Published : 15 Jul 2019 12:48 PM
Last Updated : 15 Jul 2019 12:48 PM

அப்பீலில் ஆயுள் தண்டனை கொடுத்தாலும்சரி, மன்னிப்பு மட்டும் கேட்கமாட்டேன்: வைகோ ஆவேசம்

அப்பீலில் ஆயுள் தண்டனை கொடுத்தாலும்சரி, மன்னிப்பு மட்டும் கேட்கவே மாட்டேன் என்று வைகோ ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேச துரோக வழக்கு 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டுச் செல்ல மாட்டேன் என்று யார் சொன்னது? அப்பீல் செய்வேன். அதில் ஆயுள் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன். மன்னிப்பு மட்டும் கேட்கமாட்டேன். இப்போதும் சொல்கிறேன். விடுதலைப் புலிகளை ஆதரிப்பேன்.

நான் தண்டனைக்கு அஞ்சாதவன்; சிறைக்குச் செல்லத் தயங்காதவன். ஜாமீன் போடாதவன் என்பது அத்தனை பேருக்கும் தெரியும். இனப்படுகொலையை நடத்தியவர்கள் என்றும் தப்பிக்க முடியாது. காங்கோவில் ராணுவத் தளபதியாக இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியவர் பாஸ்கோ நிட்டகொண்டா. 2002-2003 இல் நடந்த இனப்படுகொலைக்குக் காரணமானவர் என்று இவர்மீது நீதிமன்றம் தண்டனை அளித்தது. 6 ஆண்டுகள் சரணடையாமல் இருந்தவர், பிறகுதான் சரணடைந்தார். இதே நிலை ராஜபக்சவுக்கும் வரும். அவர் தப்பவே முடியாது.

மத்திய அரசு இந்தியாவையே இந்தி மாநிலத் தன்மைக்குக் கொண்டு வரநினைக்கிறது. சிறுபான்மையின மக்களை வேரோடு வெளியேற்ற வேண்டும் அல்லது அழிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு மாகாணத்துக்கு மாகாணம் பசுக்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்கிறது. 

முதற்கட்டமாக உத்தரப் பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் இவை அமைக்கப்படுமாம். அதில் ஆயிரக்கணக்கான பசுக்களை அங்கு வைத்துப் பாதுகாக்க வேண்டுமாம். இதை மத்திய அரசின் துணை அமைப்பான ராஷ்டிரிய காமதேனு ஆயோக் அறிவித்துள்ளது. இது அயோக்கியத்தனமான அறிவிப்பு. 

இதேபோல அஞ்சல்  துறை தேர்விலும் நம் பிள்ளைகள் வேலைக்குச் செல்லமுடியாது. 2016-லேயே தமிழர்கள் 25% பேர்தான் அதில் தேர்வாகியுள்ளனர். இனி தமிழில் தேர்வு கிடையாது என்றால், தமிழ்ப் பிள்ளைகள் யாரும் வேலை பார்க்கமுடியாது. இந்தியாவை உடைக்கவேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு வழக்கு போட்டாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன் என்று ஆவேசமாகப் பேசினார் வைகோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x