Published : 16 Jul 2019 10:36 AM
Last Updated : 16 Jul 2019 10:36 AM

கதைக்குத் தக்க வடிவமே சிறப்பு!- எழுத்தாளர் சூத்ரதாரி (எ) எம்.கோபாலகிருஷ்ணன்

கா.சு.வேலாயுதன்

கோவை கோவில்மேடு பகுதியில் குடியிருக்கும் இவருக்கு  மனைவி, இரண்டு குழந்தைகள். அரசு இன்சூரன்ஸ் நிறுவனத்தில்  பணிபுரியும் கோபாலகிருஷ்ணனை சந்தித்தோம்.

"நான் பிறந்தது திருப்பூர் நெசவாளர் காலனி. அப்பாவுக்கு கைத்தறி நெசவுதான் தொழில்.  உள்ளூர் ஆரம்பப் பள்ளி, திருப்பூர் ஆண்டகை மேல்நிலைப் பள்ளியில்  கல்வியை முடித்து, சிக்கண்ணா கலைக் கல்லூரியில் பி.காம். படித்தேன். எம்.காம். படித்துக் கொண்டிருந்தபோதே, இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டது. வீட்டில் அம்மா நிறைய படிப்பார். அந்தப் பழக்கம் எனக்கும் தொற்றிக்கொண்டது.

கவிதையில் தொடங்கிய எழுத்து...

பத்தாம் வகுப்பில் தமிழாசிரியர் குணசேகரன்,  கண்ணதாசன், மு.மேத்தா, வைரமுத்து என  மேற்கோள் காட்டி, கவிதை மழை பொழிவார். அதனால் கவிதை மீது ஆர்வம் ஏற்பட்டது. அவ்வப்போது கவிதை எழுதுவேன். எங்கள்  ஊர்க்காரர்தான் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன். என் கவிதைகளைப் படித்துவிட்டுப் பாராட்டுவார்.

ஒருமுறை அவர் செகந்தராபாத்தில் இருந்தபோது,  ஒரு கவிதை எழுதி அவருக்கு அனுப்பினேன். எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த மூன்று வேப்பமரங்களை ஒவ்வொன்றாக வெட்டி, விறகுக்குப் பயன்படுத்தினர். மூன்றாவது மரம் வெட்டும்போது எனக்குள் வெறுமை குடிகொண்டது. அதைத்தான் கவிதையாக எழுதியிருந்தேன். அதைப் படித்த  சுப்ரபாரதி மணியன், கணையாழிக்கு அனுப்பி, அது பிரசுரமானது. அதுதான் நான் எழுதி, பிரசுரமான முதல் கவிதை.

தொடர்ந்து, 2, 3  ஆண்டுகள் கவிதைகளே எழுதினேன். அந்த சமயத்தில், தமிழில் நாவல்களே இல்லை என்ற சர்ச்சையைக்  கிளப்பியிருந்தார் ஜெயமோகன். இதற்காக நாவல் என்ற ஒரு நூலையே எழுதியிருந்தார். அதை வாசித்துவிட்டு, நாவல்களை தேடித்தேடிப்  படித்தேன். ஜெயமோகன் சொன்னதுபோல, பல்வேறு மொழி நாவல்களை வாசிக்கும்போது,  தமிழ் நாவலுக்குள் இருந்த வெற்றிடம் புலப்பட்டது.

ஜெயமோகன் அறிமுகமாகி, அவரிடம் இதைப்பற்றி நிறைய விவாதிப்போம். அப்போது நான் எழுதிய கவிதைகளையும் தருவேன். அவர் என்னை மட்டுமல்ல, தான் சந்திக்கும் நண்பர்களை எல்லாம்  நாவல் எழுதுமாறு  வற்புறுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்.
அந்த உந்துதலில்தான் நான் எழுதிய முதல் நாவல் `அம்மன் நெசவு'.  தமிழினி வசந்தகுமாரன் வெளியிட்டார். ` சொல் புதிது'  என்ற இலக்கிய இதழில் நான் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தேன். அன்றைய காலகட்டத்தில் ஒரு பேட்டி, இரண்டு சிறுகதைகள், சில கவிதைகள் உள்ளடங்கியதாகவே சிறு பத்திரிகைகள் இருந்தன. காலச்சுவடு மட்டும் அவற்றிலிருந்து சற்றே வேறுபட்டிருந்தது.
இதை உடைத்து, வெளி அரங்கிலான பார்வைகள், பிற அறிவுத் துறையில் கிடைக்கும் தேடல்கள், இலக்கியப் படிமங்கள், மனித உளவியல் உள்ளிட்டவற்றையெல்லாம் உள்ளடக்கமாகக் கொண்டு `சொல் புதிது'  இதழை வெளியிட்டோம்.  8 இதழ்கள் என் பொறுப்பில் வந்தது. 

அதில் ஏற்பட்ட அனுபவம், என் எழுத்துக்கு மேலும் உரமூட்டியது. அதுதான் `அம்மன் நெசவை'  எழுத வைத்தது"  என்று கூறும் எம்.கோபாலகிருஷ்ணன்,  இதுவரை 3 நாவல்களையும், பிறிதொரு நதிக்கரை, முனிமேடு, வாள்வெள்ளி, சக்தியோகம் ஆகிய சிறுகதை தொகுப்புகளையும், குரல்களின் வேட்டை என்ற கவிதை நூலையும், நினைவில் நின்ற கவிதைகள் என்ற கட்டுரை நூலையும் வெளியிட்டுள்ளார்.

1999-ல் கதா விருது, 2001-ல் தமிழ்நாடு அரசின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது, 2018-ல் சிறந்த நாவலுக்கான தஞ்சை பிரகாஷ் விருது ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அவரிடம் பேசினோம்.
நெசவு செய்யும் பெண்களின் குரல்கள்!

"எங்கள் குடும்பத்தில் நெசவுத் தொழிலில் ஆண்கள் இருந்தாலும்,  30 சதவீதம் மட்டுமே  ஆண்கள் உழைக்கிறார்கள். பெண்களோ சமையல் முடித்துவிட்டு,  முழுமையாக  பாடுபடுகிறார்கள். ஆண்கள் வெளியூர், சந்தை, சினிமா என்று செல்லும்போதுகூட,  தறிக் குழியில் இறங்கி பெண்கள் நெசவு செய்கிறார்கள். திருப்பூர் பெரும் நகரமாகி,  பனியன் தொழில் கொடிகட்டிப் பறந்தபோதும், அதிலும் பெண்களே மிகுதியாக உள்ளனர்.

ஒவ்வொரு நெசவாளர் வீட்டிலும், தறி சப்தத்தை தாண்டி பெண்களின் குரல் ஒலிக்கிறது. அங்கு  ரகசியம் என்பதே இருப்பதில்லை. அந்தக்  குரல்கள் வேதனை, விசும்பல்களை வெளிப்படுத்தும். பிறகு ஆசுவாசம் கொண்டு, ஆணுடன் சமாதானமாகப் போகும். அதேபோலத்தான், ஒவ்வொரு பனியன் நிறுவனத்திலும் இயந்திரங்களின் சப்தங்களை மீறி, பெண் தொழிலாளர்களின் அழுகை, விசும்பல், வேதனை,  துயரம், சந்தோஷம் கலந்து ஒலிக்கும். அதுவே என் மொழிநடைக்கும், எடுத்துக் கொள்ளும் பாத்திரங்களுக்கும் வலுசேர்க்கிறது. அதேபோல, சுஜாதா, தி.ஜானகிராமன் எழுத்துகளும் என்னை செம்மைப்படுத்தின.

நகலும்... அசலும்...

1995-க்குப் பிறகு வந்ததுதான் நவீனத்துவம், பின்நவீனத்துவம் எல்லாம். இப்படியான பரிசோதனைகளில், கதைகளை கலைத்துப் போட்டு, மேற்கத்திய பாணியில் விளையாடுவது, வழக்கமான வடிவத்தை விடுத்து, வேறு வடிவத்தை மாற்றி எழுதுவது போன்ற விஷயங்களில் எனக்கு உடன்பாடில்லை. கதைக்கு தகுந்த வடிவம்தான் வர வேண்டுமென தவிர, வடிவத்துக்காக ஒரு கதையை எழுத்தாளன் எழுதுவதில்லை. வாசகனும் அதை விரும்புவதில்லை" என்றவரிடம், "சூத்ரதாரி மற்றும் அசல் பெயர்  என இரண்டிலும் எழுதுவது ஏன்?" என்று கேட்டோம்.

"சுப்ரபாரதிமணியன் சூத்ரதாரி என்ற சிற்றிதழ் வெளியிட்டார்.  இது இரு இதழ்களோடு நின்றுபோனது. 1995-ல் யூமா வாசுகி என்னிடம் ஒரு கதை கேட்டபோது, `விளிம்பில் நிற்கிறார்கள்' என்ற கதையைக்  கொடுத்தேன். அவர், `எம்.கோபாலகிருஷ்ணன் என்ற பெயர் நீளமாகத் தெரிகிறதே, வேறு புனைப் பெயர் இல்லையா?' என்று கேட்டார். 

அப்போது என் கையில் சூத்ரதாரி புத்தகம் இருந்தது. அதையே புனைப் பெயராக வைத்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார். என் மகன் வளர்ந்த பின், அசல் பெயரிலேயே எழுதுமாறு கூறினான். நண்பர்களும் அதையே சொல்ல,  இப்போதெல்லாம் அசல் பெயரில்தான் எழுதுகிறேன்" என்றார் சிரித்துக்கொண்டே சூத்ரதாரி (எ) கோபாலகிருஷ்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x