Published : 18 Jul 2019 05:18 PM
Last Updated : 18 Jul 2019 05:18 PM

ராமேஸ்வரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி: ஊக்குவிக்கும் முன்னாள் மாணவர்கள்

அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு கல்வி உதவி வழங்கும் ஆட்சியர் கொ. வீரராகவ ராவ்
ராமநாதபுரம்

அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ராமேஸ்வரத்தின் முன்னாள் மாணவர்கள் தோற்றுவித்த விழுதுகள் என்ற அமைப்பு ஆண்டுதோறும் கல்வி உதவிகளை வழங்கி வருகிறது.

வறட்சிக்குப் பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் தொழில் வளர்ச்சி, கல்வி நிறுவனங்கள், மருத்துவம், அடிப்படை வசதி என அனைத்திலும் பின்தங்கிய மாவட்டமாக இருந்து வந்த நிலையில் நடப்பாண்டில் 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் 98.48 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாவது இடமும், 12-ம் வகுப்பு தேர்வில்  92.30 சதவீத தேர்ச்சியுடன் 11-ம் பிடித்து கல்வியில் முன்னணி வகித்த பல மாவட்டங்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்று சாதனை படைத்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளும் பல சாதனைகள் புரிந்துள்ளன. அவற்றுள் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியும் ஒன்று.

ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி 1955-ல் ராமநாதபுரம் மன்னர் சண்முக ராஜேஸ்வர சேதுபதியால் தானமாக வழங்கப்பட்ட இடத்தில் தொடங்கப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு வைர ஆண்டு விழாவைக் கொண்டாடியது. 1985-86ம் ஆண்டு இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் இணைந்து 'விழுதுகள்' என்ற அமைப்பினை ஏற்படுத்தி இதன் மூலம் ராமேஸ்வரம் தீவில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களை எடுக்கும் மாணவர்களை ஊக்குவிக்கவும், உயர் கல்விக்காகவும் கல்வி உதவிகளை வழங்கி வருகின்ற 
ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழுதுகள் அமைப்பின் சார்பாக கல்வி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தலைமை வகித்தார்.

விழுதுகள் அறக்கட்டளைத் தலைவர் மோகன், பள்ளியின் உதவித் தலைமை சுந்தர் , வட்டாட்சியர் அப்துல் ஜப்பார், ராமேசுவரம் சரக கண்காணிப்பாளர் மகேஷ் மற்றும் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவ ராவ் பேசியதாவது:
 
"ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி வைர விழா கொண்டாடிய பாரம்பரியம் மிக்க பள்ளிகளில் ஒன்று. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு முன் மாதிரிப் பள்ளியாக எடுத்து காட்டும் வகையில் இப்பள்ளி வளர்ந்து வருகிறது. மாணவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றும் சக்தி பெற்ற வல்லமையாளர்கள். மாணவர்கள் உளத்தூய்மையுடன் எல்லாவற்றையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்", என்றார்.

தொடர்ந்து 10-ம்  வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசும், கல்வி உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.

-எஸ். முஹம்மது ராஃபி

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x