Last Updated : 06 Jul, 2015 08:59 AM

 

Published : 06 Jul 2015 08:59 AM
Last Updated : 06 Jul 2015 08:59 AM

பூச்சிக்கொல்லி விவகாரத்தை தொடர்ந்து 29 சந்தைகளின் காய்கறி மாதிரிகள் சோதனை: வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் தகவல்

தமிழக காய்கறிகளில் பூச்சிக் கொல்லிகளின் அளவு கூடுதலாக இருப்பதாக கேரளம் குற்றம்சாட்டி வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 29 சந்தைகளில் இருந்து காய்கறிகளின் மாதிரிகள் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப் படுவதாக தமிழக வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கே.ராமசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக கே.ராமசாமி, ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தேசிய அளவில் எப்போதும் போல் 7 ஆயிரம் காய்கறி மாதிரிகள் எடுக்கப்பட்டு தேசிய தரச்சான்று பெற்ற 24 சோதனைக் கூடங்களில் சோதனை நடக்கிறது. கேரளத்தின் குற்றச்சாட்டுக்கு பிறகு, நாம் சோதித்து பார்த்ததில் எந்த காய்கறியிலும் தவிர்க்க வேண்டிய பூச்சிக் கொல்லிகள் இல்லை என்பதை உறுதி செய்துள்ளோம்.

பூச்சிக் கொல்லி தெளித்து 15 நாட்கள் கழித்துதான் காய்கறி களைப் பறிக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தி யுள்ளோம். எனவே காய்கறி களில் பூச்சி கொல்லிகள் தங்குவதற்கு வாய்ப்பு இல்லை. இடைத்தரகர்கள் நடுவில் ஏதாவது செய்கிறார்களா என்பதை அறிய சந்தைகளிலிருந்து மாதிரிகள் எடுத்து சோதித்தோம். 700 மாதிரிகளில் 3 காய்கறிகளில் பூச்சிக்கொல்லிகளின் அளவு சற்று அதிகமாக இருந்தது.

இதை கட்டுப்படுத்த தமிழகத் தில் அதிக அளவில் காய்கறி கள் விற்கப்படும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஒட்டன்சத்திரம், தேனி உள்ளிட்ட 29 சந்தை களில் சோதனை நடத்த ஆரம்பித் துள்ளோம். இடைத்தரகர்களின் தலையீட்டை குறைக்கவும் முயற்சி எடுத்து வருகிறோம்.

தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகள் சந்தைகளில் உள்ள னவா என்றும் சோதனை செய்து வருகிறோம். ஆர்கானிக் என்ற பெயரில் பல கலப்பட பூச்சிக் கொல்லிகள் வருகின்றன. வளர்ச்சி ஊக்கிகள் இருக்கும் பூச்சிக் கொல்லிகளை மட்டுமே அனுமதிக் கிறோம். எங்காவது ஒன்றிரண்டு தவறுகள் நடைபெறலாம். அப்படி அவை கண்டுபிடிக்கப்பட்டால் மத்திய அரசே நடவடிக்கை எடுக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கரும்பில் மாவு பூச்சிகள் பரவாமல் இருக்க கரும்பு தோட்டங்களையே எரித்துள்ளோம். அதன் பிறகு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பிரச்சினை வரும்போது இது போன்ற பல முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x