர்க்கட்சிகளுடன் கடுமையான மோதல் இருக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்திலும் மதச்சார்பின்மையிலும் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லாமல் செயல்படுகிறோம்.

எந்தப் பிரச்சினை என்றாலும் உடனடியாகக் குரல் கொடுக்கிறோம். மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் அனைவரும் தபால் துறை தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததையும் தேர்வு ரத்து செய்யப்பட்டதையும் பார்த்திருப்பீர்கள். மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம். தேவைப்பட்டால் மீண்டும் கொண்டுவருவோம். ஒவ்வொரு நாளும், பிரச்சினைகளைத் தீர்க்க சாத்தியமான அனைத்து வழிகளையும் முயற்சிக்கிறோம்.

அதிமுக சார்பில் மக்களவையில் ஒரேயொரு எம்.பி.தான் உள்ளார். அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?
கடந்தமுறை அதிமுக எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதும் அவர்கள் எதுவும் செய்யவில்லை. இப்போதும் எதுவும் செய்வதில்லை. இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் ஏற்படவில்லை. அவர்களைப் பொருத்தவரை எண்ணிக்கை ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தமிழக மக்களுக்காகவோ, மக்களின் நலன் சார்ந்தோ, உரிமை சார்ந்தோ அதிமுக எம்.பி.க்கள் என்ன செய்திருக்கிறார்கள்?

ஒருவர் இருக்கும்போதும் சரி, 37 பேர் இருந்தபோதும் சரி, அவர்களின் செயல்பாடுகள் பூஜ்ஜியமாகவே இருக்கின்றன.

இந்தி தெரியாமல் தமிழக எம்.பி.க்கள் அவையில் மற்ற மாநில எம்.பி.க்களுடன் பேசவும் நமது குரல் ஓங்கி ஒலிக்கவும் மொழி தடையாக இருப்பதாக உணர்கிறீர்களா?
கண்டிப்பாக இல்லை. தமிழக எம்.பி.க்கள் தமிழிலேயே பேசலாம். உடனடி மொழிபெயர்ப்பு வசதியும் உள்ளது. கருத்து ரீதியாகவே இதற்கு எதிர் நிலையில் இருப்பவர்கள் நாங்கள். உலகம் முழுவதும் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பேசுகிறோம். தமிழில் பேசப்படும் உரையும் உடனுக்குடன் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. அதனால் அதுபோல எதையும் நாங்கள் உணரவில்லை. அதற்கான தேவையும் ஏற்படவில்லை.

தமிழத்தைத் தாய்வீடாகக் கொண்ட நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஒரு தமிழச்சி முழு நேர முதல் பெண் நிதியமைச்சராக பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது பெருமையாக இருந்தது. ஆனால் அவர் இந்தி மொழிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஆசிரியரை நியமிக்க நிதி ஒதுக்கும்போது, வட்டார மொழிகளுக்கும் நிதி ஒதுக்கி இருக்கலாமே! அதேபோல வரிசெலுத்தும் பெண்களுக்கு சலுகை இருக்கும் என்று எதிர்பார்த்தோம், நடக்கவில்லை.

சென்னை வெள்ளம், வார்தா, கஜா புயல் என இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு சிறப்பு நிதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. தற்போது தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டையும் சமாளிக்கும் தொலைநோக்குத் திட்டங்களோ, நிதியோ இல்லை. பொருளாதார ஆய்வறிக்கையில் கொடுத்திருக்கும் புள்ளிவிவரங்களுக்கும் பட்ஜெட்டில் இருப்பதற்கும் சம்பந்தமே கிடையாது. வேலைவாய்ப்பு, கருப்புப் பணம் மீட்பு என்று பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அருகில் போனால்தான் அது கானல் நீர் என்று தெரியும். பொய்களால் திரிக்கப்பட்ட, தெளிவற்ற தகவல்களை பட்ஜெட் அளித்திருக்கிறது.

தமிழகம் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களை பாஜக தொடர்ந்து புறக்கணிக்கிறது. அதை நிறுத்திவிட்டு, கூட்டாட்சித் தத்துவத்தை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும். இந்தியாவின் பலமே அதன் பன்முகத்தன்மைதான். அதை உணர்ந்து மாநிலங்களை மதித்து நடக்கவேண்டும். அதை விடுத்து, ஒரே நாடு என்று சொல்வது சரியல்ல. இது தொடர்ந்தால் பாஜகவின் போக்கை எதிர்த்து ஸ்டாலின் தலைமையில் உறுதியுடன் போராடுவோம்.

உதயநிதி இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்றிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மகிழ்ச்சியாகவே பார்க்கிறோம். ஏனெனில் உதயநிதி இந்தத் தேர்தலில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வாக்கு சேகரித்திருக்கிறார். திமுக வெற்றியில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். இன்னொன்று திமுகவில் எதுவும் திணிக்கப்படவில்லை.

முரசொலி அறக்கட்டளையில் இருந்தபோதே, கட்சிக் கூட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் தொடர்ச்சியாகப் பங்கெடுத்தவர் உதயநிதி. இந்தத் தேர்தலில் தன்னை, தன்னுடைய பணியை நிரூபித்தவர். முன்பு ஸ்டாலின் இளைஞரணித் தலைவராகப் பொறுப்பேற்றபோது எப்படி கட்சிக்குள் புது ரத்தம் பாய்ச்சப்பட்டதோ, அதேபோல இப்போதும் நிகழ்ந்துள்ளது. நிச்சயம் உதயநிதியின் தலைமையில் கட்சி, மேலும் கிளை விரித்து, தழைத்தோங்கும்.

தேர்தலில் வெற்றிக்கு உதவிசெய்தார் என்ற ஒற்றைக் காரணத்துக்காக ஒருவரை, மாநிலத்தின் முக்கியக் கட்சியுடைய தலைமைப் பொறுப்பில் அமர்த்துவது சரியா?
நீங்கள் அனைவருமே அந்த காரணத்தை மட்டுமே பார்க்கிறீர்கள். வசதியாக அவர் கட்சிக்கு செய்த மற்ற விஷயங்களை மறந்துவிடுகிறீர்கள். உதயநிதி எத்தனை கட்சிக் கூட்டங்களில் பங்கெடுத்தார், பேசினார், கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார், நிர்வாகிகளுடன் கலந்து பேசினார் என்பது தெரியுமா?

உங்களுக்குத் தெரியவில்லை என்பதாலோ, கட்சியில் இருந்து வெளியே சொல்லவில்லை என்பதாலோ, அது நடக்கவில்லை என்று அர்த்தம் ஆகாது. பகலில் நட்சத்திரங்கள் தெரிவதில்லை என்பதால் நட்சத்திரங்களே இல்லை என்று நீங்கள் சொல்லிவிட முடியாது. இந்தப் பதவி கொடுத்ததால் கவனித்துப் பார்க்கிறீர்கள்.

என்னதான் சொன்னாலும் வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு அதிகமாக ஒலிக்கிறதே?
மருத்துவரின் மகன் மருத்துவரானால் கேள்வி கேட்பீர்களா? வழக்கறிஞரின் மகன் வழக்கறிஞரால் தவறா? தகுதியில்லை என்றால் நீங்கள் தாராளமாகக் கேள்வி கேட்கலாம். அத்தனை தகுதியும் இருக்கிறபோது என்ன பிரச்சினை? பிறப்பினால் வருவதல்ல தகுதி; கட்சிக்கு ஆற்றிய பணியால் வருவது.
இதே குற்றச்சாட்டைத்தான் ஸ்டாலின் மீதும் வைத்தீர்கள். இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டே அர்த்தமில்லாதது. ஆதாரமற்றது. உதயநிதி கடந்த வந்த பயணத்தைப் பாருங்கள். அவருடைய உழைப்புக்கும் பயணத்துக்கும் கிடைத்திருக்கும் வெற்றி இது.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x