Published : 19 Jul 2019 07:19 AM
Last Updated : 19 Jul 2019 07:19 AM

கடும் கூட்ட நெரிசல்; பக்தர்கள் பெரும் அவதி: அத்திவரதரை தரிசிக்க 6 மணி நேரம் காத்திருப்பு; முதியோர் ஏராளமானோர் தரிசிக்க முடியாமல் திரும்பினர்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று பெருமளவு மக்கள் திரண்டனர். இதனால் கோயிலைச்சுற்றி கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் ஆனது. ஏராள மானோர் தரிசிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோயிலில் அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வருகிறது. 18-ம் நாளான நேற்று அவர் கத்திரிப்பூநிறப் பட்டாடையில் காட்சி அளித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இதனால் வரதராஜ பெருமாள் கோயிலின் 4 மாட வீதிகளிலும் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பொது தரிசனம் செல்லும் வழியில் கிழக்கு கோபுரத்தைத் தாண்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின் றனர். கோயிலுக்குள் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீஸார் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, பக்தர்களை அனுப்பி வைத்தனர். இதனால் பொது தரிசனத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய 6 மணி நேரம் ஆனது.

முதியோர் செல்லும் வரிசையில் அதிக எண்ணிக்கையில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் திரண்டதால் அங்கும் பெரும் நெரிசல் ஏற்பட்டது. அவர்கள் சாலைகளில் வரிசையில் நின்றதால் கிழக்கு கோபுரம் பகுதியின் அருகே காஞ்சிபுரம் - செங்கல் பட்டுச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டது. முதியோர் வரிசையில் சென்றவர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய 3 மணி நேரம் காத்திருந்தனர்.

காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டதால் மினி பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள், ஆட் டோக்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் பலர் வரதராஜ பெருமாள் கோயி லில் இருந்து ரங்கசாமி குளம் வரை நடந்தே வந்தனர்.

பலர் நீண்ட நேரம் நிற்க முடியாம லும், வெயிலில் நின்றதாலும் சோர்வடைந் தனர். இவர்களில் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அவர்கள் மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

முக்கிய பிரமுகர்கள் செல்லும் பகுதி யில் பலர் அனுமதிச் சீட்டு இல்லாமல் உள்ளே நுழைய முயன்றதால் அங்கும் நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் பலரை தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீஸார் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் தொடர்ந்து உள்ளே அனுமதித்ததாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலைச் சுற்றி பக்தர்கள் குவிந்ததாலும், பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு, சாலைகளில் வரிசையில் நின்றதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர்.

கூட்ட நெரிசலைப் பார்த்து கைக்குழந்தையுடன் வந்தவர்கள், முதியோர் ஏராளமானோர் அத்திவரதரை தரிசிக்காமலேயே திரும்பிச் சென்றனர்.

மூலவர் தரிசனம் ரத்து

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வெளியிட்ட அறிக்கையில், ‘அத்திவரதரை தரிசிக்கும் பொதுமக்கள் அனைவரும் ஜூலை 19-ம் தேதி முதல் விழா முடியும் வரை மேற்கு கோபுரம் வழியாக வெளியேறிவிட வேண்டும். அவர்கள் மூலவர் சந்நிதிக்கு செல்ல அனுமதி கிடையாது. முக்கிய பிரமுகர்கள் தரிசனம் மாலை 6 மணியுடன் நிறுத்தப்படும். அதன் பின்னர் மாலை 6 முதல் 10 மணி வரை ரூ.300 கட்டணத்தில் ஆன்-லைன் மூலம் டிக்கெட் பெற்று பொதுமக்கள் தரிசனம் செய்யலாம். இதில் ஒரு நாளைக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x