Published : 17 Jul 2019 03:27 PM
Last Updated : 17 Jul 2019 03:27 PM

நீட் புதிய மசோதா; இந்தக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்: ஸ்டாலின்

ஏழரைக் கோடி மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற சட்டப்பேரவைக்கு உள்ள அதிகாரத்தை அதிமுக அரசு செய்யத் தவறி விட்டது. நீட் பிரச்சினையில் இந்தக் கூட்டத் தொடரிலேயே புதிய சட்ட மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

நீட் தேர்விற்கான புதிய சட்ட மசோதா குறித்தும், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் சட்டப்பேரவையில் இன்று ஸ்டாலின் பேசியதாவது:

“மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று இந்த சட்டப்பேர்வையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களை 22-09-2017 அன்றே திருப்பி அனுப்பிவிட்டோம் என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் ராஜேஷ் எஸ்.வைத்தியா நேற்றைய தினம் உயர் நீதிமன்றத்தில் தெளிவாக தெரிவித்திருக்கின்றார்.

மேலும் இந்த இரண்டு மசோதாக்களையும் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது. இந்த அறிக்கையை உயர் நீதிமன்றத்திற்கும் தெரிவித்திருக்கின்றார்.

எனவே, அரசியல் சட்டம் 201-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் ஒரு மசோதாவைவித்ஹெல்ட்’ செய்திருக்கிறேன் என்று சொன்னால் அது நிராகரிப்பதுதான்.

மசோதாக்களை மக்கள் பிரதிநிதிகள் நிறைந்த சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்புவதால் சட்டப்பேரவையின் இறையாண்மை கருதி நிராகரிப்பு என்ற வார்த்தை இடம் பெறாமல். வித்ஹெல்ட் என்று அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அப்படி கூறப்படுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் என்னவென்றால், இதுபோன்று குடியரசுத் தலைவர் நிராகரிக்கும் மசோதாக்கள் மீண்டும் 6 மாதத்திற்குள் இந்த அவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறக்கூடிய வகையில் நாம் அனுப்பி வைத்து அந்த அதிகாரத்தை அரசியல் சட்டப் பிரிவு 201-வது பிரிவின் கீழ் இந்தப் பேரவைக்கு அளிப்பதுதான் முறை.

ஆனால், இந்த அதிகாரத்தை இந்த அரசு பயன்படுத்தாமல் இன்றைக்கு மசோதாக்களை திருப்பி அனுப்பி 21 மாதங்களுக்கு மேலாகி இருக்கின்றது. நாங்கள் குடியரசுத் தலைவரிடம் காரணம் கேட்டிருக்கின்றோம் என்று சட்ட அமைச்சர் இதே அவையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

அந்தக் கடிதத்தை இந்த அவையில் இதுவரை அவர் வைக்கவில்லை. மசோதாக்கள் அரசிடமிருந்து திரும்பி வந்ததற்குப் பிறகு கடிதம் எழுதி என்ன பயன் என்பது தான் என்னுடைய கேள்வி.

எனவே, காரணம் கேட்டு ஒரு கடிதத்தை எழுதி ஏழரைக் கோடி மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்ற சட்டப்பேரவைக்கு உள்ள அதிகாரத்தை நீங்கள் முறையாக செய்யத் தவறிவிட்டீர்கள் என்பதை நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றேன்.

எனவே நான் இப்பொழுது கேட்க விரும்புவது இதே அவையில் மீண்டும் இன்னொரு முறை புதிதாக இரண்டு மசோதாக்களை இது சம்பந்தமாக நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பீர்களா? என்பதை நான் அரசிடம் கேட்கிறேன்.

இங்கு பல விளக்கங்களை சட்டத்துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார். பல கடிதங்கள் எழுதி இருக்கின்றீர்கள் நான் மறுக்கவில்லை. அதனை தேதி வாரியாக ஆதாரத்தோடு நீங்கள் செல்கின்றீர்கள். ஆனால், 2 ஆண்டு காலமாக அதற்கு தரவேண்டிய அழுத்தம், எத்தனையோ முறை முதல்வர் டெல்லிக்கு சென்று இருக்கின்றார். அப்பொழுது ஏன் இது குறித்து அழுத்தம் தரவில்லை? என்பது ஒரு கேள்வி.

அடுத்ததாக, நேற்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் தாக்கல் செய்திருக்கக்கூடிய வாசகம் - அவர்rejectசெய்யவில்லை என்ற வார்த்தை இல்லை என்று சொல்கின்றார்.

அதில் ஒன்றை நான் படித்துக் காட்ட விரும்புகின்றேன். Both the learned counsel for Union of India submitted that on the clarification sought for, as to whether bills were withheld or rejected, Under Secretary (Judicial & PP), Ministry of Home Affairs, has stated that bills have been rejected.என்று தெளிவாக இருக்கின்றது.

எனவே அந்த வார்த்தை இருக்கின்றதுஇல்லை என்று சட்ட அமைச்சர் இங்கு சொல்கின்றார். 201 பிரிவின்படி, மீண்டும் நாம் ஏற்கெனவே நிறைவேற்றிய சட்ட மசோதாக்கள் பற்றி வலியுறுத்துவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் 2 வருடமாக அதைப்பற்றி கவலைப்படாமல் இருந்து விட்ட காரணத்தினால்.

அதனால் இப்பொழுதும் நான் கேட்கின்றேன் இப்போதாவது நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். நம்முடைய மாணவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை இது. ஆகவே இந்த நீட் பிரச்சினையைப் பொறுத்தவரையில் இப்பொழுது புதிய இரண்டு மசோதாக்களை இன்னும் மூன்று நாட்கள் உள்ள இந்தக் கூட்டத்தொடரிலேயே அந்த மசோதாக்களை நிறைவேற்றி மீண்டும் வலியுறுத்தக் கூடிய வகையில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்குமா? என்பதுதான் என்னுடைய கேள்வி.

விளக்கம் கேட்டிருக்கின்றோம் என்ன பிரச்சினை என்பது குறித்த செய்தி வந்ததற்குப் பிறகு முடிவெடுப்போம் என்று அமைச்சர் சொல்லியிருக்கின்றார். அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் இதுவரையில் 2 வருடமாக நீங்களும் கடிதம் எழுதிக்கொண்டிருக்கின்றீர்கள்.

நேரடியாக அழுத்தம் தந்ததாக இங்கே சொல்லியிருக்கின்றீர்கள். அப்பொழுதே காரணத்தை சொல்லியிருக்க வேண்டும் ஆனால், இதுவரையில் காரணத்தை சொல்லவில்லை. மீண்டும் அதே நிலை நீடித்தால் என்ன நிலை? அதுதான் என்னுடைய கேள்வி.

மத்திய அரசிடம் இருந்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கின்றார்கள். தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் உங்களுடைய வழக்கறிஞர்கள் ஆஜராகி இருக்கின்றார்களா? அப்படி ஆஜராகியிருந்தால் இந்தப் பிரச்சினை உங்களுக்கு முழுமையாகத் தெரிந்திருக்கும். அந்த நிலையில் நீங்கள் ஆஜராகியிருக்கின்றீர்களா என்பதுதான் என்னுடைய கேள்வி”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x